சொல்லடி அபிராமி (11) - பூர்வ புண்ணியம் மிக முக்கியம்
சொல்லடி அபிராமி (11) - பூர்வ புண்ணியம் மிக முக்கியம்
ADDED : ஜூலை 01, 2016 10:31 AM

இதையடுத்து பத்தாவது பாடலான 'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்' என்ற பாடலைப் பாடிய அபிராமி பட்டர், அதன் உட்பொருளைச் சொன்னார்.
நான்கு வேதங்களும் வேதநாயகியான அம்பிகையால் அருளப்பட்டவை. அந்த வேதங்களின் உட்பொருளாகிய பிரம்ம ஞானமாக விளங்கக் கூடியவள் அம்பிகையே. ஒருமுறை தேவர்கள் வெற்றிக் களிப்பில் ஆழ்ந்திருந்தனர்.
அவர்களின் வெற்றிக்குக் காரணம் பராசக்தி என்பதை மறந்த தேவர்கள் அகம்பாவத்தால் ஆட்டம் போட்டனர். தேவி அவர்கள் முன் ஒரு யட்சி வடிவில் தோன்றினாள்.
ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத அந்த வடிவைப் பார்த்து தேவர்கள் குழம்பினர். அக்னியை அழைத்து, 'அது யார் என்று அறிந்து வா' என்றனர்.
அக்னி யட்சியிடம் சென்று, 'அது பற்றி கேட்க, அந்த உருவமோ, 'முதலில் நீ யாரென்று சொல்!' என்று அதட்டியது.
'நான் அக்னி. இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் எரிப்பவன்' என்று இறுமாப்புடன் பதில் அளித்தான்.
'உடனே அந்த யட்சி அக்னி தேவனின் முன்னால் ஒரு புல்லை வைத்து, 'இதை எரி பார்க்கலாம்' என்றது. அவனும் அந்தப் புல்லை எரிக்க முற்பட்டான்.
முடியவில்லை. வேறு வழியின்றி தேவர்களிடம் சென்று அது யாரென்று தெரியவில்லை என்றான்.
அடுத்து தேவர்களால் அனுப்பப்பட்ட வாயுதேவன் முன்பும் ஒரு புல்லை வைத்த யட்சி 'இதனைத் தூக்கி வீசு பார்க்கலாம்' என்றாள். வாயுவும் பெரும்புயல் வீசச் செய்தான். அந்தப் புல் நகரவில்லை. அவனும் தேவலோகம் திரும்பி தன் இயலாமையை ஒப்புக்கொண்டான்.
இவ்வாறே பிருத்விதேவன், ஜலதேவன், ஆகாயதேவன் மற்றும் பலர் சென்று யட்சி போட்ட புல்லை சற்றும் அசைக்க முடியாமல் திரும்பிவிட்டனர்.
பிறகு இந்திரன் நேரில் சென்று பிரார்த்திக்க, அந்த உருவம் உமாதேவியாகக் காட்சி கொடுத்தது.
தேவி கூறினாள், 'தேவேந்திரனே! உங்கள் அகந்தையை அழிக்கவே நான் யட்சியாகத் தோன்றினேன். உங்களால் ஆவது ஏதுமில்லை. அனைத்தும் இறையருளே என்பதை உணர்வீர்களாக!' என்றாள்.
அபிராமபட்டர் இதைக் கூறி முடித்ததும் மன்னர், “நாமும் அறிந்தும் அறியாதவர்களாகவே இதுவரை இருந்து விட்டோம். இன்று தெளிவு பெற்றோம்!” என்றார்.
