ADDED : செப் 18, 2010 12:51 AM

வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
** நரசிம்ம அவதாரத்தை 'அவசரத்திருக்கோலம்' என கூறுவது ஏன்? நெ.கோமதிநாயகம், சிதம்பரம்
'அவசரம்' என்ற சொல் 'சீக்கிரம்' என்ற பொருளில் மாத்திரம் இல்லை. ஒன்றைப் போல்இருக்கும் மற்றொன்றைக் குறிக்கும் சொல்லாகும். அதாவது ஒரு சுமங்கலிப் பெண் சிவப்பு ஆடை உடுத்தி நிறைய பூ வைத்து பொட்டு வைத்து மங்களகரமாக காட்சி அளித்தால் 'அம்பாள் அவசரமாக இருக்கிறீர்கள்' என்று பாராட் டுவது மரபு. 'நர' என்றால் மனித வடிவம். 'சிம்மம்' என்றால் சிங்கம். முகம் சிங்கமாகவும், உடல் மனித வடிவிலும் இருக்கும் கோலம் நரசிம்மம் என்று பெயர். ஸ்ரீ மஹா விஷ்ணுவை 'நரசிம்ம அவதாரம்' என்று சொல்லுவதை 'நரசிம்ம அவசரம்' என்றும் சொல்லலாம்.
* இரு மகன்களில் மூத்தவர் மனைவியை இழந்தவர். இளைய மகனுக்கு மனைவி உண்டு. இருவரில் இளையவரே பித்ரு காரியம் செய்ய வேண்டும் என படித்துள்ளேன். இதுகுறித்து விளக்கம் தரவும். கே.எஸ்.வெங்கடாச்சாரி, கோவை
எந்த புத்தகத்தில் படித்தீர்கள். பெற்றோர் இறந்த சமயம் செய்யும் பித்ரு காரியங்களை மூத்த மகன் தான் செய்ய வேண்டும். ஒரு வருட காரியம் முடிந்த பிறகு தான் இளைய மகன் வருட திவசம் போன்ற காரியங்களைச் செய்யலாம்.
*நான் வேலை பார்க்கும் இனிப்பகத்தில் இருந்து தினமும் சிறிது பலகாரங்களையும், தண்ணீரையும் காக்கைக்கு வைக்கிறேன். இதனால் எனக்கும், என் முதலாளிக்கும் என்ன பலன் என்பதைக் கூறவும் எஸ்.முருகேசன், திருத்தங்கல்
காக்கை என்பது இந்து மதத்தைப் பொறுத்த வரை முன்னோர்களின் வடிவம் என்றும், சனி கிரகத்தின் வாகனம் என்றும் இரு நிலைகளில் முக்கியமான பறவையாகக் கருதப்படுகிறது. தினமும் காக்கைக்கு சாதம் வைத்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. தற்போது கிராமங்களில் மட்டுமே ஒரளவு இந்த தர்மம் டைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வேதம் பயின்ற பல அந்தணர்கள் இன்றும் கூட தினமும் செய்து வருகிறார்கள். பித்ரு லோகத்தில் இருக்கும் நம் முன்னோர் நாம் அனுதினமும் செய்யும் தர்ப்பணம், தானம், தர்மம் போன்றவைகளினால் மிகுந்த திருப்தியும் சந்தோஷமும் அடைகிறார்கள். அவர்கள் ஆசிர்வாதம் தினமும் நமக்குக் கிடைப்பதனால் நாமும் நம் சந்ததியும் இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். எனவே நீங்கள் செய்யும் காரியம் உங்களுக்கும், உங்கள் முதலாளிக்கும் முன்னோரின் பூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருவதுடன் நவக்கிரக தோஷங்களையும் நீக்கும்.
* நாத்திகரை கணவராகப் பெற்ற நான் ஒரு தீவிர கடவுள் பக்தை. எனக்குத் தாங்கள் கூறும் அறிவுரை என்ன? ப.ராஜேஸ்வரி, அருப்புக்கோட்டை
பெரிய இடங்களிலெல்லாம் இப்படித்தானே இருக்கிறது! கவலையே பட வேண்டாம். தங்கள் பூஜா பலம் தங்கள் கணவரையும் காப்பாற்றும். ஒரே ஒரு விஷயம். இதனால் தங்களுக்கும், தங்கள் கணவருக்கும் மனத்தாங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* அஷ்டமி, நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. ஏன்? க.சுப்பிரமணியன், ராமேஸ்வரம்
ஓவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அந்த தேவதைகள் நற்பலன்களை அளிப்பவர்களாக இருந்தால் அந்தத் திதி, மங்கள நிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகும். உதாரணமாக வார நாட்களில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவ்விரு கிரகங்களும் பாப கிரகங்கள். இது போல் பதினைந்து திதிகளில் முதலாவதாகிய பிரதமை எட்டாவது அஷ்டமி, ஒன்பதாவது நவமி, பதினைந்தாவது அமாவாசை இந்த நான்கு திதிகளிலும் தீய பலன்களைக் கொடுக்கும் தேவதைகளின் பலம் அதிகம் என்பதால் இந்த நாட்களில் மங்கள நிகழ்ச்சிகள் செய்வதில்லை. அதனால் தான், இந்த திதிகளில் துர்க்கை, பைரவர் போன்ற தெய்வங்களை வழிபடுகிறோம்.