ADDED : ஜூன் 22, 2023 11:15 AM

கோதை அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துார் வரலாறு
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்துாரின் வரலாறு எத்தனை சிறப்பானது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோமா? தமிழகத்தில் எத்தனையோ ஊர்கள் இருக்க ஆண்டாள் அவதரித்த இந்த கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக உள்ளது. இதன் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டாமா? மேற்கு மலைத்தொடரில் சித்தர் மலை என்னும் பழநி மலைக்குத் தெற்கிலும், குற்றால மலைக்குச் சற்றே வடக்கிலும் உள்ளது பரலிமலை. இதன் அடிவாரத்தில் மல்லி என்ற வேடுவப்பெண் வசித்தாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் வில்லி. இளையவன் கண்டன். வேடுவர் தலைவனாக வில்லி இருந்தான். இருவரும் இளம் வயதிலேயே தந்தையை இழந்தனர். இருவரும் பாசத்தில் ராம லட்சுமணரை போன்றிருந்தனர். தினமும் வேட்டைக்குச் செல்வார்கள் வெவ்வேறு திசைக்குச் சென்று வேட்டையாடிய விலங்குகளை தோளில் சுமந்தபடி ஓரிடத்தில் கூடுவர். பின் இருவரும் சேர்ந்து வீடு திரும்புவர். அந்த காட்டில் புலி ஒன்று நடமாடியது வில்லிக்கும் கண்டனுக்கும் இது தெரிந்தே இருந்தது.
புலி நடமாட்டம் இருப்பதால் கவனமுடன் வேட்டைக்குச் செல் என அண்ணன் ஒருநாள் தம்பியிடம் எச்சரித்தான். அதன்பின் இருவரும் வெவ்வேறு திசையில் வேட்டைக்கு சென்றனர். அண்ணன் வேட்டையாடி விட்டு வழக்கமாக கூடும் இடத்துக்கு வந்தான். தம்பியை காணவில்லை. தேடிச் செல்லும் போது ஓரிடத்தில் புலியால் தாக்கப்பட்ட தம்பி கிடப்பது தெரிந்தது. தம்பி இன்றி உலகில் தான் மட்டும் வாழ்வதா என நினைத்து பாறையில் தலையை மோதிக் கொண்டான் .
அப்பொழுது அங்கே வந்த ஒரு பெரியவர், 'உன் துயரை நான் தீர்க்கிறேன்' என்றார். அதற்கு வில்லி “ ஐயோ என் துயரை யாராலும் தீர்க்க முடியாது. என் தம்பி இறந்து விட்டான்'' என நடந்ததை கூறினான் வில்லி. அவனை அழைத்துக்கொண்டு இறந்து கிடக்கும் கண்டன் அருகே சென்றார் பெரியவர். ''கண்டா... கண்டா... எழுந்திரு” என்றார். என்ன ஆச்சரியம்! உயிரோடு எழுந்தான். அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான் வில்லி. '' உயிருள்ளவரை இந்த உதவியை மறக்க மாட்டேன்'' என பெரியவரின் காலில் விழுந்தான்.
அவனுடைய தோளைத் தொட்டு ''எனக்கு நீ ஒரு கோயில் கட்ட வேண்டும்” என்றார். வில்லி அசந்து போய் பதில் பேச முடியாமல் நின்றான். ஐயா நாங்களோ வேடர்கள். கோயில் கட்ட அவ்வளவு செல்வத்துக்கு எங்கே போவேன்?” என்றான்.
அந்த பெரியவர் இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு குகையைக் காட்டினார். அங்கே நவரத்தினம், பொன்மணிகளும் இருப்பதைக் கண்டு மலைத்தனர். பெரியவரோ சிரித்தபடி நின்றிருந்தார். ஐயா தாங்கள் யார் என்று சொல்லக்கூடாதா என்று இருவரும் கேட்க பெரியவர்,
“ மதுராபுரி சிறையில் ஒருத்தி மகனாய் பிறந்து கோகுலத்தில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன் நான்” என்றார். இருவரும் காலில் விழுந்தனர். இரண்டு ஆண்டுகளில் நகரமும் ராஜகோபுரத்துடன் கோயிலும் உருவாகின.
