ADDED : ஏப் 24, 2021 01:27 PM

* புத்திரதோஷம் தீர எளிய பரிகாரம் சொல்லுங்கள்
டி.தட்சண்யா, நுங்கம்பாக்கம், சென்னை
சிவன் கோயிலிலுள்ள சோமாஸ்கந்தருக்கு திங்கட் கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்தால் பலனளிக்கும்.
குறிப்பிட்ட தெய்வத்தை குறிப்பிட்ட நாளில் வழிபட்டால் தான் பலன் கிடைக்குமா
கே. சிவன்யா, உடுமலை
இல்லை. எல்லா நாட்களிலும் எல்லா தெய்வங்களையும் வழிபடலாம். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தெய்வத்திற்கு அபிஷேகம், அலங்காரம் செய்வது நம் தேவைக்காகவே.
* பூஜையின் போது கலசதீர்த்தம் கட்டாயம் இருக்கணுமா?
பி.மதுவந்தி, பெங்களூரு
யாகம், ஹோமம், பூஜை நடத்தும் போது கலசதீர்த்தம் அவசியம். எந்த தெய்வத்தைக் குறித்து பூஜை நடக்கிறதோ அவர் கலச தீர்த்தத்தில் எழுந்தருளியிருப்பார்.
சந்திர தரிசனம் செய்வதால் நன்மையா?
எல். பிரகாஷினி, உடன்குடி
ஜாதக கோளாறு, கிரக தோஷம், கிரகப்பெயர்ச்சி, நோய் தொற்று என நம்மை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. இவற்றிலிருந்து பாதுகாக்கும் சக்தியை மூன்றாம்பிறையன்று சந்திரன் அளிக்கிறார்.
* பிரதோஷ பூஜையில் சிவ புராணம் படித்தால் நன்மை அதிகமாமே!
வி.அன்விகா, கம்பம்
பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு இடையில் சிவன் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். இதையே, 'தில்லையுட்கூத்தனே... தென்பாண்டி நாட்டானே... அல்லல் பிறவி அறுப்பானே'' என சிவபுராணம் சொல்லுகிறது. இதைப் படித்தால் நன்மை அதிகம்.
சுப நிகழ்ச்சி, அசுப நிகழ்ச்சி இரண்டிலும் சங்கு ஊதலாமா...
சி.மித்ரன், திண்டிவனம்
சங்கு ஒரு மங்கள இசைக்கருவி. சுபநிகழ்ச்சி, கோயில் வழிபாடு, வீட்டு பூஜை, திருமணம், காதுகுத்துதல், இறப்பு என அனைத்து நிகழ்வுகளிலும் சங்கு ஊதலாம்.
* ஒருவர் மறுபிறவி எடுத்திருப்பின் அவருக்கு திதி கொடுப்பது சரியா?
எம்.ஆர்த்தி, கடையநல்லுார்
நமக்கு தெரிந்தது ஒருவரின் இறப்பு மட்டுமே. மறுபிறப்பு பற்றி யாருக்கும் தெரியாது. இதைத் தான் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவாக சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். ஒருவர் மறுபிறவி எடுத்திருந்தாலும் திதி, தர்ப்பணம் செய்வதால் அந்த ஆன்மாவுக்கு நன்மை உண்டாகும்.
