sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லடி அபிராமி (13) - ஆடு மேய்ப்பவனுக்கு அருள்

/

சொல்லடி அபிராமி (13) - ஆடு மேய்ப்பவனுக்கு அருள்

சொல்லடி அபிராமி (13) - ஆடு மேய்ப்பவனுக்கு அருள்

சொல்லடி அபிராமி (13) - ஆடு மேய்ப்பவனுக்கு அருள்


ADDED : ஜூலை 14, 2016 11:03 AM

Google News

ADDED : ஜூலை 14, 2016 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடுத்து, “வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்” என்ற பாடலைப்பாடிய அபிராமி பட்டர் அதற்கான விளக்கமளித்தார்.

“அம்பிகையின் அருள்வேண்டி தேவர்களும், அசுரர்களும் வழிபடுகின்றார்கள். பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் அவளை தங்கள் மனதில் நிலைநிறுத்தி சதாசர்வ காலமும் தியானித்துக் கொண்டிருக்கிறார்கள். சக்தியின் பக்தர்களும் அம்பிகையை தங்களுடைய உள்ளத்தில் கட்டிவைத்துள்ளனர். அதனால் அவர்கள் அழியா பரமானந்த நிலை அடைகின்றனர். ஆனால் குழந்தை உள்ளத்துடன் வழிபடுமுறைகளோ, தியான முறைகளோ, யோக சாதனங்களோ எதுவும் தெரியாமல் உன்னை தரிசனம் செய்தால் போதுமென்று உன் கோவிலுக்கு வந்து உன்னை சந்திக்கும் எளிய பக்தர்களுக்கு அற்புதமான குளிர்ந்த அருளை அள்ளி வழங்குகிறாய் தாயே!” என்பதே இப்பாடலின் உட்கருத்து என்றார்.

இதோ ஒரு கதையைக் கேளுங்கள்!

முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் ஓர் உயரமான மலை மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இருந்தார். அவர் தவத்தில் ஈடுபட்டு பல காலமாகியும்

அம்பிகையின் அருட்காட்சியைக் காண முடியவில்லை. உடல் மெலிந்து, தலைமுடியும், தாடியும் புதர்போல வளர்ந்து விட்டது. ஆண்டுகளோ உருண்டோடின. அப்போது ஒருநாள் ஆடுகளை மலை மீது ஓட்டி மேய்க்கும் சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். முனிவரின் தவக்கோலம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்படியாவது அவரிடம் பேசிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிச் சென்று சில கனிகளைப் பறித்து வந்து காத்திருந்தான். சிலமணி நேரம் கழித்து முனிவர் கண்களைத் திறந்தார்.

சிறுவனைப் பார்த்து, 'யாரப்பா நீ? இந்த அடர்ந்த கானகத்தில் என்ன செய்கின்றாய்?' என வினவினார். சிறுவனும், 'சுவாமி! நான் ஆடுகளை மேய்த்துப் பிழைக்கும் மலைவாசி. இதோ இந்த பழங்களை ஏற்றுக்கொண்டு என்னை ஆசீர்வதியுங்கள்!' எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

முனிவரும் சிறுவனை ஆசீர்வதித்து பழங்களை எடுத்து சாப்பிட்டார்.

சிறுவன் முனிவரை நோக்கி, 'ஆமாம் சுவாமி, தாங்கள் இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டான்.

முனிவரும் சிரித்துக்கொண்டே, “மகனே! அது உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனாலும் நீ கேட்பதற்காகச் சொல்கிறேன். நான் நீண்ட நெடுங்காலமாக அன்னை ஆதிபராசக்தியை நேரில் காண வேண்டி தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆண்டுகள் பலவாகியும் அன்னையின் கருணை இன்னும் எனக்கு கிடைக்கவில்லை...' என்று கூற, சிறுவன் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

'யாரைச் சொல்கிறீர்கள் சுவாமி? அந்த ஆத்தாவைத்தானே? அவளைத்தான் நான் தினமும் பார்க்கிறேனே? இதோ!

உங்களுக்குக் கொடுத்ததைப் போல தினமும் அவளுக்கு பழங்கள் தருவேனே? அவளும் பாவம்! உங்களைப் போலவே தனியாக இந்தக் காட்டில் அந்த பாழடைந்த கோவிலில் உட்கார்ந்திருக்கிறாள். அவளைப் பார்க்க வேண்டியா இத்தனைக் காலம் காத்திருக்கிறீர்கள்? என்னோடு வாருங்கள்! அவளை உடனே இப்பொழுதே காட்டுகிறேன்' என்று கூறிய சிறுவன் முனிவரின் கையைப் பிடித்திழுக்க, முனிவரும் செய்வதறியாது அவனுடன் சென்றார்.

