ADDED : ஜூலை 02, 2023 09:30 AM

ஆண்டாள் கோயில் சிற்பங்களின் சிறப்பு
மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சி கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பங்கள் முக்கியமானதாக உள்ளது. கோயிலின் தொன்மை வரலாற்றை இந்த சிற்பங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் பிரகாரத்துக்கு முன்பு நிறைய சிற்பங்கள் உள்ளன. தலைக்கு மேலே பெரிதாக வைத்திருக்கும் இந்த சிலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்க வேண்டும் என்கிறார்கள். இதன் மூலம் யோகப்பயிற்சி செய்தால் என்ன கிடைக்குமோ அந்த நன்மை நமக்கும் கிடைக்கும்.
இக்கோயிலில் இருக்கும் கலைமகள் சிலையை துப்பாக்கிவழி பார்வையாக மூக்கின் முனையை தலையை மேலே இருத்தி தலை துாக்கி பார்த்தோமேயானால் அந்த வளைவு நம் தண்டுவடத்தை சீராக்கும். கருவறைக்கு முன்புள்ள யாளி சிலையை பார்த்துவிட்டு அதன் பிறகு சுவாமியை தரிசிக்கும் போது சற்று நேரத்துக்கு முன் மிருகத்தைப் பார்த்த போது இருந்த அச்சம் நீங்கி மகிழ்ச்சியும் பாதுகாப்பும் பெருகும். இங்குள்ள பல சிற்பங்களில் அக்குபஞ்சர் அமைப்பு காணப்படுகிறது. அவற்றை தொடும்போது நம்மால் அதை உணர முடிகிறது.
இங்கு பிரதானமாக வீற்றிருக்கும் கஜலட்சுமி சிற்பம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஈகோ பிரச்னையை தீர்க்கும். இதெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் சிறப்பான நுட்பத்தை நம் முன்னோர்கள் கையாண்டிருக் கிறார்கள். அதிலும் கோயிலை நிர்மாணிக்கும் போது ஆன்மிக நெறி மட்டுமின்றி உள்ளார்ந்த அனுபவத்திலும் மேன்மை பெற வேண்டும் என சிற்பிகள் பாடுபட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமா... சிற்பங்கள் மூலம் நம் பாரம்பரியம், வரலாற்றையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுறுத்தி, அரவணைத்து நம்மை பண்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பார்க்க வேண்டிய முறையும் கோணமும் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் மறைந்து போனதால் அதன் பெருமைகள் தெரியாமலேயே போனது.
சில சிலைகள் ஆபாசமாக இருப்பது போல் தோன்றுகிறதே என்போர் உண்டு. நம் மனதை ஒருங்கிணைப்பது அவ்வளவு சுலபமல்ல. கண்ணை மூடி தியானம் செய்ய ஐந்து நிமிடம் உட்கார்ந்தால் தெரியும். ஆனால் இப்படிப்பட்ட சிலைகளும் சிற்பங்களும் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் நம்மை ஈர்த்து மனதை அதிவிரைவில் ஒருங்கிணைத்து விடும். நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தி நம்மை சமப்படுத்தும். அது மட்டுமல்ல... அக்காலத்திலேயே எய்ட்ஸ் நோய் இருந்தது போலும்.
அதற்கான மருந்து என்ன, எப்படி குணப்படுத்தினார்கள் என்ற சூட்சுமம் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் துாணில் செதுக்கப்பட்ட சிற்பத்தில் காணக் கிடைக்கிறது.
இங்குள்ள மன்மதன், ரதியின் சிற்பங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளும் விதத்தில் இருக்காது. ஆனால் காதல் கைகூட எண்ணுபவர்கள் இரு சிலைகளையும் வழிபட்டால் காதல் கைகூடும். மன்மதனின் கால் விரல்கள் மனித விரல்கள் போலவே இயல்பாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, அவன் வில்லான கரும்பை தட்டினால் சிலையிலிருந்து வரும் சத்தம் போல இல்லை. நிஜ கரும்பை தொடுவது போன்ற உணர்வே உள்ளது. சிற்பக் கலையின் அதிசயம் இது.
இங்குள்ள ஒரு துாணில் அனுமன் சஞ்சீவி மலையை துாக்கியபடி வாலை எடுத்து தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமாக இருக்கிறார். சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது இந்த சிற்பம்! பார்த்து மகிழ வேண்டிய ஒன்று.
அடுத்ததாக கண்ணாடி மாளிகை. நம் வீட்டு பெரியவர்கள் ஞாயிறானால் திருஷ்டி சுற்றிப்போடு என்பார்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது அல்லவா... திருஷ்டி பற்றி அவரவருக்கு வரும் போது தான் உணர முடியும். திருஷ்டி கடவுளுக்கும் ஏற்படும். அதனாலேயே பெரியாழ்வாருடன் ஆண்டாளையும் பெருமாளையும் இந்த கண்ணாடி மாளிகைக்குள் வைத்து வழிபடுகிறார்கள். அதற்குள் போனால் நமக்கும் திருஷ்டி கழிகிறது. கண்ணாடி மாளிகைக்குள் உள்ள துாணின் அருகில் சென்று கண்ணாடியை பார்த்தால் நம் முழுஉருவம் தெரியும். அதே இரண்டு அடி தள்ளி நின்று பார்த்தால் தலை, மார்பு, இடை, கால் என மூன்று, நான்கு பிரிவாக பிரித்து காண்பிக்கும்.
நம்மிடம் படர்ந்திருக்கும் எதிர்மறை சக்திகள் உறிஞ்சப்பட்டு நேர்மறை சக்திகள் பெருகும்.
ஆண்டாள் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்புரிகிறாள். கிழக்கு நோக்கிய பெண் தெய்வங்களை வழிபட்டால் புகழ் உண்டாகும். எனவே ஆண்டாளிடம் நம் எதிர்பார்ப்பு அனைத்தும் நடக்கும். அவளின் இடது கையில் கல்கார புஷ்பம், கிளி தாங்கியிருக்க வலக்கை பூமியை காட்டியபடி இருக்கிறாள். இது ஆண்டாள் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்திக்கும் கோலம் என்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயிக்கு உள்ள சிறப்பு என்ன தெரியுமா? எதைக் கேட்டாலும் கொடுப்பார். ஆண்டாள் பக்கத்தில் இருப்பதால் எப்போதும் நிறைவான மனநிலையுடன் இருக்கிறார். காதலி அருகில் இருந்தால் எந்த ஆணுக்கும் உதவும் மனப்பான்மை, வள்ளல் தன்மை இயல்பாகவே வந்து விடும். வடபத்திரசாயிக்கு மட்டும் இது பொருந்தாதா என்ன? காதல் மனநிலையில் லயித்திருக்கும் பெருமாள் நாம் கேட்பதை விருப்பமுடன் தந்து கொண்டே இருக்கிறார்.
இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார் பெரியாழ்வார் சன்னதிகள் 'ஓம்' எனும் பிரணவ மந்திர அடிப்படையில் அமைந்துள்ளன. ரெங்கமன்னார் அகரமாகவும், ஆண்டாள் மகரமாகவும், கருடாழ்வார் உகரமாகவும் அமைந்து பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர். இத்தனை சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், வடபத்திரசாயியை வழிபட்டு வேண்டியதைப் பெறுவோம்.
-தொடரும்
பவித்ரா நந்தகுமார்
82204 78043
arninpavi@gmail.com