sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (14)

/

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (14)

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (14)

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (14)


ADDED : ஜன 03, 2020 01:01 PM

Google News

ADDED : ஜன 03, 2020 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரியாத கணக்கு

அந்த கார்ப்பரேட் மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் மனைவி எக்ஸ்ரே எடுக்க உள்ளே சென்றிருந்தாள். வெளியே அமர்ந்தபடி நான் நோட்டமிட்டேன். அப்போது, ''ரொம்ப நன்றி ஆடிட்டர் சார். அந்த ஆளைப் பத்திச் சரியான நேரத்துல தகவல் கொடுத்தீங்க. இல்லாட்டி நானும் அவன்கிட்ட மாட்டியிருப்பேன். மனுஷங்கள எடை போடறதுல நீங்க கில்லாடி சார்.”

சொன்னவர் என் வாடிக்கையாளர். சிறிது நேரம் பேசி விட்டு அவர் போய்விட்டார்.

என் அருகில் இருந்த பெண் ஒருத்தி என்னையே குறுகுறு என பார்த்தாள்.

“பெரிய ஆளுய்யா நீ! மனுஷங்களத் துல்லியமா எடை போடுவியாமே!”

“முதல்ல அடுத்தவங்க பேசறத ஒட்டு கேக்கறது தப்பு. ரெண்டாவது அறிமுகம் இல்லாதவங்கள ஒருமையில அழைக்கறது அதை விட தப்பு.”

“சரிப்பா ரெண்டு தப்பு பண்ணிட்டேன். இப்போ என்னை எடை போடு பார்ப்போம்.”

“வம்புக்கு அலையற பொம்பளை.”

“நான் எதற்கப்பா வம்புக்கு அலையணும்? எனக்குத் தெரியாமல் ஒரு அணு கூட அசையாதே! மகனை ஒருமையில் அழைக்கும் உரிமை தாய்க்கு இல்லையா என்ன?”

வேர் அற்ற மரமாக பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன்.

“நான் செய்த செயலை வைத்து என்னை எடை போடு பார்க்கலாம்''

“தாயே நீங்களோ கரை காணாத கடல். இந்தச் சின்னச் சுள்ளியால் உங்களை எப்படி அளக்க முடியும்?”

“நமக்குள் ஒரு விளையாட்டு என நினைத்துக் கொள்”

“நான் சொல்வதைக் கவனமாக கேள். மாலதி, நந்தினி என இரு பெண்கள். இருவருக்கும் கர்மக் கணக்கில் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள்.

குடும்பச் சூழல் காரணமாக இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மூத்தவள் மாலதிக்குக் காலாகாலத்தில் திருமணம் நடந்தது. கணவன் அரசுப்பணியில் நல்ல வருமானத்தில் இருக்கிறான். அவளும் வேலை செய்கிறாள். குடும்பம் செழிப்பாக இருக்கிறது. அவளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும். மகன் பொறியியல் படிக்கிறான். மகள் பள்ளிப்படிப்பை முடிக்கப் போகிறாள். எப்படியும் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாலதி கடவுள் நம்பிக்கையோ, பிறருக்கு உதவும் எண்ணமோ இல்லாதவள்.

“இளையவள் நந்தினியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, தாயே!”

“நந்தினி என்னுடைய பக்தை. அபிராமி அந்தாதியை தினமும் சொல்வாள். வாரம்தோறும் கோயிலுக்கு வருவாள். அவளை மிகவும் பிடிக்கும்.”

“அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது தாயே!”

“அவளுக்கும் உரிய வயதில் திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தான். சம்பளம் பெரிதாக இல்லை. அதையும் குடித்தே அழிக்கிறான். எப்போதும் நந்தினியுடன் சண்டையிடுவான்.

“குழந்தைகள்?”

“இல்லை. மூன்று ஆண்டுக்கு முன் நந்தினிக்கு மார்பக புற்று நோய் வந்து, மார்பகங்களை எடுத்து விட்டனர். விஷயம் அறிந்ததும் கணவன் ஓடி விட்டான். விவாகரத்து கிடைத்த பின் அவள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறாள்.

“என்ன அநியாயம் தாயே? ஏன் இந்த விபரீத விளையாட்டு?”

“நான் கருணை இல்லாதவள் என நீயே முடிவு கட்டி விட்டாய் அல்லவா?”

“ஏன் இப்படிச் செய்கிறீர்கள்...தாயே?”

“என்னுடன் வா. உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன்.”

அன்னை நடந்தாள். நானும் தொடர்ந்தேன். அந்த கார்ப்பரேட் மருத்துவமனையின் டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றோம்.

இங்குள்ள நர்சாக இருக்கும் பெண்ணின் நடவடிக்கையைக் கவனி.

அவள் அழகாக இருந்தாள். முகம் திருத்தமாக இருந்தது. நல்ல நிறம். ஆனால் முகத்தில் கடுகடுப்பு.

“உன்னைப் பத்து மணிக்கு வரச் சொன்னா பத்தரை மணிக்கு வர்றியே? மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்க?”

