sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லடி அபிராமி (7) - மாயா முனிவர்

/

சொல்லடி அபிராமி (7) - மாயா முனிவர்

சொல்லடி அபிராமி (7) - மாயா முனிவர்

சொல்லடி அபிராமி (7) - மாயா முனிவர்


ADDED : ஜூன் 08, 2016 12:09 PM

Google News

ADDED : ஜூன் 08, 2016 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபிராமி பட்டரின் அடுத்த பாடல் இது.

மனிதரும் தேவரும் மாயா முனிவரும்வந்து சென்னிக்

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயுமென் புந்தி எந்நாளும் பொருந்துகவே!

இதன் பொருளை அவர் கூறலானார்...

“அன்னை அபிராமி மனிதர்களும், தேவர்களும், முனிவர்களும் வந்து வணங்கும் சேவடிகளை உடையவள். சடைமுடியில் கொன்றை மலரும், பனிபோல் குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அணிந்திருக்கும் புனிதராகிய சிவனும், நீயும் என்றும் என் மனதில் நீங்காது நிறைந்திருக்க வேண்டும்.” என்றவர், “அன்பர்களே! சக்திதான் அனைத்திலும் பெரியவள். மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் தியானிப்பது சக்தியைத்தான். ஆனால் அவர்கள் இயற்றும் சக்தி வழிபாடு, சிவனை வணங்காமல் நிறைவடைவதில்லை. ஏனெனில் சக்தியே சிவனை வழிபட்டு தியானித்திருப்பவள்! சிவபெருமானை வழிபாடு செய்தாலும், அதுவும் சக்தியை வழிபடாமல் பூர்த்தி ஆவதில்லை. காரணம், சிவன் தன் மனதில் எப்போதும் தியானித்திருப்பது சக்தியை அல்லவா? எனவே ஸ்ரீவித்தை மரபில் சிவசக்தியே ஏக உருவில் தியானிக்கப்படுகின்றது” என்றவர் விளக்கவுரையைத் தொடர்ந்தார்.

“ஒருமுறை மனிதர், தேவர், முனிவர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சக்தி வழிபாடே உயர்ந்தது எனவும், சிவ வழிபாடே சிறந்தது எனவும், இரண்டும் ஒன்று தான் என்றும் சர்ச்சை ஏற்பட்டது. மூவரும் தமது வாதங்களை மெய்ப்பிக்க வேள்வி தொடங்கினர். மனிதர்கள் சக்தியை வேண்டியும், தேவர்கள் சிவனை வேண்டியும் யாகம் செய்தனர். ரிஷிகள் வழிபாடு ஏதுமின்றி சிவசக்தி ஐக்கிய பாவனையுடன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டனர்.

காலப்போக்கில் மனிதர்களுக்கு இயற்கைப் பேரழிவு, கர்ம வினையால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சிவசக்தி பேதத்தால் உண்டாகும் துன்பம் ஆகியவை ஏற்பட்டன. அதனால் அவர்களுக்கு வழிபாட்டைப் பூர்த்தி செய்ய முடியாமல் போயிற்று.

தேவர்களின் இன்ப நாட்டங்களால் சிவபூஜை பாதியில் நின்றது. ஆனால் முனிவர்கள் மட்டும் இயற்கை சீற்றங்களும், கால மாற்றங்களும், இன்பங்களும் வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருநாள் அம்மையப்பர் அவர்களுக்கு காட்சியளித்தனர்.

'ரிஷிகளே! சிவசக்தியை நீங்கள் தியானித்ததால் மூவகைத் துன்பங்களும், ஆயிரம் வகை இன்பங்களும் உங்களை பாதிக்காமல் நிஷ்டை கைகூடப் பெற்றீர்கள். ஆகையால் இன்றுமுதல் நீங்கள் சாகாவரம் பெறுகிறீர்கள். மனிதர்களோ பிணி, மூப்பு, மரணம் என்ற நிலைகளை பெறுவர். தேவர்களும் பிரளய காலத்தில் அழிவுறுவர், ஆனால் முனிவர்களாகிய உங்களுக்கு எங்களைப் போன்றே என்றும் அழிவில்லை,” என்று அருளி மறைந்தனர்.

அன்று முதல் ரிஷிகள் அழிவற்றவர்களாக இப்பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அகத்தியர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் யாவரும் என்றும் வாழ்பவர்கள்,” என்று அபிராம பட்டர் கூறியதும், மன்னரும் மக்களும் 'ஓம் சிவசக்தி' என்று

கோஷமிட்டனர்.

'ஆகா! என்ன அற்புதமான விளக்கம். அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்பவர்க்கு சாகாவரம் உண்டென்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?” என்ற மன்னர் பட்டரை வணங்கினார்.

அடுத்து,

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!

