
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி.
*வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்கிறார்களே...
தெய்வ அருள் இருந்தால்தான் இரண்டும் நடக்கும். திட்டமிடுதலுக்கு அடங்காத விஷயம் என்பதால் அவரவர் அனுபவத்தில் பார்த்தால்தான் புரியும் என்பார்கள்.
மயூரி, குலசேகரப்பட்டினம், துாத்துக்குடி.
*குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது ஏன்?
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதாலும், அன்புடன் பழகுபவரை விரும்புவதாலும் தெய்வத்திற்கு இணையாக குழந்தைகளை போற்றுகிறோம்.
பி.சிந்து, தமிழர் என்கிலேவ், டில்லி
*மணமக்களை வாழ்த்தும் போது கணவருக்கு எந்தப் பக்கம் பெண்கள் நிற்க வேண்டும்?
கணவருக்கு வலதுபுறமாக பெண்கள் நின்று வாழ்த்த வேண்டும்.
எம்.முத்தையா, இடுவம்பாளையம், திருப்பூர்.
*மலைக்கோயிலில் அடிபிரதட்சணம் செய்யலாமா?
எந்த கோயிலிலும் அடிபிரதட்சணம் செய்யலாம். மலைக்கோயிலில் செய்தால் இரட்டிப்பான பலன் கிடைக்கும்.
கே.சுதா, காட்டுமன்னார்கோவில், கடலுார்
*வெளியே செல்லும் போது வீட்டில் ஏற்றிய விளக்கை குளிர வைக்காமல் செல்லலாமா?
வெளியே சென்ற நேரத்தில் விளக்கின் திரி கருகி விடலாம்; அசம்பாவிதமாக தீ விபத்து நேரலாம். இதை தவிர்ப்பதற்கு கிளம்பும் முன்பாக விளக்கை குளிர்விப்பதே நல்லது.
ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
*நிறைமாத கர்ப்பிணி உக்கிர தெய்வத்தை வழிபடலாமா?
வழிபடலாம் என்றாலும் சூழ்நிலைக்கு தக்கபடி முடிவு எடுங்கள்.
செ.விஸ்வநாதன், கோமளீஸ்வரன்பேட்டை, சென்னை.
*சஷ்டியப்த பூர்த்தியும், தந்தையின் சிராத்தமும் ஒரே நாளில் வந்தால் என்ன செய்வது?
தந்தையின் சிராத்தத்தை முதலில் நடத்துங்கள். அதற்கு மறுநாள் அல்லது அடுத்த தமிழ் மாதத்தில் வரும் உங்களின் பிறந்த நட்சத்திரத்தன்று சஷ்டியப்த பூர்த்தியை நடத்துங்கள். nnn
எம்.ரீஜா, பெங்களூரு.
*கரகம் சுமந்து செல்லும் பெண்கள் அதை மற்றவரிடம் கொடுக்கலாமா?
கொடுக்க கூடாது. ஏனெனில் மற்ற பெண்கள் விரதமிருக்க நியாயமில்லை. ஆனால் உடல் நலமின்மை, தீட்டு போன்றவற்றால் கரகம் சுமக்க முடியாத நிலையில் விதிவிலக்காக மற்றவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் தலைக்கு குளித்தோ அல்லது தலையில் மஞ்சள்நீர் தெளித்தோ இருப்பது அவசியம்.

