ADDED : நவ 12, 2017 04:35 PM

இறை அச்சம் என்பதில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. இறை அன்பு, இறை நேசம், இறை காதல், இறை பிரேமை, இறை நெருக்கம், இறை உருக்கம் இதில் தான் எனக்கு ஈர்ப்பும், நம்பிக்கையும் உண்டு.
இறைமை என்பது தாய்மடி. பதைபதைக்கும் நம் மனசுக்கு கதகதப்பு தருவது. கசிந்து அழும் நம் மனசுக்கு மருந்து தருவது. கதறும் நம் மனசுக்கு நிம்மதி தருவது. வழுக்கும் நம் பாதைக்கு ஊன்றுகோல் தருவது. இப்படி,
அப்படி, எப்படிச் சொன்னாலும் இறைமை தான் உயிரூற்று.
எத்தனை மனிதர்கள் எவ்வளவு ஆறுதலும், தேறுதலும் சொல்லட்டுமே...
இறை ஆறுதலுக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியாது மனித ஆறுதல். ஆனால் இறைமையின் சுகத்தை, நெருக்கத்தை யாருமே மற்றவருக்கு புரிய வைக்க முடியாது. அவரவர் கையளவு, அவரவர் மனதளவு, அவரவர் கொள்ளளவு தான் உள்ளுணர முடியும். கட்டிக் கொடுக்கும் சோறு அல்ல... இறைமை.
பசி, தாகம், துாக்கம், காமம் போன்று ரொம்பவும் இயல்பானது இறை உணர்வு.
அப்படிச் சின்ன வயதிலிருந்தே எனக்கான பிரேமையும், ஈர்ப்பும் ஒரு சின்னக் குழந்தையிடம் இருந்தது.
தங்கமாய் ஜொலிப்பான் அவன். அவனுக்கான அழகிய பூஜைகள் எனக்குள் வியப்பை துாண்டின. வாழை மரப்பட்டைகளை உரித்து அற்புதமாக வடிவமைக்கப்படும் பதினெட்டு படிகள், கோபுரங்கள், பித்தளைப் படியில் குவித்து வைக்கப்படும் நெல் வாசனை, குருத்தோலை, பாக்கு, கரும்பு இவற்றில் செய்யப்படும் தோரணங்கள், புத்தம் புதிதாய் பொன்னாக ஜொலிக்கும் குத்து விளக்குகள், குளித்து முடித்து ஈரம் சொட்டும் கூந்தலுடன் பளிச்சென்ற வெள்ளை முண்டு உடையும், நெற்றியில் சந்தனமும், செண்டை மேளமும் எனக்கு புல்லரிப்பாக இருக்கும். வேறொரு தேவலோகத்தில் மிதப்பது போன்ற பரவசத்தை அனுபவித்த பொழுதுகள் அவை.
கூடவே கே.ஜே. ஜேசுதாஸ், கே.வீரமணி போன்ற பாடகர்கள் உருகி உருகி 'தேக பலம் தா... பாத பலம் தா..'' என பாடிப்பாடி என்னைக் கரைந்து போகச் செய்வர். பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்... சபரியில் ஐயனை நீ காணலாம்... ஐயப்பா... சரணம் ஐயப்பா...''என்ற பாடல், ''எனக்கு சொன்னது பொய் சொல்லவே கூடாது'' என்னும் பால பாடம்.
'இருப்பது காடு... வணங்குது நாடு...' என்னும் வரிகளைக் கேட்கும் போது ஐயப்பன் வசிக்கும் காடு எப்படியிருக்கும்? நாம் எப்படி அங்கே போவது? என்று மனசு பரிதவிக்கும். இருமுடி கட்டித் துளசி மாலை அணிந்து, கருப்பு உடையில், காலில் செருப்பு அணியாமல் மனதில் ஐயப்பன் என்னும் நெருப்பு சுமந்து புறப்படும் அந்த சபரிமலை பயணம் சிறுவயது முதலே என் ஆராதனைக்கு உரியது.
