ADDED : அக் 30, 2025 10:56 AM

ஈகைத்திறன்
ஈகை என்பது பிறருக்கு உதவும் கொடை. எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவரின் தேவையறிந்து கொடுப்பதே ஈகை என்கிறது திருக்குறள். ஆத்திசூடியில் 'ஈவது விலக்கேல்' என வருவது, கொடையளிக்கும் செயலைத் தடுக்காமல் இருக்க வேண்டும் என்கிறது.
ஈகைத் திறன் இருக்க வேண்டுமானால் அன்பும், கருணையும் அவசியம். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.
பாப்பா பாட்டில் பாரதியார்,
உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மை என்று தான் அறிதல் வேணும்
என்கிறார்.
செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்! - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை! அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு!
என அன்பு தான் சிறந்த தவம் என்கிறார்.
தானம், தர்மம் என்றால் என்ன? தானம் என்பது கேட்கப்பட்டவருக்கு அல்லது ஒருவரின் தேவைக்காகக் கொடுப்பது. தர்மம் என்பது யாருடைய கேள்வியும் இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமலேயே செய்யப்படும் நன்மை, சரியான செயல்களைச் செய்வதைக் குறிக்கும். தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஆனால் தானம் என்பது பிறருக்கு தேவையானதை அவர் கேட்டோ அல்லது ஒருவரின் துன்ப நிலை பற்றி அடுத்தவர் எடுத்துக் கூறி அறிந்த பின் தருவது.
கர்ணன் தர்மம் நிறைய செய்து புண்ணியம் தேடினான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டு வாங்கினாரே தவிர, தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியத்தையும் தானமாக தாரை வார்த்து தந்த பிறகு கர்ணன் ஒரு சாதாரண மனிதன் ஆனான். அதனாலேயே மரணம் அவனை எளிதாக நெருங்கியது. ஒரே வரியில் சொன்னால்
கேட்டுக் கொடுப்பது தானம்,
கேட்காமலே கொடுப்பது தர்மம்.
ஈகை என்பது தேர்தலுக்காக தரப்படும் இலவசம் அல்ல. ஈகை உள்ளத்துடன் இயற்கை வளங்களைக் காத்து, மழை நீரைத் தேக்கி, மக்களுக்கு நன்மை செய்வதைக் குறிக்கும்.
நல்வழி பாடலில் அவ்வையார்,
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
என்கிறார். இதில் ஜாதி என்பது பண்பாலும், பிறருக்கு உதவும் குணத்தாலும் வரையறுக்கப்படுகிறது. பிறருக்குக் கொடுக்கும் மனம் உடையவரே உயர்ந்த குடியில் பிறந்தவர் என்கிறார்.
பாரதியார் இதையே, 'நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர் மேலோர்' என்கிறார்.
ஈகை செய்வதற்கு பொருளை விட, மனம் வேண்டும்.
பொருள் கொண்ட பேர்கள்
மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்னும் கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
என்கிறார் கவிஞர் வாலி. இந்த வரிகள் வாழ்வின் யதார்த்தம்.
பாரதியார் அதையும்,
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி எனப் பாடுகிறார்.
வள்ளல் என்றாலே கர்ணன் எனச் சொல்கிறோமே ஏன். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தந்தவன். கர்ணனின் வள்ளல் தன்மையைப் பற்றி இரண்டு தகவல்கள் உண்டு.
பகவான் கிருஷ்ணர், 'கர்ணனைப் போல கொடையாளி கிடையாது' என்று கூற, பாண்டவருக்கு கோபம் வருகிறது. அடுத்த சில நாட்கள் அடைமழை பெய்தது. மகளின் திருமணத்தை நடத்த இருந்த ஒருவர், சமையலுக்கு காய்ந்த விறகு கிடைக்கவில்லை என பாண்டவர்களிடம் தெரிவித்தார். காய்ந்த விறகு இந்த மழையில் கிடைக்காது என சொல்லிய பாண்டவர்கள் விறகு தரவில்லை. இதற்கு தான் கர்ண மகாராஜாவிடம் கேட்க வேண்டும் என அவர் சொல்ல, 'இந்த அடைமழையில் கர்ணன் என்ன செய்து விட முடியும்' எனக் கேட்டனர். கர்ணன் சபையில் அவர் போய் உதவி கேட்ட போது, சபா மண்டபத்தில் அழகிற்காக இருந்த துாண்களை வெட்டிக் கொடுக்க கர்ணன் ஆணையிட்டார். வந்தவர் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
இன்னொரு முறை ஒரு சிறு தங்க குவியலை மலை போல குவித்து வைத்து, காலை முதல் மாலைக்குள் அதை தானம் செய்யவேண்டும் என்றார் கிருஷ்ணர். பாண்டவர்கள் இரும்புக் கம்பியால் வெட்டி வெட்டி கொடுத்தும் மாலையில் பாதி மலை, அப்படியே இருந்தது. கர்ணனை அழைத்தார். அவன் வந்தவுடன் அங்கிருந்த மக்களிடம், 'இந்த பொற்குவியல் உங்களுக்குச் சொந்தம். நீங்கள் வெட்டி எடுத்து செல்லுங்கள்' என இரண்டே நிமிடத்தில் சொல்லி விட்டு புறப்பட்டான்.
