ADDED : ஆக 27, 2010 04:06 PM

ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அதற்கு முன்வரும் தேய்பிறை சதுர்த்தியும் விநாயகருக்கு மிகவும் உகந்தநாளே. அந்நாளை 'மகாசங்கடஹர சதுர்த்தி' என்று குறிப்பிடுவர். பொதுவாக, ''நாலாம்பிறை பார்த்தால் நாய்படாதபாடு படுவர்'' என்று சொல்வது வழக்கம். ஆனால், சதுர்த்தியன்று காலையிலேயே விநாயகரை வழிபட்ட பின், வானில் சந்திரன் கண்ணில் பட்டால் தோஷமில்லை. மேலும், இந்நாளில் சிவாலயங்களில் சந்திரபகவான் சன்னதியில் வழிபட்டால் நம் துன்பங்கள் நீங்கும் என்பது விநாயகரின் அருள்வாக்கு. குழந்தைக் கடவுளான பிள்ளையாருக்கு இந்நாளில் அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை படைத்து வழிபடுவது சிறப்பு. விநாயகருக்கு இரண்டு பெரிய காதுகள் உள்ளன. நம் வேண்டுதல் அனைத்தையும் கேட்டவுடன் அருள்புரிவதற்காகவே இரண்டு பெரிய காதுகளைக் கொண்டிருக்கிறார் அவர்.
கருணை மிக்க கணபதி
ஒருமுறை, விநாயகப் பெருமானின் பானை வயிற்றைக் கண்ட சந்திரன் பலமாகச் சிரித்தான். தன்னைக் கேலி செய்த சந்திரன் மீது கொண்ட கோபத்தினால் விநாயகப்பெருமான், ''என் உருவத்தைப் பார்த்து இழிவாக நினைத்தாய் அல்லவா? இனிமேல் நீயும், உன்னைக் காண்பவர்களும் களங்கம் அடைவர். அதனால் யாரும் உன்னுடன் சேர மாட்டார்கள்'' என்று சபித்துவிட்டார். பின்னர் சந்திரன் தான் செய்த குற்றத்திற்காக வருந்தி முறையிட்டான். பிள்ளையாரும் அடிபணிந்த சந்திரனை மன்னித்ததோடு, தன் தலையில் தூக்கிவைத்து மகிழ்ந்தார். தலைமேல் சந்திரனைச் சூடிக் கொண்டதோடு மட்டுமில்லாமல் நர்த்தனமும் ஆடினார். அவருக்கு ''நிருத்த கணபதி அல்லது கூத்தாடும் பிள்ளையார்'' என்று பெயர் ஏற்பட்டது. அப்போது சந்திரனுக்கு ஒரு வரமும் கொடுத்தார். ''தேய்பிறை நான்காம் நாளான சதுர்த்தி திதியில் விரதமிருந்து, என்னையும் வழிபட்டு, உன்னையும் நினைப்போரின் வாழ்வில் எல்லா இடையூறுகளும் நீங்கும்,'' என்றார். விநாயகரின் வழிபாட்டுக்குப் பின் ரோகிணி சமேதராக சந்திரனையும் பூஜித்தால் முழுபலன் உண்டாகும் என்று வரம் கொடுத்தார். தன்னைக் கேவலமாக நினைத்தவன் கூட சரணடைந்து விட்டால் தலைமேல் தூக்கிவைத்துக் கொள்வதும், அவனுக்கு மதிப்பளிப்பதும் கணநாதனுக்கே உரிய கருணையன்றி வேறில்லை.
விநாயகருக்கு மட்டும் இருதிதிகள்
சாதாரணமாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாதத்தின் ஒவ்வொரு திதியைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். அந்த நாள் வளர்பிறை நாளாகவோ அல்லது தேய்பிறை நாளாகவோ இருக்கும்.முருகப் பெருமானுக்கு சஷ்டி என்றால் வளர்பிறை சஷ்டி மட்டும்தான். சிவபெருமானுக்கு தேய்பிறை சதுர்த்தசி, அதாவது அந்தநாளே மாத சிவராத்திரி நாளாக இருக்கும். ராமபிரானுக்கு வளர்பிறை நவமியில் பூஜை புனஸ்காரம், பஜனை நடத்துவது வழக்கம். கிருஷ்ணனுக்கு தேய்பிறை அஷ்டமிநாளில் வழிபாடு செய்வது சிறப்பு. அம்பிகைக்கு வளர்பிறையின் நிறைவு நாளான பவுர்ணமி மிகவும் உகந்தது. ஆனால், முதல்கடவுளான விநாயகருக்கு மட்டும் வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி இரண்டுமே விசேஷமானவை. விநாயகப்பெருமான் அவதரித்தது வளர்பிறை சதுர்த்தி என்பதால், அந்தநாளில் விரதமிருந்து வழிபடுவர். அதோடு கூட நம் வாழ்வில் உண்டாகும் சங்கடங்களை போக்கும் நாளாக தேய்பிறை சதுர்த்தி நாளையும் தேர்ந்தெடுத்து நமக்கு அளித்தவர் விநாயகப்பெருமானே. தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்தால், வாழ்க்கையில் இடைஞ்சல் நீங்கிவிடும். குறிப்பாக, ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபட் டால், தீராத துன்பமும் தீர்ந்து விடும் என்பதால் அது 'மகாசங்கடஹர சதுர்த்தி' எனப்படுகிறது.