அடுத்து, “ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய்” என்ற பாடிய பட்டர்,
'பேரானந்த வடிவமாக என் அறிவாய் நிறைந்து பொங்கும் அமுதம் அம்பிகையே. சுகம் என்ற சொல்லுக்கு, துக்கம் என்ற எதிர்ப்பதம் உண்டு. இப்படி, நன்மை, தீமை, வரவு, செலவு, உண்டு இல்லை என எல்லாவற்றிற்கும் எதிர்ப்பதம் உண்டு. ஆனால், ஆனந்தம் என்ற சொல் குறிக்கும் உட்பொருள் நிலைக்கு எதிர்பதம் இல்லை. என்றும் ஆனந்தமயியாக உள்ள அம்பிகைக்கு மாற்றம் இல்லை. அவளே பொய்மையிலிருந்து வாய்மைக்கும், அறியாமை இருளிலிருந்து மெய்ஞானப் பேரொளிக்கும், மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வைத் தரும் அமுதமாகிய அறிவை நிறைவாகத் தந்து, அதில் பூரணமாய் நிறைந்தும் இருக்கின்றாள், என்று விளக்கமளித்த பட்டர் சொற்பொழிவைத் தொடர்ந்தார்.
பிரளயம் என்னும் உலகம் அழியும் காலத்தில், படைக்கும் பிரம்மனும் அழிவதால் பிரபஞ்சமே பிரம்ம மயானம் ஆகிறது. தமிழகத்தில் உள்ள திருவெண்காடு பிரளய காலத்தில் சிவசக்தி நர்த்தனமிடும் புண்ணிய தலமாகும். இங்கு பிரம்மனுக்கு சமாதி உண்டு. சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானின் உக்கிரத்தின் வெளிப்பாடாக விளங்கும் அகோர வீரபத்திர சுவாமியும் இங்கு வழிபடப்படுகிறார்.
பிரளயம் நான்கு. அவை, 'நித்தியம், நைமித்திகம், பிராகிருதம், அத்தியந்திகம்' என்பன. மனிதர்கள் தம் வாழ்வில் தவிர்க்க முடியாதது மரணமும், ஜனனமும். வாழ்வை முடிவுக்கு கொண்டுவரும் மரணமே நித்திய பிரளயமாகும்.
'உன்மேஷ நிமிஷோத்பன்ன புவனாவல்ல' என்றழைக்கப்படும் அம்பிகை தன் இமை மூடித்திறக்கும் நேரத்தில் கோடானு கோடி உலகங்களைப் படைக்கிறாள். பின் தானே அவற்றை பரிபாலித்து வருகிறாள். இறுதியில் அவளே தான் படைத்த அனைத்தையும் தன்னுடன் ஐக்கியமாக்கி கொள்கிறாள். உடனே மன்னர் பட்டரிடம், அப்படியானால், உலகம் மீண்டும் எப்படி தோன்றும் சுவாமி?” என்றார்.
கலகலவென சிரித்த பட்டர், “தோற்றமும், ஒடுக்கமும் அன்னையின் திருவிளையாடல்களே. உயிர்கள் மண்ணில் நடமாடுவதற்கும், அழிவதற்கும் சாட்சியாக உள்ளவள் என் அன்னை அபிராமி மட்டுமே” என்று விளக்கமளித்தார்.
இதையடுத்து, “கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம்,” என்ற பாடலைப் பாடிய பட்டர் அதற்கான விளக்கத்தை தொடர்ந்தார், “ஒருவனுக்கு இறை பக்தி ஏற்படுவதற்கு அவனது பூர்வ புண்ணியமே காரணம். அது இல்லாதவர்களுக்கு யார் எப்படி கற்றுக்கொடுத்தாலும் கடவுள் பக்தி ஏற்படுவது இல்லை. பக்தியால் வாழ்வின் சோதனைகள் பலவற்றை எதிர்கொள்ள முடியும். பக்தி இல்லாதவர்கள் வாழ்வின் பல துன்பங்களையும் அனுபவித்து கடைசியில் முதுமை வரும் போது மரண பயத்தால் வருந்துவர். வாழ்நாள் முழுவதும் பக்தி செய்து இறைவனை வழிபட்டு வருபவர்கள் இறக்கும் தருவாயில் தெய்வீக காட்சிகளையே தரிசனம் செய்வர். அதனால் சிறிதும் அச்சமின்றி, வெள்ளரிப்பழம் தன் கொடியிலிருந்து எவ்வாறு பழத்திற்கு யாதொரு பாதகமின்றி பிரிந்து கொள்கிறதோ, அவ்வாறு பக்குவ நிலையடைந்து இறைவனைச் சென்றடைகின்றனர். பக்தி இல்லாதவர்கள் சாகும் தருவாயில் பல விபரீதமான தோற்றங்களை கண்டு அஞ்சியும் அரற்றியும் பிதற்றியும் துன்புறுகின்றனர்.
