தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 12

பாரதியாரின் ஆத்திசூடி - 12

பாரதியாரின் ஆத்திசூடி - 12


ADDED : செப் 19, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடித் தொழில் செய்

கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை மனதில் வைத்தே மகாகவி பாரதியார் கூடித் தொழில் செய் என்கிறார்.

ஓடி விளையாடு பாப்பா

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா

ஒரு குழந்தையை வையாதே பாப்பா

என பாப்பா பாட்டில் பாடுகிறார்.

கூடித் தொழில் செய்யும் போது பிரச்னைகள், மன வேறுபாடுகள், விவாதங்கள் வரும். அதனால் தான் பாரதியார் கூடி விளையாடும் போது இன்னொருவரைத் திட்டாதே என அறிவுறுத்துகிறார். கூடிய உறவு பிரிந்து விடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வே இதற்கு காரணம்.

இதே கருத்தை கவியரசர் கண்ணதாசன்,

கூடும் உறவு கூட்டுறவென்று

ஒன்றாய் வாழுங்கள்.

கூடிய பிறகு குற்றம் காணும்

கொள்கையைத் தள்ளுங்கள்

என்று பாடியுள்ளார்.

Team Work என்பதில் உள்ள TEAM என்பதற்கே - Together Everyone Achieves More என்பார்கள்.

நம் நாட்டில் விடுதலைப் போராட்டத்தை என்றோ முடித்து, வெள்ளையர்களை ஓட ஓட விரட்டி இருக்கலாம். கடல் கடந்து வந்த அவன் கூட்டமே சிறுபான்மைதான். அவன் நம் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியுடன் சதி செய்து தலைவர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தினான்.

தொடர்ந்து நம் தேசத்திற்குள்ளேயே பிரிவினை (வங்கப் பிரிவினை) நடந்தது.

தீவிரமாக எதிர்த்தவர்களை கட்டுப்படுத்த, மிதவாதிகள் என்ற நிலையை உருவாக்கி, மக்களைப் பிரித்தனர். அதுவே தான் அவர்களுக்கு பெரிய மூலதனம் ஆனது. அதனால் தான் பாரதியார்,

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?

என பாடினார்.

குடும்பங்கள் மட்டுமல்ல நிறுவனங்கள் பலவற்றின் வெற்றிக்கு காரணம் - சுயநலம் இல்லாத ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதே. தோல்விக்கு காரணம் ஒருவரை ஒருவர் நம்பாமல் குற்றம் கூறுவதுதான்.

நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனக் கனவு கண்ட பாரதியார் புதிய ஆத்திசூடியில் கைத்தொழில் போற்று, கூடித் தொழில் செய் என்றெல்லாம் பாடுகிறார். மேலும் உடலுழைப்பால் வாழும் மக்களையும், அறிவின் பலத்தால் உழைக்கும் அறிவாளி கூட்டத்தையும் ஒன்றாக்கி, அவர்களிடையே வேறுபாடு காணாமல் அனைவரையும் உழைப்பாளிகளாகக் கருதினார்.

இதனாலேயே அவர் கலைமகளைப் பற்றி பாடும் போது, கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் என இரு சாராரையும் இணைத்துப் பாடுகிறார். அதாவது பாமர மக்களின் உடல் உழைப்புக்கும், படித்த வர்க்கத்தினரின் மூளை உழைப்புக்கும் உயர்வு தாழ்வு இருப்பதாகக் கருதப்படும் பொய்த்திரையைக் கிழித்து இருவரையும் ஒன்றாக்கிக் காட்டுகிறார்.

ஆம், அவரது பார்வையில் கவிதை இயற்றுவதும், கன இயந்திரங்களைச் சமைப்பதும் தொழிலாகத்தான் படுகிறது. இதனால் தான் 'நமக்குத் தொழில் கவிதை' என பெருமிதத்தோடு பாடுகிறார். இத்தகைய கவிஞர் இந்திய நாட்டின் எதிர்காலம் பற்றிக் குறி சொல்ல வரும் போதோ,

நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது;

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்.

எந்திரம் பெருகுது; தந்திரம் வளருது; -

எட்டு லட்சுமியும் ஏறி வளருது!

என குடுகுடுப்பை அடிக்கிறார்.