''பஸ் கெடைக்கலை''

“பஸ் கெடைக்கலன்னா நடந்து வா. இல்ல உருண்டுகிட்டே வா. ஆனா நேரத்துக்கு வரணும். ஓசி ட்ரீட்மெண்ட், அதுக்கு இவ்வளவு பம்மாத்து வேற.”

அந்தப் பெண்ணின் முகம் அவமானத்தால் சுருங்கியது. அங்கே இருந்தவர்களை எல்லாம் வார்த்தை அம்புகளால் குத்திக் காயப்படுத்தினாள் நர்ஸ்.

முதியவர் ஒருவர் முணுமுணுத்தது காதில் விழுந்தது.

“நோயால படற வேதனையை விட வார்த்தையால படும் வேதனை ஜாஸ்தியா இருக்கே”

“என்ன கொடுமை தாயே!”

“என்னுடன் வா. இன்னொரு ஆளையும் நீ பார்க்க வேண்டும்.

புற்று நோய் பிரிவிற்கு அழைத்துச் சென்றாள் அன்னை.

அங்கே இருந்த நர்ஸ் பார்க்க இன்னும் அழகாக இருந்தாள். குட்டைக் கூந்தல் அவளுக்கு ஒருமாதிரியான கம்பீரத்தைக் கொடுத்தது.

“வாங்க தாத்தா! எப்படி இருக்கீங்க? மருந்தெல்லாம் ஒழுங்காச் சாப்பிடறீங்களா? இதோ...இங்க உக்காருங்க. பிரஷர் பார்க்கலாம்'' என அங்கிருந்த முதியவரிடம் அன்பாகப் பேசினாள். கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற அவரது மனைவியை உற்சாகப்படுத்தினாள்.

“பயப்படாதீங்க பாட்டி. எங்க டாக்டர் கைராசிக்காரர். அவர் கைபட்டாலே எல்லாம் சரியாயிடும். மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. நான் சொல்லிக் கொடுத்த அபிராமி அந்தாதி பாடலை பாடிக்கிட்டே இருங்க.”

அவளது அன்பில் கரைந்ததால், தங்களுக்கு வந்திருக்கும் புற்று நோயை சற்று நேரம் மறந்தனர் அங்கிருந்த நோயாளிகள்.

“உனக்கு ஒரு கேள்வி. இந்த இரண்டு பெண்கள் தான், நான் சொன்ன மாலதியும் நந்தினியும். யார் மாலதி யார் நந்தினி என சொல் பார்க்கலாம்.”

“ப்பூ.. இவ்வளவுதானா? கணவன், குழந்தை என்று செல்வச் செழிப்புடன் நலமாக வாழும் மாலதி நோயாளிகளிடம் அன்பாகப் பேசுகிறாள். குடும்பத்தையும், வாழ்வையும் தொலைத்த நந்தினி அங்கே டயாலிசிஸ் பிரிவில் தன் ஆற்றாமையை நோயாளிகளிடம் காட்டிக் கொண்டிருக்கிறாள்.”

“உன்னைப் போய் மனிதர்களை எடைபோடுவதில் வல்லவன் என ஒரு மடையன் சொன்னானே அவனைச் சொல்ல வேண்டும்.”

“என்ன சொல்கிறீர்கள், தாயே!”

“வாழ்வையே தொலைத்து விட்ட நந்தினி தான் நோயாளிகள் மீது அன்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். எல்லாம் இருந்தும் திருப்திப்படாத மாலதி தான் அங்கே டயாலிசிஸ் பிரிவில் எரிந்து விழுகிறாள்.”

“அன்பே இல்லாத அந்தப் பாதகிக்கு நல்ல கணவன், குழந்தைகள் செல்வம் என வாரி வழங்கியிருக்கிறீர்கள். நந்தினி என்ற நல்லவளுக்கு..”

“மாலதிக்கு வரங்கள் கொடுத்தது உண்மை தான். ஆனால் நந்தினிக்கு என்னையே வரமாகக் கொடுத்திருக்கிறேன்.”

“எப்படி?”

“நான் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன?”

“இருந்தாலும்''

“நந்தினி எவ்வளவு துன்பம் அனுபவித்தாலும் அவள் மனதில் உள்ள அன்பு சிறிதும் குறையாது. அந்த அன்பு இன்னும் தீவிரமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே அவளுக்குப் புற்று நோய், விவாகரத்து போன்ற பிரச்னைகளையும் கொடுத்திருக்கிறேன். கருப்புத் திரையில் பொன்னிற ஓவியம் இன்னும் அதிகம் மின்னுவது போல் அவள் அன்பு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இன்னும் நாலைந்து ஆண்டுகளில் அவள் இறந்து என்னுடன் இரண்டறக் கலப்பாள். அந்நிலையை மாலதி பெற இன்னும் ஆயிரம் ஜென்மங்கள் போதாது. வருமான வரிக்கணக்கு பார்க்கும் உனக்கு என் கணக்கு புரியாது.”

அன்னை மறைந்தாள். நான் அங்கேயே சிலையாக நின்றிருந்தேன்.

இன்னும் வருவாள்

தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us