sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கண் திறந்த பேரன்!

/

கண் திறந்த பேரன்!

கண் திறந்த பேரன்!

கண் திறந்த பேரன்!


ADDED : ஜூன் 05, 2014 05:20 PM

Google News

ADDED : ஜூன் 05, 2014 05:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிப்பெரியவர் மதுரை பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்தார்.

ஒரு கிராமத்தில் பெரியவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அப்பகுதி மக்களின் அன்பையும், ஆர்வத்தையும் கண்டு மகிழ்ந்த பெரியவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஊர்த்தலைவர் பெரியவரை வணங்கி, '' ஏழை ஜனங்களான நாங்க எல்லாம் சேர்ந்து பிள்ளையார் கோயில் புதுசா கட்டியிருக்கிறோம். சுவாமியின் பாதம் அங்க படணும்! கோயில் கும்பாபிஷேகம் சிறப்பா நடக்க ஆசியும் வழங்கணும்'' என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

பெரியவரும் கோயில் நோக்கிப் புறப்பட்டார். கர்ப்ப கிரகத்தில் ஆறடி உயர விநாயகர் வீற்றிருந்தார். அவரை வைத்த கண் வாங்கமால், சற்று நேரம் உற்று நோக்கினார் பெரியவர்.

''அதான் எல்லாமே பூர்த்தியாகிடுத்தே! ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலை?'' என்று தலைவரிடம் கேட்டார்.

''மதுரைக்கு காந்திஜி வர இருக்கார். அவர் வரும் போது, கும்பாபிஷேகம் நடத்தலாமுனு இருக்கோம்!'' என்று தெரிவித்தார்.

அதற்கு பெரியவர், ''விநாயகருக்கு 'நேத்ரோன் மீலனம்' என்று சொல்லும் கண் திறப்பு நடந்தாச்சு! இனி காலம் கடத்த வேணாம். கும்பாபிஷேகத்தை சீக்கிரம் நடத்துங்க!'' என்று சொல்லி ஆசி வழங்கினார்.

பெரியவர் இதைச் சொல்லும் போது, அந்தச் சிலையை செதுக்கிய சிற்பி அங்கு தான் இருந்தார். ''கும்பாபிஷேகம் நடத்துவதற்கு சற்று முன்பு தானே, சுவாமி சிலைகளுக்கு கண் திறப்பது வழக்கம்! நமக்குத் தெரியாமல் கண்திறப்பு எப்படி நடந்திருக்கும்? நான் தான் சுவாமிக்கு கண்ணையே திறக்கவில்லையே!'' என்ற சந்தேகம் எழுந்தது.

அப்போது 12 வயது சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். ''தாத்தா! சாமி சொன்னது உண்மை தானுங்க! பத்து நாளைக்கு முன்ன, இந்த புள்ளையார் சிலை செய்த உங்க பேரன் இங்கு எங்களை கூட்டியாந்தான். எங்க தாத்தா இப்படித் தான் சாமி கண்ணைத் திறப்பார் என்று சொல்லிக்கிட்டே, சின்ன உளியைக் கையில எடுத்தான். ''புள்ளையாரே! கண்ணைத் திற!'' என உரக்கச்

சொன்னான். எங்களையும் சொல்லச் சொன்னான். அப்போ புள்ளையார் கண்ணுல 'டொக்! டொக்!' என்று உளியால் தட்டினான். நாங்க எல்லாரும் 'கணபதி கண்ணைத் திறந்தாச்சு!' என்று சொல்லி ஆடினோம்,'' என்றனர்.

உடனே சிற்பி, ஒரு பூதக்கண்ணாடியின் மூலம் விநாயகரின் கண்களைக் பார்த்தார். கண்திறப்பு நடந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து பெரியவர் ''இனி சந்தேகம் வேண்டாமே! கும்பாபிஷேகம் நடத்தலாமே!'' என்று சொல்லி சிரித்தபடியே கைகளைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

மற்ற யாருக்கும் தெரியாத ஒரு தகவல், பெரியவருக்கு மட்டும் தெரிந்திருந்தது கண்டு, தலைவர் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர்.






      Dinamalar
      Follow us