வருங்காலம் என்னும் கட்டுரையில், ''உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகிறது என்பதைத் தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல், அற்பச் செயல்களில் பொழுதை கழித்து வாழ்வதில் பயனில்லை. வர்த்தகம் செய்வோர் பணப்புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகம் செய்ய வழி தேட வேண்டும். பணக்காரர்கள் தொழில் வளர்ச்சிக்கான துறையில் முதலீடு செய்து எந்திரத் தொழில்களைப் பெருக்க வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒன்றான மனதுடன், ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படவேண்டும்'' என்கிறார் பாரதியார். அவரின் தீர்க்க தரிசனம் சுதந்திர இந்தியாவில் இன்றும் தொடர்ந்து, உலகில் நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.

அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வையால் குஜராத்தின் பெரிய பால் தயாரிப்பு நிறுவனம் ஆனந்த் குழுமத்தின் அமுல் பால்பண்ணை, ஆசியாவிலேயே பெரிய கூட்டுறவு நிறுவனமாக அமைந்தது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்து தமிழக வளர்ச்சிக்கு வித்திட்ட டி.வி.சுந்தரம் அய்யங்கார், நிறுவனம் தொடங்கியவுடன் கூட்டுறவு சங்கம் அமைத்து தொழிலாளர்களுக்கு உணவு, உடை, வீட்டு வசதிகளைத் தந்து பலருக்கும் முன்னோடியாக போற்றப்படுகிறார்.

நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாயம் கூட்டு முயற்சிக்கு அருமையான உதாரணம். நிகழ்காலம் மட்டுமல்ல, நம் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் கூடி மகிழ்ந்து வாழ நல்ல உதாரணம். பஞ்ச பாண்டவர் ஒற்றுமையாய் இருந்தது மட்டுமல்ல தலைவன் கண்ணன், தாய் குந்தி சொன்னதைக் கேட்டார்கள். மூத்தோர் யாரையும் கவுரவர்கள் மதிக்கவில்லை; பெற்றோரையும் மதிக்கவில்லை. ராமாயணத்தில் அதேபோல் ராவணனின் சகோதரர்கள் மூவருக்குள் ஒற்றுமை இல்லை.ஆனால் ராமனோ தந்தையின் வழியில் நடந்தான். அவனின் சகோதரர்கள் அண்ணனின் வழியில் நடந்தனர்.

இரண்டின் முடிவும் நாம் அறிந்ததே. ஆண்டாள், 'கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்' என திருப்பாவையில் பாடுகிறாள். எல்லோருடனும் இணைந்து நோன்பு கொண்டாடுவோம். எல்லோரும் இணைந்து கண்ணனை அழைப்போம் என்கிறாள். இன்னொரு பாசுரத்தில், 'செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்' என்கிறாள். தர்மத்திற்கு எதிராக உள்ள எதையும் செய்ய மாட்டோம். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறாகக் கூற மாட்டோம் என்கிறாள். இவை இரண்டும் தானே கூடிப் பணி செய்வதற்கு முட்டுக்கட்டைகள்?

கூடித் தொழில் செய்து அன்று முதல் இன்றுவரை Team Work என்பதற்கு உதாரணமாக இருப்பதற்கு மூன்று 'C'க்களைக் கூறலாம். சினிமா, சர்க்கஸ், கிரிக்கெட். இந்த மூன்றிலும் உடன் இருப்பவர்கள் எந்த ஜாதி, எந்த மொழி பேசுபவர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என யாரும் பார்ப்பதில்லை. இனம், மொழி, மாநிலத்தைத் தாண்டித்தான் இங்கே கூடுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.

'ஒருவர் பொறை; இருவர் நட்பு' (பொறை - பொறுமை)என்பார்கள். எந்தத் தொழிலிலும் விட்டுக் கொடுத்தல் இருந்தால்தான் வெற்றி. அதே போல வணிகத்தில் நேர்மை வேண்டும்.

பாரதி கூறும்,

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

ஒன்று பட்டு இருப்பது அல்லது கூடித் தொழில் செய்வது என்பது வெறும் அறிவினால் தொடராது என்பதை பாரதியார் அழகாகக் கூறுகிறார்.

படிப்பு என்பது கல்வி (Education)

வாசிப்பு அதிகமானால் வருவது அறிவு (Knowledge)

அறிவின் அடுத்த கட்டம் ஞானம். (Wisdom)

அறிவுள்ளவர்கள் அனைவருக்கும் ஞானம் இருக்கும் எனச் சொல்ல முடியாது. அதனால்தான், சமுதாயம் ஒன்றுபட, கூடித் தொழில் செய்ய ஞானம் வேண்டும் என தெளிவுபடுத்துகிறார் பாரதியார்.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us