* இந்த வார ஸ்லோகம்
கந்தர் பகோடி லாவண்ய நிதயே காமதாயினே!
குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்!!
பொருள்: கோடி மன்மதர்களைப்போன்று அழகு கொண்டவரும், மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுபவரும், வேலாயுதத்தைக் கையில் வைத்திருப்பவருமான குமரக்கடவுளான முருகப்பெருமானுக்கு மங்களம் உண்டாகட்டும்.
* மனப்பாடப்பகுதி
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
பொருள்: முருகப்பெருமானே! உன்னுடைய மென்மையான மலர் போன்ற திருவடிகள் என் விழிகளுக்குத் துணையாகும். மொழிக்குத் துணையாக "முருகா' என்ற திருநாமத்தை என் நாவானது ஓதிக் கொண்டிருக்கும். முற்பிறவியில் செய்த பழிபாவங்களை உன்னுடைய பன்னிரு தோள்களும் போக்கிவிடும். பிறவி முடிந்து உயிர் தனிவழியில் செல்லும்போது, திருச்செங்கோடு வேலவனாகிய உனது மயிலும், வடிவேலும் எனக்குத் துணையாக வரும்.
சொல்லுங்க தெரிஞ்சுக்கறோம்
1. பிரகலாதனின் பெற்றோர்...
தாய் கயாது; தந்தை இரணியன்
2. நரசிம்மரின் இருவகை கோலங்கள்...
தனித்தநிலையில் யோக நரசிம்மர், தேவியோடு இருக்கும் நிலையில் லட்சுமி நரசிம்மர்
3. நரசிம்மர் அவதரித்த நட்சத்திரம்...
சுவாதி
4. நரசிம்மர் இரண்யனைக் கொல்ல பயன்படுத்திய ஆயுதம்....
நகம்
5. நரசிம்மருக்கு உகந்த நிவேதனம்...
பானகம்
6. நரசிம்மர் கோயில்கள் பெரும்பாலும் எப்படி அமைந்திருக்கும்?
மலையில் குடைவரைக்கோயிலாக.
7. கடன் நீங்க நரசிம்மரின் எத்துதியைப் படிப்பர்?
ருணவிமோசன லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்
8. அகோபில நரசிம்மர் மீது பாசுரம் பாடிய ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்
9. நரசிம்மரின் அருளும் தன்மையை எப்படி குறிப்பிடுவர்?
அடித்த கை பிடித்த பெருமாள்
10. திருமாலின் தசாவதாரங்களில் நரசிம்மரை ....கோலம் என்பர்
அவசரத் திருக்கோலம்.
தாரை வார்த்து தரும் முனிவர்
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற திருத்தலங்கள் ஏராளம். எல்லாக் கோயில்களிலும் பார்வதியின் சகோதர ஸ்தானத்தில் இருந்து கன்னிகாதானமாக தங்கையைத் தாரைவார்த்துக் கொடுப்பவர் விஷ்ணு. ஆனால், புகழ்பெற்ற திருமணத்தலமான திருமணஞ்சேரியில் பரத்வாஜமுனிவரே தேவியைத் தாரை வார்த்துக் கொடுக்கிறார். ஏனெனில், இங்கு பரத்வாஜரின் மகளாக அம்பிகை அவதரித்தாள். விஷ்ணுவும் அருகில் இருந்து ஆசியளிக்கிறார். இந்த அதிசய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.
சரஸ்வதியின் சாதுர்யம் : கும்பகர்ணன் என்றாலே தூங்குமூஞ்சி என்பது நமக்குத் தெரியும். ஆறுமாதம் தூங்கிவிட்டு ஆறுமாதம் விழித்திருப்பவன். தன் அண்ணன் ராவணனைப் போலவே கும்பகர்ணனும் பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். ""நித்யத்துவம் வேண்டும்'' என்று கேட்க நினைத்த அவனை வாய்தவறி ""நித்ரத்துவம் வேண்டும்'' என்று கேட்கச் செய்தாள் சரஸ்வதி. ராவணனை போல இன்னொரு அரக்கன் பூமியில் இருக்கவேண்டாம் என்ற நல்ல நோக்கத்திலேயே கலைமகள் இப்படி செய்தாள். கும்பகர்ணனும் அசுரத்தனமான நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.
முருகன் பாதம் பதித்தமலை: ஞானப்பழத்திற்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட முருகன், பழநியில் குடி கொண்ட முத்துக்குமாரசாமி பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்கள் சொல்கின்றன. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 20கி.மீ., தொலைவில் உள்ள கிணத்துக்கடவு என்னுமிடத்தில் உள்ள பொன்மலையில் வேலாயுதசுவாமியாக முருகன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு பூஜை நடத்தும் முன் முதலில் முருகன் பாதத்திற்கே பூஜை செய்யப்படுகிறது. இம்முருகனை அருணகிரிநார் திருப்புகழில் பாடியுள்ளார்.
எங்கிருக்கிறார் தேசிக விநாயகர்? : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைத் தமிழுலகம் நன்கறியும். இவருடைய ஊர் நாகர்கோவில் அருகிலுள்ள தேரூர். இவ்வூரில் கோயில் கொண்டிருப்பவர் தேசிகவிநாயகர். தமிழ்ப்புத்தாண்டு நாளில் இவரைத் தரிசிப்பவர்களுக்கு மாம்பழப் பிரசாதம் வழங்குவர். இப்பிள்ளையாரை வழிபாடு செய்தால் கவிமணியைப் போல கவித்திறன் உண்டாகும் என்பது நம்பிக்கை.
லிங்கத்தை இடுப்பில் சுமக்கலாம்: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் அமுதலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு சிவலிங்க ஆவுடையாரில்(பீடம்) இருந்து பாணத்தை(லிங்கவடிவம்) தனியாகப் பிரித்து எடுத்து விடமுடியும். குழந்தை இல்லாத தம்பதியர் நீராடி விட்டு, இந்த லிங்க பாணத்தை இடுப்பில் சுமந்தபடி, ஆலயத்தை வலம் வரவேண்டும். இதனால் விரைவில் வீட்டில் மழலைக்குரல் ஒலிக்கும் என்பது ஐதீகம்.
(06-14)- ஆடி மாத சுபநாட்கள்
ஆடி 5 (ஜூலை 21) புதன் - ருது சாந்தி, சீமந்தம் நடத்த
ஆடி 7 (ஜூலை 23) வெள்ளி - குழந்தைக்கு பெயர் சூட்ட
ஆடி 16 (ஆகஸ்ட் 1) ஞாயிறு - மஞ்சள் நீராட்டு, வளைகாப்பு நடத்த
ஆடி 17 (ஆகஸ்ட் 2) திங்கள் - பொன் ஏர் கட்ட, விதை விதைக்க
ஆடி 21 (ஆகஸ்ட் 6) வெள்ளி - காதணி விழா, உபநயனம் நடத்த
ஆடி 26 (ஆகஸ்ட் 11) புதன் - காதணி, சீமந்தம் நடத்த
ஆடி 30 (ஆகஸ்ட் 15) ஞாயிறு - ருதுசாந்தி, விருந்து நடத்த
வாஸ்து நாள் - பூஜை நேரம்
ஆடி 11 (ஜூலை 27) செவ்வாய்க்கிழமை காலை 7.44 மணி முதல் 8.20மணி வரை