மூன்று பெரிய பள்ளங்களில் இறங்கி நடந்தபின் அந்த வன பத்திரகாளி கோவில் வந்தது. அதிக பராமரிப்பின்றி சற்றே பாழடைந்த நிலையில் இருந்தது. சிறுவன் முனிவருடன் கோவிலுக்குள் நுழைந்தான். கர்ப்ப கிருஹத்தில் வனபத்திரகாளி கரியமேனியும், செவ்வாடையும், வனத்தில் பூத்த மலர் மாலையுடனும், மஞ்சள் முகத்துடனும் பேரழகு சொரூபியாகக் காட்சி அளித்தாள்.

சிறுவன் நேராக கர்ப்ப கிருஹத்துள் நுழைந்து அந்த சிலையின் கால்களைப் பிடித்துக்கொண்டான். 'ஆத்தா! பாரு இங்கே உன்னைப் பார்ப்பதற்காக சாமி ஒருத்தர் வந்திருக்காரு 'என்று சொன்னபடி முனிவரைப் பார்க்க முனிவரோ ஏதும் விளங்காது நின்றார்.

பிறகு சிறுவனைப் பார்த்துக் கேட்டார், “மகனே! இது வெறும் சிலைதானே! நான் பார்க்க தவமிருப்பது உண்மையான அம்பிகையை அல்லவா?”

'இல்லை சுவாமி! இது சிலையில்லை. உண்மையான ஆத்தா தான். நன்றாக உற்றுப்பாருங்கள்...' என்று சிறுவனின் ஆணித்தரமான குரலால் ஈர்க்கப்பட்ட

முனிவர் அந்த அம்மன் சிலையை உற்று நோக்கினார்.

ஒருசில நொடிகளில்... எங்கிருந்தோ பெருங்காற்று வீசியது. காற்றில் விளக்குகள் அசைந்தன. மணியோசை முழங்கியது.

சிலாரூபமாக அமர்ந்திருந்த அம்பிகையின் திருமேனி அசைந்தது. ஆம்! சாட்சாத் அம்பிகை ஐம்புலன்களால் மனிதர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வடிவத்தில் அருட்காட்சி தந்தாள்.

முனிவரோ உணர்ச்சிப்பெருக்கில் தத்தளித்தார். 'அன்னையே! ஆதிபராசக்தி! உன் திருவடிகள் சரணம் சரணம் அம்மா! ஆண்டாண்டு காலமாய் தவமிருந்தும் காட்சி தராத நீ சிறுவனின் களங்கமற்ற அன்பிற்கும், பாசத்திற்கும் இறங்கிவந்து அருள்மழை பொழிந்து நிற்கின்றாயே? என்னே அதிசயம்!' என்று அவளது பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

'ஆபால கோபல விதிதாதைய நம:' என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. குழந்தை உள்ளத்துடன் தன்னைத் தேடும் பக்தர்களுக்கு அம்பிகை உடனே அருள்புரிவாள் என்பது இதன் பொருள். அம்பாளைக் காண பெரிய வழிபாடுகளோ, தவமோ, யோகமோ தேவையில்லை. பூரண சரணாகதி ஒன்றே போதும்.

இதையடுத்து, “தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்” என்ற பாடலைப் பாடிய பட்டர் பொருளை விளக்கினார். “தனக்கு வாய்த்த அனேக பிறவிகளில் கோடிக்கணக்கான தவங்கள் செய்பவர்கள் அம்பிகையின் அருளுக்கு பாத்திரராகி, பிறவா நிலைய அடையும்

தருவாயில், இந்தப் புவியில் உள்ள பொருள்மயமான செல்வங்களை மட்டுமா பெறுவார்கள்? அவர்களுக்கு அம்பிகையே தனது சியாமளா ரூபமாகிய ராஜமாதங்கீஸ்வரி வடிவில் காட்சியளித்து மேலான முக்தி நிலையாகிய வீடுபேற்றினை வழங்கி அருள்வாள்,” என்றார்

அது குறித்த விளக்கத்தை தொடர்ந்தார்.

இன்னும் வருவாள்

முனைவர் ஜெகநாத சுவாமி






      Dinamalar
      Follow us