sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆண்டாளும் அற்புதங்களும் -- 33

/

ஆண்டாளும் அற்புதங்களும் -- 33

ஆண்டாளும் அற்புதங்களும் -- 33

ஆண்டாளும் அற்புதங்களும் -- 33


ADDED : ஜூலை 23, 2023 03:47 PM

Google News

ADDED : ஜூலை 23, 2023 03:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடினாலும் அழகு… நின்றாலும் அழகு

பொங்கி வரும் மக்கள் கூட்டத்தின் நடுவே பிரம்மாண்டமாக அசைந்து வரும் தேரை கண்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. நம் மண்ணின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் சிற்பக்கலை கூடங்கள் கோயில் தேர்கள். அந்தளவிற்கு அதில் ஏராளமான சிற்பங்களை உயிர்ப்புடன் அழகாக செதுக்கியிருப்பார்கள். பல தெய்வ உருவங்களும், வரலாற்று நிகழ்வுகளும் சிற்பங்களாக தேர்களில் இடம் பெற்றிருக்கும். நம் எதிர்கால தலைமுறையினரும் அறிய வேண்டிய அரிய பொக்கிஷம் இவை.

தமிழக கோயில்களில் ஆயிரக்கணக்கான தேர்கள் உள்ளன. இவை நம் கலாசாரம், பக்திநெறியை பறைசாற்றுவதுடன் பிரமிப்பூட்டும் கலை நுட்பத்தையும் கொண்டவை. சித்திரை திருவிழா, ஆடிப்பூரம், மார்கழி உற்ஸவம், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திர விழாக்களில் கோயிலைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்கபாணி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேர்கள் மிக சிறப்பானவை.

ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாளில் தேரோட்டம் களைகட்டும். சுற்று வட்டார கிராமங்களில் கூட கோபுரமும் தேரும் கம்பீரமாக காட்சியளிப்பதைக் கண்டு மக்கள் வழிபடுவர். 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால் கூட தேர் எந்த ரத வீதியில் வருகிறது என்பதை அறிய முடியும். ஆண்டாள் தேரில் அழகிய நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 'சாலிவாகன சகாப்தம் கொல்லம் 1025 வருடம் சவுமிய வருடம் ஆவணி 13 குருவாரம்' என அதில் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் பழமையை நம்மால் அறிய முடிகிறது.

தமிழகத்தில் திருவாரூரை அடுத்து இரண்டாவது பெரிய தேர் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ளது. நாங்குநேரி மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜர் சுவாமிகளால் உபயமாக அளிக்கப்பட்ட தேர் இது. தேக்கு, கோங்கு போன்ற உயர்ந்த வகை மரங்களால் செய்யப்பட்டதால் இன்றளவும் உறுதியாக உள்ளது. ராமாயண, மகாபாரதத்தைக் குறிக்கும் ஆயிரத்துக்கும் மேலான சிற்பங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன. 1500 டன் எடையும், 112 அடி உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரங்கள் முன்பு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மரச்சக்கரங்கள் காலப்போக்கில் சேதம் அடைந்ததால் அதிகச் செலவு கருதி 18 ஆண்டுகள் தேர் ஓடாமல் இருந்தது. தற்போது இரும்புச் சக்கரம் பொருத்தி நவீனமாக்கி விட்டதால் தேரோட்டம் ஓரே நாளில் நடக்கிறது. பழைய தேரின் பகுதிகள் தற்போது வடபெருங்கோயில் கோபால விலாசத்தின் விதானத்தை அலங்கரிக்கின்றன.

தேரைச் சுற்றி நாலாபுறமும் அசைந்தாடும் தொம்பைகள், முகப்பில் இருக்கும் மாலைகள், தோரணங்கள். விதானத்தில் உள்ள ஓவியங்கள்,

எட்டு புறங்களிலும் வைணவ சின்னங்கள், கொடிகள் எல்லாவற்றுக்கும் மேலாக கூம்பிய வடிவிலுள்ள கலசம், தேரை இழுத்துச் செல்வது போல இருக்கும் குதிரைகள் என தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் அனைத்தும் நம் கண்களுக்கு பிரமிப்பூட்டும். மலை, கடல், பெரிய சிலைகள் என பிரம்மாண்டத்தை பார்க்கும் போதெல்லாம் மனதில் பேரமைதி குடிகொள்ளும். தேர் திருவிழாவுக்குச் சென்றாலும் இந்த உண்மையை உணர முடியும்.

ஆக.8, 1955 அன்று ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது அத்தனை சுவாரஸ்யமானதாக இருந்தது. ''ஆண்டாள் தேர் ஜூலை 23, 1955ல் வடம் பிடிக்கப்பட்டு 17 நாட்களாகியும் தெற்குரத வீதியில் தான் இன்னமும் நிற்கிறது. அதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் எப்பேர்பட்ட அலுவல் இருந்தாலும், அவற்றை தினமும் காலையில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அந்த நேரத்தில் ஆண்டாள் கைங்கரியத்தில் ஈடுபடவும், முழு கவனத்துடனும் மனோபலத்துடனும் வந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கூடிய சீக்கிரத்தில் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்க்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் தேரை ரதவீதிகளில் இழுத்து நிலைக்கு கொண்டுவர மூன்று மாதம் ஆகி விடும். ஆனால் தற்போது நவீன வசதிகளால் ஓரிரு நாளில் நிலைக்கு வந்து விடுகிறது.

