sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனசில் பட்டதை.... (32)

/

மனசில் பட்டதை.... (32)

மனசில் பட்டதை.... (32)

மனசில் பட்டதை.... (32)


ADDED : நவ 17, 2017 10:09 AM

Google News

ADDED : நவ 17, 2017 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில் தஞ்சைக்கு பயணித்தேன். தஞ்சை காற்றை சுவாசித்தேன். பெரிய கோயிலின் அற்புதத்தில் திளைத்தேன். விஸ்தாரமான, பிரம்மாண்டமான, தமிழின் அடையாளமான பிரகதீஸ்வரர் கோயில் என்னும் புனிதத்தில் கரைந்தேன். பத்தாம் நுாற்றாண்டின் தமிழக கலை, பண்பாட்டு சமூக ஞானத்தின் உச்சம் இந்த கோயில். இறைவன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆள்பவன் அல்ல.

ஆண்டவன் மட்டுமே முக்கியம் என்பது தான் இக்கோயிலின் ஆவணச்சேதி.

ஆணவத்தின் சேதியாக அலையும் நம்மை போன்ற சிறிய மனிதர்களுக்கு இந்த உன்னத புரிதல் வேண்டும்.

நுாறு ரூபாய் குழல் விளக்கிலும் கூட, ஐநுாறு ரூபாய் செலவு செய்து, பெயரை பொறித்துக் கொள்ளும் சிறுமை நம்மிடம் உண்டு.

யுனெஸ்கோவின் கலாசாரப் பொக்கிஷமாக கொண்டாடப்படும் இந்த திருத்தலத்தில் ஆண்டவன் மட்டுமே இருக்கிறான்.

அந்த சோழப் பேரரசை ஆண்டவன் முன்னிலைப்படுத்தப்படவே இல்லை.

240 மீ நீளம், 125 மீ அகலம் கொண்ட வெளிப்பிரகாரத்தின் தளத்தில் மெல்ல நடந்தேன். வானத்து நிலவும், நட்சத்திரங்களும், வீசும் தென்றல் காற்றும், குளுமையும், இரவின் ஆழமான கருமையும் என்னோடு துணைக்கு நடந்தன; நடந்தேன்; மெல்ல நடந்தேன். இந்த திருக்கோயில் ராஜராஜ சோழன் அருள்மொழிவர்மன் நிர்மாணித்தது. அவனுக்கும், அவனது தமக்கை குந்தவை நாச்சியார் என்னும் இளையபிராட்டிக்குமான பெரிய கனவுப்பொக்கிஷம்.

''பெரிதினும் பெரிது கேள்'' என்று இருபதாம் நுாற்றாண்டு பாரதியார் சொன்னதை பத்தாம் நுாற்றாண்டு அக்காவும், தம்பியும் நிர்மாணித்து நிரூபணம் செய்திருக்கின்றனர்.

கட்டடக்கலை, சிற்பக்கலை, வெண்கலச் சிலைக் கலை, ஓவியக்கலை, உழைப்புக்கலை, செய்நேர்த்திக் கலை, முயற்சிக் கலை, வியர்வைக் கலை, வித்தியாசக் கலை, பண்பாட்டு உருவாக்கக் கலை, வாழ்வியல் கலை, கலாசார மீட்டுருவாக்க கலை இப்படியாக எத்தனை எத்தனை கலைகளின் முக்கால வடிவம் இந்த கோயில்.

அன்றைக்கு நான் பரவசத்தில் ஆழ்ந்திருந்தேன். பிரமிப்பில் மூழ்கினேன். என் வசம் இழந்திருந்தேன். அவசரமாக கோயிலில் நுழைந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு, 'எனக்கு வேலை தா! குழந்தை தா! எனக்கு அது தா! இது தா!' என்பதான புகார் பட்டியல் ஏதுமில்லாமல் மனநிறைவுடன் நடந்தேன்.

என் கூடவே ராஜராஜசோழன் கூப்பிய கைகளோடு நடந்து வந்தான். தம்பியின் கம்பீரத்தை ரசித்தபடி இளைய பிராட்டியும் பட்டாடை சரசரக்க, கம்பீரமாக நடந்தாள். தலைமை சிற்பி குஞ்சரமல்லன் ராஜராஜ ராமபெருந்தச்சன் நடந்தான்.

யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. நிறைவின் உச்சத்திலும், உச்சத்தின் நிறைவிலும் மவுனம் தானே உன்னதமான பேச்சு மொழி. இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலத்தில் 20 டன் எடையுள்ள நந்தியை எல்லோரும் அன்போடு கரிசனமாக வருடிக் கொடுத்தோம். எங்களின் தாய்மை பெருக்கெடுப்பில் கல்நந்திக்கும் பால் பெருக்கெடுத்து வழிந்தோடியதை உணர முடிந்தது.

லிங்கம், லிங்க தரிசனம் என்ன சொல்ல? எப்படி சொல்ல? எதைச் சொல்ல? அல்லது சொல்லத் தான் வேண்டுமா? லிங்கம் தான் உருவம் அற்ற அருவம், அருவமற்ற உருவம். லிங்கம் தான் ஜனனத்தின் ஜனனம், மரணத்தின் மரணம். லிங்கம் தான் காலத்தின் காலம். ஞானத்தின் ஞானம். லிங்கம் தான் வாழ்வியலின் உயிர்மை. உயிர்மையின் வாழ்வியல்.

எண்பது டன் எடையுள்ள ஒற்றைக்கல்லை 216 அடி உயரமுள்ள கோபுரத்தில் எப்படி ஏற்றினர் என்று இப்போது கேட்கிறோம். 11 கி.மீ.,க்கு சரிவான அமைப்பை கட்டி, கல்லினை உருட்டியபடி, சாரப்பள்ளம் முழுக்க தள்ளி வந்தது ராஜராஜசோழன், இளையபிராட்டி கண்ட கனவு தானே. கனவின் விதை வீரியமாக இருந்தால், நனவின் விருட்சம் காலம் வென்று நிற்கும். அதன் அடையாளம் தான் தஞ்சை பெரியகோயில்.

இத்தனையும் பேசாமல் பேசிய நாங்கள், மகாலிங்கத்தின் உச்சியில் பால் ஊற்றினோம். பூக்கள் அள்ளிச் சொரிந்தோம். திருநீறு அள்ளி இரு கை நிறைய பொழிந்தோம். பன்னீர் தெளித்தோம். ஜவ்வாதும், வாசனை திரவியங்களும் தெளித்தோம். இத்தனையும் செய்யச் செய்ய, கண்ணீர் காவிரியாக பெருக்கெடுத்தது. உச்சியில் இருந்து, உள்ளங்கால் வரைக்கும் புல்லரித்தது. உயிருக்கும் புளகாங்கிதம் ஆனது. மூச்சு முட்டியது.

சுவாசம் இல்லாத சுவாச நேரம் அது. பேச்சு இல்லாத பேச்சு நேரம் அது. கண்ணீர் இல்லாத கண்ணீர் நேரம் அது. வேலை இல்லாத வேலை நேரம் அது. மகிழ்ச்சி நேரம் அது. நெகிழ்ச்சி நேரம் அது. நிம்மதி நேரம் அது.

ஆயிரம் ஆண்டுகள் கடந்து, ஆறு நிலநடுக்கம் கடந்து, பல்லாயிரம் மனிதர்களை கடந்து, பல கோடி சூரிய சந்திரர்களை கடந்து, நம்மைப் போன்ற ரத்தமும், சதையுமான மனிதர்கள் கட்டிய கற்கோயில் இன்னமும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். அதற்கு ஒற்றைக் காரணம் பெரிய கோயிலின் மூலாதாரம் மகாலிங்கம்.

நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியைத் தான் புதுமை என்று நம் சிற்றறிவு சொல்கிறது. வெறும் கல்லால், மண்ணுக்கும் விண்ணுக்குமான தொழில் நுட்ப, கலை, கலாசார, தெய்வீகப் புதுமை செய்த அருள்மொழிவர்மன், இளைய பிராட்டியை விடவா, மகாலிங்கத்தை விடவா, இந்த கைக்கு எட்டும் துாரத்தில் இருக்கும் இறைமையை விடவா, அது தருகின்ற நிம்மதியை விடவா, வேறெந்த சந்தோஷமும் பெரிதாகி விட முடியும்?

ஒரு நடை போய் பாருங்கள்.

பெரிய கோயில் பெரிய தெய்வீகம்!

இன்னும் சொல்வேன்

ஆண்டாள் பிரியதர்ஷினி

அலைபேசி: 94440 17044






      Dinamalar
      Follow us