அந்த ஐயப்ப பக்தர்களை பார்க்கும் போது மனசு புளகாங்கிதம் அடையும். தினமும் இரு வேளை குளித்து, இச்சைகள் விலக்கி, கல்லும் முள்ளும் சமமாக பாவித்து, ஒரு மண்டல விரதம் இருப்பது தான் நம் தினசரி வாழ்வியலாக அமைய வேண்டும். நம் நித்தியக் கடமை இப்படி அமைந்தால் வாழ்க்கை என்னும் பம்பை நதிப்பாதையை சுலபமாகக் கடக்கலாம். இறுதியில் பதினெட்டு படிகள் கடந்து ஐயப்பனோடு கரையலாம். அதற்கு தான் மலர்கிறது கார்த்திகை மாதமும், ஐயப்பன் விரதமும்.
சுவாமி ஐயப்பன் போல எனக்கொரு குழந்தை வேண்டும் என்பது எனது இல்லற கனவாக, பிரார்த்தனையாக இருந்தது. அந்த பாலகனின் புன்சிரிப்பு; திகட்டாத பேரமுதம். அந்தக் குட்டிப் பையனின் கொள்ளை அழகு எல்லா சவுந்தர்யத்திலும் அதி சவுந்தர்யம். 'நீயே எனக்கு மகனாகவும், மகளாகவும் பிறக்க வேண்டும்' என்கிற வேண்டுதலை நிறைவேற்றித் தந்தது ஐயப்பன் தான்.
என் மகன் விஷ்ணுவர்தன், மகள் ஷக்தி ரமணி பிறந்த போது பால் ஒவ்வாமையால் சிரமப்பட்டனர். தாய்ப்பால், மாட்டுப்பால், பால்பவுடர், பிஸ்கட் எதுவும் ஒத்துக் கொள்ளாது. ஒரு சொட்டு பால் நாக்கில் பட்டால் கூட, மணிக்கணக்கில் பேதி பீய்ச்சி அடிக்கும். ஒரு துளி சர்க்கரை தந்து விட்டால் போதும், மணிக்கணக்கில் வாந்தி தான்.
வேறு எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நிலையில், இரு குழந்தைகளோடும் சென்னை ஆர்.எம்.சி.நகர் ஐயப்பன் கோயில் சென்று பிரார்த்தனை செய்தேன். கண்ணீரோடும், கவலையோடும் கண் அயர்ந்த போது, பெருவெளிச்சம் ஜோதியாக தோன்றி, ''சபரிமலைக்கு குழந்தைகளோடு வர முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். நானே குருவாயூரிலும் இருக்கிறேன்'' என்றொரு மாயக்குரல் எனக்குள் ஒலித்தது.
குழந்தைகளை துாக்கி கொண்டு குருவாயூர் திருத்தலம் ஓடினோம். அந்த சின்னக் குழந்தையின் காலடியில் குழந்தைகளைப் போட்டு வணங்கினேன். எலும்பும், தோலுமாக இருந்த குழந்தைகளின் எடைக்கு எடை பாலும், சர்க்கரையுமாக துலாபாரம் கொடுத்தேன். கூடுதலாக எனது தாய்மைக் கண்ணீரையும் காணிக்கை தந்தேன். இரண்டு குழந்தைகளையும் துலாபாரத்தில் அமர்த்தி கைகூப்பியது மட்டுமே நினைவிருக்கிறது.
துலாபார சர்க்கரையை இரண்டு பேரும் தானாகவே எடுத்து வாயில் போட்டு சுவைத்தனர். நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். என்ன ஆச்சர்யம். பிறந்து ஒரு வருடமாக ஒரு துளி சர்க்கரை சாப்பிட்டாலும் பாடாய்ப்படுத்தும் பேதியும், வாந்தியும் மறைந்தே போனது.
கோயிலில் இருந்து வெளியே வந்தால், எதிரில் சபரிமலை பக்தர் கூட்டம். ''சாமியே... சரணம் ஐயப்பா'' என்று கோஷமிட்டபடி கோயிலுக்குள் நுழைந்தனர்.
இது விஞ்ஞானமும் இல்லை.
அஞ்ஞானமும் இல்லை. ஐயப்பன் என்னும் மெய்ஞானம். சர்க்கரை இனிப்பை அவரவர் தான் உணர முடியும். எனக்கு சர்க்கரை என் ஐயப்பன் தான். அதனால் தான் வாழ்க்கை இனிக்கிறது.
இன்னும் சொல்வேன்
ஆண்டாள் பிரியதர்ஷினி
அலைபேசி: 94440 17044