என்று பாடிய பட்டர்,

“மூன்று உலகங்களில் எழுந்தருளுபவளும், ஸ்தன பாரத்தால் வருந்தும் இடைகொண்டவளுமான உமாதேவியே! சிவபெருமான்

அகிலத்தைக் காக்க அருந்திய நஞ்சை அமுதாக்கியது போல, என்னை அழிக்கும் கொடிய நஞ்சாகிய வினைப்பயன்களை மாற்றி அருள வேண்டும். அதற்கு உன் திருவடியின் திருவருள் வேண்டும்,” என்று பொருளுரைத்தார்.

அகிலம் காக்கும் அகிலாண்டேஸ்வரி மனோன்மணியானது எவ்வாறு?

பாணாசுரன் என்னும் சிவபக்தன் மூவுலகையும் தன் தகாத செயல்களால் நிலைகுலையச் செய்தான். தனக்கு நித்திய கன்னி ஒருத்தியால் மட்டுமே மரணம் நேரிட வேண்டும்' என்ற வரத்தைப் பெற்றிருந்தான்.

எனவே அட்டூழியம் செய்த அவனை அழிக்க சிவன் உமாதேவியை தென்கோடிக்கு அனுப்பினார். தேவியும் குமரியென்ற பெயரில் அங்கு பிறந்து சிவபூஜை செய்து வந்தாள். பெற்றோர் அவளுக்கு மணமகனைத் தேடினர். குமரியோ 'மணந்தால் சிவனைத்தான் மணப்பேன்!' என்றாள். மகளின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய பெற்றோர் கயிலை சென்று சிவனிடம் குமரியின் விருப்பத்தை தெரிவித்தனர். சிவனும் இசைவு தந்தார். பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.

இதையறிந்த இந்திரலோகம் கலக்கமடைந்தது. 'குமரி கன்னியாக இருந்தால் மட்டுமே பாணாசுரனை அழிக்க முடியும். திருமணம் நிகழ்ந்து விட்டால் பாணாசுரன் சாகாவரம் பெற்றுவிடுவான்' என அஞ்சினர்.

மணநாள் நெருங்கியது. தேவர்களுக்காக இந்த திருமணத்தை நிறுத்த எண்ணிய நாரதர், முகூர்த்தவேளைக்கு இரு நாழிகை முன்னதாக சேவல் வடிவம் தாங்கிக் கூவினார். இதனால் அனைவரும் 'ஐயோ! முகூர்த்தவேளை தவறிவிட்டதே! இனி சென்று வேறு நாள் குறித்து வருவோம்!' என்று திரும்பி விட்டனர். சிவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் ஏதும் கூறாது அவர்களுடன் திரும்பிவிட்டார்.

ஏமாந்து போன குமரி மிகுந்த கோபம் கொண்டு உக்கிரத்தை வெளிப்படுத்தினாள். அத்தருணம் பார்த்து எதிரில் வந்த பாணாசுரனை வதம் செய்தாள். அதர்மம் அழிந்தது. அன்னையின் குமரி அவதாரத்தால் உலகில் தர்மம் நிலைநாட்டப்பட்டது. தேவர்களின் வாழ்த்தொலியால் குளிர்ந்த அன்னை, தன் விஸ்வரூப நிலை தணிந்து மீண்டும் எழிற்கோலம் கொண்டாள். ஆனால் மானிட வடிவம் தாங்கியதால், தன் திவ்ய சரீரத்தை சிலை வடிவாக்கி தென்கடல் நோக்கி நின்றாள். அவளையே கன்யாகுமரி என்கிறோம் .

அதே நேரம் கயிலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த சிவன் தன் பரிவாரங்களுடன் கொங்கு நாட்டைக் கடக்கும் வழியில் வெள்ளியங்கிரி மலை வந்து சேர்ந்தார். தவத்தில் அமர்ந்து சக்தியை தியானித்தார். தென்கோடியில் தனித்து நின்ற குமரியன்னை சிவபெருமானின் தவத்தால் ஆகர்ஷிக்கப்பட்டாள். சிவசக்தி ஐக்கியம் மாபெரும் பேரொளியைத் தோற்றுவித்து, வெள்ளியங்கிரி மலை உச்சியில் ஒளிர்ந்தது.

அங்கு சிவபெருமான் அருளியதாவது, 'அன்பர்களே! கயிலையில் இருக்கும் எம்மை தேவர்களும், ரிஷிகளும் மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் 'தட்சிண கயிலை'யான இங்கு நான் வெள்ளியங்கிரி ஆண்டவர் என்றும், பார்வதிதேவி 'மனோன்மணி' என்றும் பெயர் கொண்டு இங்கேயே எழுந்தருளி உலகோர்க்கு அருள்பாலிப்போம். கயிலை சென்ற புண்ணியம் இந்த தென்கயிலை வந்து தரிசிக்கும் அன்பர்களுக்கு கிடைக்கும்' என்று அருளினர்.

அன்று முதல் அம்பிகைக்கு 'மனோன்மணி' என்ற நாமம் தோன்றியது.

- இன்னும் வருவாள்

முனைவர் ஜெகநாத சுவாமி






      Dinamalar
      Follow us