
** சத்தியத்தை மீறினால் என்ன நடக்கும்? பரிகாரமும் சொல்லுங்கள்
ஜெ. ஸ்வப்னா, மதுரை
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது பொய் சொன்னால் சாப்பாடு கிடைக்காது அல்லது கிடைத்தும் உண்ண முடியாது. சத்தியத்தை மீறுவதும் ஒரு வகை பொய் தான். இதற்குப் பரிகாரம் எல்லாம் கிடையாது. பிறருக்கு நன்மை விளைவிக்கும் சூழலில் அதாவது பிறரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் சத்தியத்தை மீறுவது, பொய்யுரைப்பது போன்றவை ஏற்புடையது என்கிறார் திருவள்ளுவர். 'பொய்மையும் வாய்மையிடத்து' என்பது அவரது பொய்யாமொழி.
* கிரகப் பெயர்ச்சியால் உண்டாகும் பலன்கள் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் பொருந்துமா? அல்லது நமக்கு மட்டும் தானா?
எஸ்.கவுதம், கவுண்டம்பாளையம்
மதம் என்ற வேறுபாட்டைக் கடந்து பார்த்தால் எல்லோருக்கும் இறைவன் ஒருவன் தான். வேறு வேறு பெயர்களில் வழிபட்டாலும், இறைவனிடம் பக்தி செலுத்துவது என்ற நிலையில் உலகிலுள்ள மக்கள் அனைவருமே ஓரினம் தான். ஜோதிடமும் இது போன்றதே. எல்லா மதத்தினருக்கும் ஏதோ ஒரு நிலையில் அல்லது ஏதோ ஒரு பெயரில் ஜோதிட நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கிரகப் பெயர்ச்சியினால் உண்டாகும் நன்மை, தீமை அனைவருக்கும் பொதுவானது தான். அதை உணரும் நிலையில் அவரவர் மதம், ஜோதிட அடிப்படையில் சற்று வேறுபடுகிறது.
* துன்பம் தீர கோயிலில் எத்தனை விளக்கேற்றி வைக்க வேண்டும்? எண்ணெய், நெய் இரண்டில் எதை ஏற்றுவது நல்லது?
சாய் ரங்கராஜா, சென்னை
பொதுவாக எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். தொடர்ந்து ஐந்து தீபங்கள் ஏற்றிட துன்பம் தீரும் என்பது வழக்கத்தில் உள்ளது. பசு நெய்யினால் தீபம் ஏற்றுவது விசேஷம். கோயில் வாசலில் சிறு தொண்ணைகளில்
விற்கப்படும் நெய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை. இதற்குப் பதிலாக சுத்தமான நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறந்தது.
நல்லதே நினைத்து நல்லதையே செய்து வந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், கெட்டவர்கள் நம் கண்முன்னே கஷ்டப்படாமல் வாழ்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
எஸ்.ஜெயஸ்ரீ, சென்னை
நாம் உலகில் நடக்கும் நல்லதை மட்டுமே பார்ப்போம். நல்லதையே செய்வோம். தவறான வழியில் போகிறவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி! தவறான வழியில் சம்பாதித்து நிறைய பணம் சேர்த்து வைத்திருக்கும் ஒரு கெட்டவனுக்கு காபியில் சர்க்கரை கூட கலந்து குடிக்க முடியாது. ஆனால், நல்லதையே நினைப்பவன் வடை, காபி என ஜமாய்ப்பான். கெட்டவர்களுக்கு நல்லது நடப்பது என்பது தற்காலிகமானதே. இவர்கள் ஆண்டவனின் தண்டனையில் இருந்து நிச்சயம் தப்ப முடியாது.
கோயிலில் வாங்கிய திருநீறு, குங்குமத்தை வீட்டு பூஜையில் சுவாமிக்கு பயன்படுத்தலாமா?
எம். ஜெயலட்சுமி, விழுப்புரம்
கோயிலில் கொடுப்பவை எல்லாம் பிரசாதம் ஆகும். கடவுளுக்குப் படைத்த அவற்றை நாம் உபயோகப்படுத்த வேண்டும். வீட்டு பூஜையில் சுவாமிக்கு புதிதாக வாங்கியே பயன் படுத்த வேண்டும்.