சுந்தரன் என்பவன் பக்தியில்லாத குடும்பத்தில் பிறந்தான். எப்போதும் மதுவில் மயங்கிக் கிடங்கும் தந்தை, பொறுப்பில்லாத தாயார், ஒழுக்கங்களற்ற உடன்பிறந்தோர். வறுமை ஆகியன குடும்பத்தை வாட்டின. ஒரு நாள் ஒரு கோவிலில் வித்வான் ஒருவர் நிகழ்த்திய உபன்யாசத்தைக் கேட்டான்.
“நாம் பக்தி சிரத்தையோடு அம்பிகையின் புகழை போற்ற வேண்டும். அதற்கு நீங்கள் நல்லவர் கூட்டத்துடன் இணையவேண்டும். அம்பிகையின் அடியார் கூட்டத்தில் இணைவது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கும் பூர்வபுண்ணியம் வேண்டும். அவ்வாறு இணைந்தால் நீங்களும் அம்பாளின் பெயரைச் சொல்வீர்கள். இந்த நாமஸ்மரணை முன்வினை பாவங்களை போக்கி புண்ணிய பலத்தைக் கூட்டும்... நீங்கள் துன்பம் நீங்கி பேரானந்த நிலை அடைவீர்கள்...' என்றார் பேசியவர்.
கூட்டம் முடிந்ததும் சுந்தரன் அந்தப் பெரியவரின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான், வாஞ்சையுடன் அவன் தோள்களைப் பற்றி தூக்கிய வித்வான், 'என்னப்பா? என்ன வேண்டும்?' என்று வினவினார்.
சுந்தரன் தழுதழுத்த குரலில் கேட்டான்.
'சுவாமி நாள்தோறும் நாமஸ்மரணை செய்ய வேண்டும் என்று கூறினீர்களே, அந்த நாமம்தான் என்ன?'
கலகலவெனச் சிரித்த வித்வான், 'என்ன தம்பீ! அம்பிகைக்கு ஆயிரமாயிரம் நாமங்கள் உண்டல்லவா? அதில் எதைச் சொன்னால் தான் என்ன? அது நம்மை சுழல் நடுவிலிருந்து மீட்டுச் செல்லும் மீட்டு ஓடமாக நம்மைக்காக்கும்.' என்றார்.
கலங்கிய கண்களும், வணங்கிய கரங்களுமாக நின்றிருந்த சுந்தரனின் வாழ்வில் திருப்புமுனையான அந்த நேரம் வந்தது. அவனிடம், ''நீ முற்பிறவியில் கணபதி, சிவன், சக்தி, சூரியன், முருகன் ஆகியோரை வணங்கி வந்த புண்ணியம் உடையவன். எனவே உனக்கு ஏதேனும் ஒரு பிறவியில் ஸ்ரீ வித்தை அறியும் பாக்கியம் உண்டு. அது விரைவில் உனக்கு சித்தியாகும். முற்பிறவியில் சக்தி உபாசகர் ஒருவரை நிந்தனை செய்த பாவத்தால் நீ இப்பிறவியில் ஒழுக்கமற்ற குடும்பத்தில் பிறந்து விட்டாய். அப்பாவத்தை நீ தொலைக்க வேண்டும்,” என்று திரிகால ஞானியைப் போல தன்னைப் பற்றி பேசிய அந்த வித்வானிடம் சுந்தரன் ஒரு கேள்வி கேட்டான்.
- இன்னும் வருவாள்
முனைவர் ஜெகநாத சுவாமி