ADDED : டிச 06, 2024 07:34 AM

தியானத்தின் குறிக்கோள்
தியான வகுப்பு முடிந்ததும் தாத்தாவிடம், ''கடவுளை அடைவது மட்டும் தான் வாழ்வின் லட்சியமா இருக்கணுமா... வேற எந்த குறிக்கோளும் தியானத்திற்கு இருக்க கூடாதா?'' எனக் கேட்டான் கந்தன்.
''தாராளமாக இருக்கலாம். பலனை எதிர்பார்த்து தியானம் செய்தால் வெற்றி கிடைக்கும். ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். வரும் ஆண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கி மேல்வகுப்புக்கு போகணும்னு நினைச்சா அதை குறித்து தியானம் செய். அடுத்த ஆண்டில் வேறொரு குறிக்கோளுக்காக தியானம் செய். எதை நினைத்து செய்கிறாயோ அதை கண்டிப்பாக அடைவாய்.
பகவத்கீதையின் 8ம் அத்தியாயம் 7வது ஸ்லோகத்தில் கிருஷ்ணர் இதை கூறியுள்ளார்.
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்4ய ச |
மய்யர்பிதமநோபு³த்³தி4ர்மாமே வைஷ்யஸ்யஸம்ஸ²யம் !!
எல்லாக் காலங்களிலும் என்னையே நினைத்து கடமையில் ஈடுபடு. என்னிடத்தில் உன் மனதையும், புத்தியையும் அர்ப்பணித்தால் என்னையே அடைவாய் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
இதை திருவள்ளுவரும் 666வது குறளில்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
மனதில் எண்ணியபடியே செயலாற்றும் மனஉறுதி கொண்டவராக இருந்தால் எண்ணியதை எண்ணியபடி அடைய முடியும். குறிக்கோள் சிறியதாக கூட இருக்கலாம். புரிஞ்சுதா...'' என்றார் தாத்தா. வீட்டுக்கு புறப்பட்டான் சிறுவன் கந்தன்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554