அப்போதைய பாண்டிய மன்னர் குணசேகரன் திறப்பு விழாவுக்கு தன் பரிவாரங்களுடன் வந்தார். ''மக்களே இந்த கோயிலை வில்லி திறப்பது நமக்கு பெருமை என்றார் மன்னர். ஆனால் பெரியவராக வந்த கண்ணன் இந்த கோயிலை திறக்க வேண்டும் என வேண்டினான் வில்லி. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோதி ரூபமாய் அந்த பெரியவர் வெளியே வந்தார். “ மல்லியின் மகனான வில்லியையும், பாண்டிய மன்னரையும் பாராட்டுகிறேன். இந்த ஊருக்கு வில்லிபுத்துார் என பெயர் சூட்டுகிறேன்'' என ஆசியளித்த பெரியவர் அங்கிருந்து மறைந்தார். ஏழாம் நுாற்றாண்டில் நடந்த நிகழ்வு இது.
இந்த ஆண்டாள் கோயில் 788 ல் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஒன்றான வீரபாண்டியன் கல்வெட்டில் இக்கோவில் 'ஜலசய நாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்' என குறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர் முதலாம் குலோத்துங்கன் (1070 -- 1120) ஆட்சியில் இந்த ஊர் விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டின்படி 'வடபெருங்கோவில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில்' எனப்பட்டதாக தெரிகிறது.
திருமலை நாயக்கர் (1623 -- 1659) ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் இந்த ஊர் மிகப்பிரபலமானது.
மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டை இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இக்கோட்டையை நடுமண்டலம் என்றனர். ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த பாளையக்காரர் பூலித்தேவனுடன் போரிட கான்சாகிப் ஸ்ரீவில்லிபுத்துாரில் முகாமிட்டார். மே 6, 1756ல் நடந்த போரில் அவரை வெல்ல இயலாமல் ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டையை கைப்பற்றி தரைமட்டம் ஆக்கினார். அந்த இடம் முழுவதும் இப்போது வீடுகளாகி கோட்டை தெருவாசல் என்னும் தெருவாக மாறிவிட்டது. இப்படியாக ஆண்டாள் கோயில் வரலாறு நம்மை அசத்துகிறது.
இப்படி ஆண்டாள் கோயிலில் அனைத்தும் பிரம்மாண்டம் தான். அதில் நம் மனதை ஈர்ப்பது நியாயம் தான். அந்த பெருமாளுக்கு கூடவா அப்படி! ஆம், ஒருசமயம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் செல்ல ஆர்வம் ஏற்பட்டது. ஏன் என பிராட்டி கேட்டதற்கு திருப்பாவையை கேட்க வேண்டும் என பதிலளித்தார். ஏன், எதற்காக? நான் அருளிய திருப்பாவை தான் எங்கும் ஒலிக்கிறதே என புருவத்தை உயர்த்தினாள். அதற்கு பெருமாள், ''எந்த பொருளையும் அது உருவான இடத்தில் வாங்குவது சிறப்பு. அதுபோல திருப்பாவையை ஸ்ரீவில்லிபுத்துாரில் கேட்க ஆவலாக உள்ளேன். இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் சென்று திருப்பாவையை அனுபவிப்போம்” என்றார் பெருமாள்.
ஆண்டாள் அவதரித்த வில்லிபுத்துாருக்கும் 'ஸ்ரீ' என்ற அடைமொழி பின்னாளில் வந்தது. அவள் ரங்கனை கரம் பிடித்த ஸ்ரீரங்கத்திலும் 'ஸ்ரீ' உள்ளது. 'ஸ்ரீ' என்றால் செல்வம். இந்தக் கோயிலுக்கு சிறப்பு அம்சங்கள் பல உள்ளன. அதை வரும் வாரங்களில் பார்ப்போம். அதுவரை ஆண்டாளை பற்றி கொண்டு தொடர்ந்து அவள் வழிநடப்போம்... வாருங்கள்!.
-தொடரும்
பவித்ரா நந்தகுமார்
82204 78043
arninpavi@gmail.com