ADDED : டிச 03, 2010 03:23 PM

அமெரிக்காவில் ஹுஸ்டனில் வசிக்கும் ராதா என்ற வாசகி, சமீபத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்திருந்தார். இங்குள்ள நரசிம்மர் சன்னதியை ஒட்டி, சென்னை ராமகிருஷ்ண மடம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பளிங்குக்கற்களில் எழுதப்பட்டிருந்த வாசகம் அவரது கண்ணைக் கவர்ந்தது. அதைப் படித்த அவர் ஆன்மிக மலர் இதழுக்கு அனுப்பி, ''என்னைப் போல் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு பயனாக இருக்கட்டுமே என்ற ஆர்வத்துடன் இதை அனுப்பி வைக்கிறேன்,'' என்று எழுதியுள்ளார்.
சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, பார்லிமென்டில் பேசும் போது,''இந்தியாவில் பல ஜாதி, மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து உலகிற்கே புதியதோர் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர். இது மிகவும் உயர்ந்த கலாசாரம். இதை எங்கள் நாட்டுக்கு வந்த சுவாமி விவேகானந்தர் தமது உரை மூலம் அழகாகவும், ஆழமாகவும் எடுத்துக்காட்டியுள்ளார்,'' என்று பேசினார். அப்படிப்பட்ட சிறப்புக்குரிய விவேகானந்தர், அமெரிக்கா சென்றிருந்த போது, 1893, ஆகஸ்ட் 20ல், திருவல்லிக்கேணியில் வசித்த தன் நண்பர் துளசிங்கப் பெருமாளுக்கு பார்த்தசாரதியைப் பற்றி எழுதியிருந்த குறிப்பை கல்வெட்டில் பதித்து வைத்துள்ளனர். படியுங்கள். ''துளசிங்கா! நீ இப்போதே இந்தக் கணமே ஸ்ரீபார்த்தசாரதி சுவாமியின் திருக்கோயிலுக்குச் செல்வாய்! அவன் திருமுன்னர் விழுந்து பணிவாய். கோகுலத்தில் மாடு மேய்க்கும் ஏழை இடைச்சிறுவர்களுக்கு உற்ற தோழனாகத் திகழ்ந்தவன் யாரோ, புலையனான குகனைத் தம்மவனாக ஏற்று அவனைக் கட்டியணைத்ததில் தயக்கம் துளியேனும் காட்டாதவன் யாரோ, அந்த அருளாளன் திருமுன் நீ தலை தாழ்த்தி நிற்பாயாக! அவன் திருமுன் மிகுத்ததாயதொரு (மிகச்சிறப்பான) தியாகத்தைச் செய்வதாக உறுதி பூண்பாயாக!
எந்த ஏழை மக்களுக்காக, தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்காக இறைவன் அவ்வப்போது அவதாரம் எடுத்து இவ்வுலகிற்கு வருகிறானோ, எல்லாவற்றைக் காட்டிலும் எவர்களை இறைவன் அதிகமாக நேசிக்கிறானோ, அந்த நலிவுற்ற மக்களுக்காக உன் வாழ்க்கையையே தியாகம் செய்வதாக, நீ மக்களின் புனர்வாழ்விற்காக, நீ உன்னையே தியாகம் செய்வதாக அவன் திருமுன் நின்று சபதம் செய்வாயாக!
இது ஒருநாள் வேலையன்று. இந்த வழி நச்சுமுட்கள் நிறைந்த வழியாகும். ஆயினும், பார்த்தசாரதி நமக்குச் சாரதியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்ல தயாராக இருக்கிறான். இதை நாம் நன்கு அறிவோம். எனவே, அவனிடம் தளராத நம்பிக்கை வைத்து காலங்காலமாக நமது இந்தியத்தாய் நாட்டின் மீது ஏற்றி வைத்துள்ள மலைபோன்ற துன்பக்குவியலை அவன் பெயரால் சுட்டுப் பொசுக்குவோம். ஆம்! அதை பொசுக்கியே ஆக வேண்டும்.
என் சகோதரர்களே! வாருங்கள் தைரியமாக எதிர்ப்போம். இதுவே மகத்தானதொரு பணி. நாமோ மிகவும் பாழ்பட்டுத் தாழ்வுற்று நிற்கிறோம். ஆயினும் ஏன்? இறைவனான பேரொளியின் புதல்வர்கள் நாம். இறைவனின் அன்புக்குழந்தைகள் நாம். எனவே வெற்றி நமதே! வாழ்க இறைவனின் புகழ்,''. வாசகர்களே! கோயில்களுக்குச் செல்லும் போது, உங்களுக்கும் இதுபோன்ற சுவையான செய்திகள் கிடைக்கலாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.