இந்த 65 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன!

தேரில் பவனி வரும் ஆண்டாள், பக்தர்களின் கனவிலும் அவ்வப்போது உலா வருகிறாள். அதில் ஒரு நிகழ்வை மட்டும் பார்ப்போம். ஆண்டாளுக்கு சாற்றப்படும் கம்ப குஞ்சரம் போல கன்னையா குடம் என்ற ஒன்றும் இக்கோயிலில் விசேஷமானதாக கருதப்படுகிறது. இது தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.

ஆம்! கன்னையா என்பவர் கோயிலுக்கு காணிக்கை அளித்துள்ளார். அவருக்கு என்ன அற்புதத்தை ஆண்டாள் நிகழ்த்தினார் என பார்ப்போமா?

கன்னையா என்பவர் 1872ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்த போது அச்சகத்தில் பணிபுரிந்தார். 12ம் வயதில் நாராயண பிள்ளை நடத்திய சென்னை வினோத சபையில் நடிகனாக சேர்ந்தார். ஆணாகவும் பெண்ணாகவும் பல பரிமாணங்களில் நடித்த இவர் பின்னாளில் சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார். சில எதிர்பாராத தோல்விகளால் செல்வத்தை இழந்தார். மனம் உடைந்து போய் இனி நாடகம் நடத்துவதில்லை என முடிவு செய்தார். தன் நாடக பொருட்களை எல்லாம் திருநெல்வேலியில் ஏலத்தில் விற்று விட்டு ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்தார். ஆண்டாளை தரிசித்து விட்டு அங்கேயே உறங்கினார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள் ஆறுதல் சொல்லி வழிகாட்டினார்.

மதுரையிலுள்ள மேல கோபுர வாசல் உணவகம் ஒன்றில் பணியாற்றிய கிட்டப்பா, செல்லப்பா, அனந்த நாராயணன் என்னும் மூவருடன் சேர்ந்து பக்தி, ஒழுக்கத்தை வளர்க்கும் புராண இதிகாசக் கதைகளை மட்டும் தேர்வு செய்து நாடகம் நடத்துமாறு அறிவுறுத்தி விட்டு ஆண்டாள் கனவில் இருந்து மறைந்தார்.

அதன்பின் ராமாயணம், மகாபாரதம், தசாவதாரம், பகவத் கீதை, ஆண்டாள் கல்யாணம், ராமானுஜ வைபவம், நந்தனார் சரித்திரம் போன்ற நாடகங்களை நடத்தினார். மின்சார வசதி இல்லாத காலத்தில் ஜெனரேட்டர் மூலம் நாடக மேடைக்கு ஜெகஜோதியான ஒளி அமைப்பை உருவாக்கினார். பகவத் கீதை நாடகத்தில் தேரில் அமர்ந்தபடி கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் காட்சி வரும். அதைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அது மட்டுமல்ல தசாவதாரம் நாடகத்தில் பாற்கடலில் பரந்தாமன் பாம்பணை மீது பள்ளி கொள்ளும் காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது. அத்துடன் கலியுகத்தின் வரவை காட்ட நாடக மேடையில் மொர்ரிஸ் காரை கொண்டு வந்து அசத்தியவர் அவர்.

ஆண்டாள் கல்யாணம் என்னும் நாடகம் மதுரையில் அமோகமாக நடந்தது. அதில் நிறைய சம்பாதித்த அவர், நன்றிக்கடனாக ஆண்டாள் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தார். யானை, ஒட்டகம், அபிஷேகத்துக்கு தங்கக்குடம் என காணிக்கைகள் அளித்தார். அவர் அளித்த தங்கக்குடம் தான் 'கன்னையா குடம்' எனப்படுகிறது.

கன்னையாவின் முடிவும் அவரது பக்தி உணர்வை வெளிப்படுத்தியது. பகவத் கீதை நாடகம் நடக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது. நெஞ்சு வலியால் துடித்த போதும் நாடகத்தை நிறுத்த வேண்டாம். முடிந்த பின்னர் தன் உயிர் போனதை அறிவிக்கும்படி தெரிவித்தார். நாடகத்தை உயிராக போற்றிய அவர் ஆண்டாளின் கருணையாலும் பேரருளாலும் கன்னையாவின் புகழ் இன்றும் மறையாமல் உள்ளது.

நாமும் நம் மனம் என்னும் தேரில் ஆண்டாளை எழுந்தருளச் செய்வோம். வெற்றுப் பாதையிலிருந்து வெற்றிப் பாதைக்கு அவள் நம்மை அழைத்துச் செல்வாள். வாருங்கள்.

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com






      Dinamalar
      Follow us