இப்போது பாண்டவரை பார்த்து சிரித்த கிருஷ்ணர், 'கொடை என்பது பிறவிக் குணம்' என உணர வைத்தார். ஐயமிட்டு உண் எனக் கூறி விட்டு, ஏற்பது இகழ்ச்சி என அடுத்த வரியிலேயே வருகிறதே. கொடுத்து சாப்பிடு எனக் கூறி விட்டு, ஒருவரிடம் போய் கை ஏந்துவது சரியல்ல என்பது எப்படி நடக்கும்? இது பலரின் கேள்வி.
இதற்கு சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் அற்புதமாக பதில் கூறுகிறார்.
சனாதன தர்மப்படி திருவள்ளுவர் கூறியது போல, வறுமையில் அல்லது வாழ முடியாமல் இருக்கும் ஒருவனுக்கு அவன் கேட்பதற்கு முன்னரே, வசதி உள்ளவன் கொடுக்க வேண்டும். இன்னும் கூறப் போனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொடுக்க வேண்டும். கொடுப்பவனுக்கு அறம் இது.
அதே போல, இயன்ற வரை ஒருவன் உழைத்து வாழ வேண்டும். உழைக்காமல், சோம்பேறியாக இருந்து கொண்டு இன்னொருவனிடம் கை ஏந்தக் கூடாது. பிறரிடம் சென்று கேட்பதை இழிவாகக் கருத வேண்டும். கேட்பவனுக்கு இது அறம்.
என்ன அழகான விளக்கம் பாருங்கள்!
இதையே பாரதியார்,
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
மனமுடையோர் வாய்ச்சொல் அருளீர்!
தன்னார்வலர் உழைப்பினை நல்கீர்!
இந்த வரிகள் சமுதாயத்திற்கு உதவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அதாவது, நிதி வசதி உள்ளவர்கள் தங்கம் போன்ற செல்வங்களைத் தர வேண்டும்,வசதி குறைந்தவர்கள் காசுகளைத் தர வேண்டும், மற்றவர்கள் தங்களின் கருத்துகளையும், உழைப்பையும் அளிக்க வேண்டும் என்கிறார்.
பலர் அறியாத விஷயம் ஒன்று. தொடக்க காலத்தில் இருந்தே நடிகர் சிவாஜி தான் கொடுத்த கொடையை வெளியில் சொல்ல விரும்பியதில்லை. அவர் மறைவதற்கு முன் சுயசரிதையில் தான் கூறினார். பல்வேறு தானம், தர்மம் தவிர, 500 பவுன் தங்கத்தை முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியிடம் 1960களில் தந்தவர். இன்றைய மதிப்பு எவ்வளவு இருக்கும்?
5 யானைகளை 5 கோயில்களுக்கு தானம் அளித்தார். காஞ்சி மஹாபெரியவர் இதைக் கேள்விப்பட்டு, சிவாஜியை அழைத்து ஆசி வழங்கினார். இன்றைக்கு பலர் கொடை கொடுக்கும் அளவை விட, விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்கிறார்கள்.
தர்மத்தைப் பற்றிப் பாடும்போது,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்கிறார் பாரதியார். கோயில் கட்டுதல், அன்ன தானம் செய்தல் உள்ளிட்ட தர்மங்களை விட புண்ணியம் தருவது எது தெரியுமா? எனக் கேள்வி கேட்டு அதற்கு விடை சொல்கிறார். ஏழைக்கு கல்விக் கண்ணை திறப்பதே சிறந்த தர்மம் என்கிறார்.
ஆங்கில அரசு பெண்கள் கல்லுாரி கட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால், தன் பல ஏக்கர் இடம், தோட்டம், வீடு இவற்றைத் தந்தவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான மதுரை சுப்ரமணிய அய்யர். சென்னையில் மெரினா கடற்கரைக்கு எதிரில் இருந்த அந்த இடம்தான், ராணி மேரி கல்லுாரியாக இன்று உள்ளது. தன் பெயர் கூட வைக்க விரும்பாமல் தன் நிலத்தை கல்விக்காக தந்தவர்.
குழந்தைகளை விசாலமான மனதுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக 'அறம் செய்ய விரும்பு' என்றார் அவ்வையார். அந்த திறமையை, பண்பை, குணத்தை சிறுவயது முதலே வாழ்வின் அங்கமாக இருக்கச் செய்ய வேண்டும்.
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு
என்கிறார் திருவள்ளுவர்.
நாட்டின் நல்ல குடிமகனாக இருப்பதற்கு பாரதியாரும் ஆத்திசூடியில் வலியுறுத்துகிறார்.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

