
** குடும்பத்தில் இளம்வயதில் ஒருவர் இறந்து விட்டால், அதன் பின் கடவுள் மீது பக்தி குறைந்து விடுகிறதே. இதை எப்படிப் போக்குவது?
பி.கமலம், தாம்பரம்
இது தர்மசங்கடமான விஷயம் தான். எல்லாம் இறைவன் செயல், என்ற ஆன்மிகத்தின் அடிப்படை தத்துவத்தைப் புரிந்து கொண்டவர்களும், விதியால் நடந்ததே தவிர, கடவுளின் குற்றம் ஏதுமில்லை என்ற நம்பிக்கையுடையவர்களும் இதை பொருட்படுத்துவதில்லை. உறவை இழந்தவர்களின் மனநிலையை மாற்றும் சில கதைகள் இந்து புராணங்களில் உள்ளன. அவற்றைச் சொல்லி அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம். காலம் என்பது மிகப்பெரிய மருந்து. காலம் கடந்து விட்டால் சோகம் குறைந்து போகும்.
* கடலில் அஸ்தி கரைப்பதன் நோக்கம் என்ன?
கே.கனகவிஜயன், மதுரை
மலையில் உற்பத்தி ஆகும் நதி காடு,மேடு என பயணித்து இறுதியில், கடலில் சங்கமிக்கிறது. அதுபோல, பிறந்தது முதல் பல இன்பதுன்பங்களை அனுபவித்து கடவுள் திருவடியாகிய கடலை அடைகிறான் மனிதன். இதன் அடையாளமாக அஸ்தியைக் கடலில் கரைக்கிறோம். பிறவிகளைக் கடந்து இறைவன் என்னும் மகாசமுத்திரத்தில் ஐக்கியமாகுதல் என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் இவ்வாறு செய்கிறார்கள்.
* கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துவதன் நோக்கம் என்ன?
கே.ஏ.என்.சிவம், பெங்களூரு
முடி மனிதனுக்கு கிரீடம் போன்றது. அது அழகின் அடையாளம். தன் அழகும் கூட இறைவனுக்கே அர்ப்பணம் என்ற உயர்ந்த தத்துவமே முடி காணிக்கை. அழகு குறைவதால் 'நான்' என்ற அகந்தை எண்ணம் மனிதனை விட்டு நீங்கும். இதனால் தான் துறவிகள் எப்போதும் மொட்டைத் தலையுடன் இருக்கிறார்கள்.
* எலுமிச்சை மாலை எந்தெந்த தெய்வத்திற்கு உகந்தது?
அ. அனுஷா, மயிலாப்பூர்
விநாயகர், காளி, மாரியம்மன், பைரவர், நரசிம்மர் ஆகிய தெய்வங்களுக்கு சாத்தலாம். இந்த மாலை அணிவதால், காயாக இருக்கும் விஷயம் கூட இறையருளால் கனிந்து பலனளிக்கும் என்பது ஐதீகம்.
* பசுவின் பின்புறத்தை வழிபடுவது நல்லது என்று சிலர் முகத்தைக் கூடப் பார்க்காமல் செல்வது சரியா?
எஸ்.மதுரம், கோவை
பசுவின் பின்புறம் மகாலட்சுமி வீற்றிருப்பதால் இப்படி வணங்குகிறார்கள். சகல தெய்வங்களும், புண்ணிய தீர்த்தங்களும் பசுவின் உடலில் குடியிருப்பதால் முகம் உட்பட எல்லா உறுப்புமே புனிதமானது தான்.
* தானதர்மம் செய்ய வசதி இல்லாத நிலையில் என்ன செய்யலாம்?
எம். ரங்கநாதன், கடலூர்
உடலால் உதவி செய்யலாமே! நாம் படித்தவர்களாக இருந்தால் இலவசமாக டியூஷன் எடுக்கலாமே! கோயில்களையும், தெருக்களையும் சுத்தப்படுத்தலாமே! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்.