ADDED : நவ 21, 2024 02:41 PM

யோகம் என்றால்...
தியான வகுப்பு முடிந்ததும், '' தாத்தா... தியானம் செய்வதால் மனசுக்கு அமைதி கிடைக்குது. மனதை கட்டுப்படுத்தவும் நிம்மதியாக வாழவும் முடியுது. எப்போதும் இப்படியே இருக்கலாமே? எதுக்கு நான் ஸ்கூலுக்கு போகணும்? பாடம் படிக்கணும்?'' எனக் கேட்டான்.
''ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன். நம் கடமையை செய்துட்டே இருக்கணும். அதில் ஒரு பகுதியே தியானம். கடமையை செய்யாவிட்டால் கடவுளை அடைய முடியாது. இதை பகவத்கீதையின் ஏழாம் அத்தியாயம் 17வது ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர்,
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப 4க்திர்விஸி ²ஷ்யதே|
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ5த்யர்த² மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||
கடமை தவறாமல் பக்தி செலுத்தும் ஞானியே சிறந்தவன். 'அவனுக்கு நான் மிகவும் இனியவன்; எனக்கு அவன் மிகவும் இனியன்' என்கிறார்.
கடமையை யார் ஒருவர் பக்தியுடன் செய்கிறாரோ அவரே கடவுளுக்கு விருப்பமானவர்.
திருவள்ளுவரும் இதை 356வது திருக்குறளில்,
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
கற்க வேண்டியதை முறையாக கற்று, மெய்ப்பொருளை உணர்ந்த ஞானிகள் மீண்டும் பிறப்பு எடுக்காத மோட்சத்தை அடைவர்.
கற்க வேண்டியது எது எனக் கேட்டால் அதுவே யோக சாஸ்திரம். அதாவது பற்று இல்லாமல் அவரவருக்குரிய கடமையைச் செய்வது. கடமையைச் செய்வதோடு பக்தியுடன் வாழ்பவர்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவர்'' என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554