ADDED : பிப் 18, 2020 03:34 PM

ஞாயிறு - சூரியன்
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் சாலப் பரிந்து சகலரை அணைப்பாய் போற்றி!
தவிக்கும் ஓர் உயிர்களுக்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
துாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!
துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
திங்கள் - சிவன்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
செவ்வாய் - முருகன்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
புதன் - ரங்கநாதர்
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
வியாழன் - தட்சிணாமூர்த்தி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்
வெள்ளி - அம்பாள்
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே
சனி - அனுமன்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.