
* உயிர் பிரியாமல் முதுமையில் வாடுபவர்களுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?
ஆர். பிருந்தா ரமணி, மதுரை
நீங்கள் எந்த மாதிரி பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. முறையான மருத்துவம், இறைவனிடம் பிரார்த்தனை இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது.
சக்கரத்தாழ்வாருக்கு பின் நரசிம்மர் இருப்பது ஏன்?
ஜி. ரகுநாதன், தாம்பரம்
பெருமாளின் கையில் இருக்கும் சக்கரத்தையே 'சுதர்சன ஆழ்வார்' என்று வழிபடுகிறோம். விஷ்ணுவின் கையிலுள்ள சக்கராயுதம் விரைந்து வந்து அடியவர் துன்பம் போக்கும் என்பது ஐதீகம். அதிலும், பிரகலாதனுக்காக ஓடோடி வந்த விஷ்ணுவின் அவசரத்திருக்கோலம் நரசிம்மர். 'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள். அதனால், உடனடியாக அருள் வேண்டி நிற்போர் சுதர்சன மூர்த்தியையும், நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுகின்றனர்.
* திருநள்ளாறு தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அணிந்திருக்கும் துணிகளை அங்கேயே விட்டு வருகிறார்களே! ஏன்?
வி.எஸ்.மணி, புதுச்சேரி
அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து ''நீலாஞ்சன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்'' என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்!
பவுர்ணமி நாளில் மட்டும் கிரிவலம் வந்தால் தான் கடவுள் அருள் கிடைக்குமா?
எஸ். ஜெகந்நாதன், குன்னூர்
திதியில் பவுர்ணமியும், கிழமையில் திங்களும் (சோமவாரம்) நட்சத்திரத்தில் கார்த்திகையும் கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி நாளில் மனோகாரகனாகிய சந்திரன், பூரணக் கலைகளுடன் இருக்கிறார். அதன் கிரணங்கள்(ஒளிக் கதிர்கள்) நம் மேனி மீது படரும் விதத்தில் மாலைப் பொழுதில் வலம் வருவது நல்லது. பவுர்ணமி மட்டுமில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் கிரிவலம் வந்தாலும் கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
** சம்பாத்தியத்தில் எத்தனை பங்கை கடவுளுக்காக செலவழிக்க வேண்டும்?
யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்
சம்பாத்தியத்தை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். ஒரு பங்கை அன்றாடச் செலவுக்கும், இரண்டாவது பங்கை கடவுள் வழிபாடு, தானதர்மம் ஆகியவற்றுக்கும், மூன்றாவது பங்கை எதிர்கால சேமிப்புக்காகவும் சேர்த்து வைப்பதே முறையானதாகும்.