தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்கள் சொல்கிறோம்!

கேளுங்கள் சொல்கிறோம்!

கேளுங்கள் சொல்கிறோம்!


ADDED : பிப் 04, 2011 02:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2011 02:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.

*நினைவு தெரிந்த நாள்முதலே நான் நல்லவனாகவே வாழ்கிறேன். ஆனால், துன்பம் என்னை வாட்டி வதைக்கிறதே. ஏன்? - பொன். எத்திராஜன், திருக்கழுக்குன்றம்

தீதும், நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி. முயற்சியும் உழைப்பும் இருந்தால் தெய்வபலம் தானாகவே உண்டாகும். நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது. அதுபோல, வெறும் பிரார்த்தனையால் மட்டும் முன்னேற்றம் உண்டாகாது. வறுமையும் துன்பமும் அகலவேண்டுமானால், நல்ல சிந்தனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் வகுத்து அதற்கான உழைப்பு இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். ''தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும்'' என்ற திருக்குறள் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது.



*வீட்டில் துளசி செடி வளர்ப்பதற்கு என்று தனி நடைமுறை எதுவும் உள்ளதா?

ரா.சங்கரநாராயணன், மதுரை

அதற்கென உயர்ந்த தொட்டியும் விளக்கேற்ற மாடமும் வைக்கவேண்டும். நல்ல மண் போட்டு அதில் துளசிச்செடியை நடவேண்டும். வீட்டு வாசலின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில் நடைபாதை விட்டு தள்ளி வைக்கவேண்டும். குளிக்காமல் தண்ணீர் விடுவது கூடாது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துளசி ஸ்தோத்தி ரங்களைப் பாராயணம் செய்வது நல்லது. மாலையில் துளசிமாடத்தில் தீபம் ஏற்றி வைப்பது லட்சுமி கடாட்சத்தை இல்லத்தில் உண்டாக்கும். சனிக்கிழமை, அமாவாசை, ஏகாதசி நாட்களில் துளசி இலையைப் பறிக்கக்கூடாது. துளசிமாடம் இருக்கும் இடத்தை விஷ ஜந்துக்களும் அண்டாது.



** ஞானிகள் கூட கடைசிக்காலத்தில் புற்றுநோயை அனுபவித்து இருக்கிறார்களே. இதற்கு ஏதேனும் தெய்வீக காரணம் உண்டா? - கண.கணேசன், திருச்சுழி


இந்த பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்துமே முற்பிறவி பலன்களேயாகும். சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமானால், நாம் செய்யும் செயல்கள் ஒன்று பாவம் அல்லது புண்ணியம் ஆகிய இரண்டின் வரையறைக்கு உட்பட்டதே. இவற்றின் பலனை 'வினை' என்று சொல்வார்கள். 'ஊழ்வினை' என்ற சொல் கூட வழக்கத்தில் இருக்கிறது. நாம் எத்தனை பிறவி எடுத்தாலும், இந்த விஷயம் பொதுவானதாகும். இப்படி பல பிறவியில் செய்கின்ற வினைத்தொகுதி வங்கி சேமிப்பு சேர்வது போல சேர்ந்து கொண்டே இருக்கும். முழுவதுமாக வினை நீங்கும் வரை நமக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு பிறவி முடிந்து மீண்டும் பிறக்கும் போது நம்முடைய வினைத்தொகுதியின் பயனை நாம் அனுபவித்துக் கழிப்பதற்காகவே பிறவி எடுக்கிறோம். ஞானியாக இருந்தாலும் பாவபுண்ணியங்களில் இருந்து தப்பிக்க முடியாது. இறுதியில் வினை முழுவதும் தீர்ந்தபின் 'முக்தி' என்னும் நிலையில் பேரின்பத்தை உயிர் அடையும். அதுவும் இறைவனின் கருணையின் வெளிப்பாடே. வைத்தியர் அறுவை சிகிச்சைமூலம் நோயைக் குணப்படுத்துவது போல இறைவன் துன்பங்களின் மூலம் நம் வினைப்பயனைப் போக்கியருள்கிறார். இதனை ஞானிகளும் புரிந்து ஏற்றுக் கொண்டதை ரமணமகரிஷி போன்றோரின் வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.



*ஜோதிடர் சொல்லும் பரிகாரப்படி குறிப்பிட கோயிலில் தான் வழிபடவேண்டுமா அல்லது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குச் சென்று வந்தால் தோஷ நிவர்த்தியாகாதா? - டி.ஆர்.கிருஷ்ணன், திருப்பூர்


ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. இன்ன தோஷத்திற்கு இன்ன தலத்தில் பரிகாரம் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினால் நம்பிக்கையோடு அதனைச் செய்யுங்கள். கண்டிப்பாகப் பயன் கிடைக்கும். நளதமயந்தி சரித்திரத்தில் கூட திருநள்ளாறு சென்று வழிபட்ட பிறகு தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் இன்பமயமானது. எல்லா கோயில்களிலும் சனீஸ்வரன் இருந்தாலும், சனிக்கே தோஷம் ஏற்பட்டு அது விலகிய தலமாக திருநள்ளாறு விளங்குவதால் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. இதேபோன்று தான் ஒவ்வொரு பரிகாரத் தலங்களும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us