
வளைகாப்பு நடத்துவது வீண் செலவா...
பி.வினோதினி, ஸ்ரீபெரும்புதுார்
இல்லை. வாரிசை சுமக்கும் பெண்மையைப் போற்றும் நிகழ்ச்சி இது. தாய், சேய் நலனுக்காக நடத்துவது அவசியம்.
குருவியின் கூட்டை கலைத்தால் பாவமா...
கே.பவித்ரன், ஸ்ரீமுஷ்ணம்
ஆம். கூடு கட்டுவது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கவே. குஞ்சுகள் வளர்ந்ததும் பறவைகள் பறந்து விடும். இந்த சமயத்தில் கூட்டைக் கலைப்பது பாவம் அல்லவா...
* பூஜை புனஸ்காரம் என்கிறார்களே...
எஸ்.அஸ்வினி, மதுரை
முதல்நாள் சூட்டிய பூக்களை எடுத்து விட்டு சுத்தம் செய்து மீண்டும் வழிபாட்டைத் தொடங்குவது புனஸ்காரம்.
* இந்தியா நலம் பெற ஒரு பாடல் சொல்லுங்களேன்.
ஆர்.சுஜாதா, திருப்பூர்
தினமும் நீராடி நெற்றியில் திருநீறு பூசி சுவாமி முன் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள்.
வான் முகில் வழாது பெய்க; மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க; குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க;
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி; விளங்குக உலகமெல்லாம்.
* செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுகிறதே....
எம்.திவ்யா, பெங்களூரு
செவ்வாயன்று முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள். செவ்வாய் மதியம் 3:00 - மாலை 4:30 மணிக்குள் ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுங்கள்.
* பெற்றோருக்கு பிரம்மச்சாரி திதி கொடுக்கலாமா
எம்.விமல், சங்கரன்கோவில்
மனைவியுடன் திதி கொடுப்பதே நல்லது.
மந்திரத்தால் மாங்காய் விழாது என்பது ஏன்
சி.சாருலதா, மார்த்தாண்டம்
மந்திர தந்திரத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது.அதிர்ஷ்டத்தை நம்பி சோம்பேறியாக இருக்கக் கூடாது. மந்திரித்தல், நேர்ந்து கொள்ளுதல் போன்றவை துணை புரியுமே தவிர செயலை சாதித்துக் கொள்ள உதவாது.
சிந்தைக்குள் சிவனை வைத்திருப்பது அவசியமா...
ஆர்.ஆருத்ரா, சிவகங்கை
அவசியம் தான். ஒரு விஷயத்தை தவறு என முடிவெடுத்தால் மனம் அதை ஏற்க வேண்டும். இல்லாவிடில் மனம் வசப்படவில்லை என்பது பொருள். மனதை கட்டுப்படுத்தும் சக்தி பெற கடவுளின் அருள் நமக்கு வேண்டும்.

