ADDED : நவ 06, 2025 02:30 PM

தெளிவாகப் பேசு
பாஞ்சாலி சபதம் பாடலில் சரஸ்வதியிடம் வேண்டுகிறார் பாரதியார்.
தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப்பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல் கண்ணீர்த் துளி வர உள்ளுருக்குதல்
இங்கிவை யெல்லாம்
நீ அருளும் தொழில்களன்றோ?
ஒளி வளருந் தமிழ்வாணீ, அடியனேற்கு
இவை யனைத்தும் உதவுவாயே.
இந்த பாடலின் முதல் நான்கு வரிகளே இந்த ஆத்திசூடியின் கருத்து. அதாவது பேச்சாற்றல் என்பது குறிப்பிட்ட விஷயம் அல்லது கருத்தை புரிந்து கொண்டு, அதை துல்லியமாக வெளிப்படுத்தும் திறமையைக் குறிக்கும்.
சொல்வது ஒரு கலை என்றால், அதைப் பிறருக்குப் புரியும்படி சொல்லுதல் என்பது இன்னொரு கலை. திருவள்ளுவர் இதற்காக சொல்வன்மை என தனி அதிகாரமே எழுதி உள்ளார்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
நன்மையும், தீமையும் சொல்லால் வருதலால், பேசும் போது சொற்சோர்வு ஏற்படாமல் நன்கு காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதுடன், கேட்பவர்களை கவரும் விதத்திலும், கேள்விப்படாதவர்களும் கேட்க விரும்பும் விதத்திலும் சொல்வது தான் சொல்வன்மை.
வழுவின்மை (வழு-குற்றம், குற்றமில்லாத சொற்களை பேசுதல்), சுருங்குதல் (சுருக்கமாகக் கூறல்), விளங்குதல் (பிறருக்கு விளங்கும்படி கூறல்), இனிதாதல் (இனிமை), விழுப்பயன் தருதல் (உயர்ந்த பயனைத் தரும் சொற்கள்) என பேச்சு இருக்க வேண்டும் என்கிறார் உரையாசிரியர் பரிமேலழகர்.
ராமாயணத்தில் அனுமன் தன் இனிய சொற்களால் ராமனைப் பற்றிச் சொன்னதால் 'சொல்லின் செல்வர்' எனப்படுகிறார். பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதுவதிலும், பேசுவதிலும் புலமை பெற்றவர் என்பதால் அவரது உரைநடை இனிமை வாய்ந்தது என்பதாலும் 'சொல்லின் செல்வர்' என்ற பட்டம் அவருக்கு தரப்பட்டது. அந்தக் காலத்தில் கம்ப ராமாயணத்தை விமர்சித்து 'கம்ப ரசம், தீ பரவட்டும்' போன்ற நுால்களை அண்ணாத்துரை எழுதிய போது, நேருக்கு நேராக பொது மேடைகளில் தரம் தாழாமல் அவருடன் வாதிட்டவர் இவர்.
தஞ்சாவூர் வலங்கைமான் சீனிவாச சாஸ்திரி என்பவர் மொழிப்புலமை, சொல்வன்மைக்காக ஆங்கிலேயரால் பாராட்டப்பட்டு 'Silver tongue' சீனிவாச சாஸ்திரி எனப்பட்டார். விடுதலைப் போரில் பங்கேற்ற திலகர், சத்தியமூர்த்தி, சுப்ரமணிய சிவா, முத்துராமலிங்க தேவர் போன்றோர் அபார சொல்வன்மை கொண்டவர்கள். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு பேச தடை விதித்தனர்.
ஒருமுறை பகுத்தறிவு தனக்குத்தான் அதிகம் எனக் கருதிய ஒருவன், '' நாம் கால்களால் நடக்கிறோம். ஆடு மாடுகளும் கால்களால் நடக்கின்றன, அப்புறம் ஏன் அவற்றை மட்டும் கால்நடை என்கிறோம்'' எனக் கேட்டான். அதற்கு வாரியார் பதில் சொன்னார் ''கேள்வி சரிதான். இரண்டு பேரும் கால்நடையாகத்தான் செல்கிறார்கள். ஆனால் விலங்குகள் கால்கள் போகும் பாதையில் செல்லும். அதனால் அவை கால்நடை. மனிதன் கால்களால் நடந்தாலும் கண்கள், சுய அறிவைப் பயன்படுத்தி தான் செல்லவேண்டிய வழியை மேற்கொள்வான். கால் போன பாதையில் செல்லாமல் மனம் போகும் பாதையில் செல்வதால் அவனுக்கு மனிதன் என்று பெயர்'' என்றார். இதுதான் சொல்வன்மைக்கு உதாரணம்.
பாரதியின் சொற்கள், படைப்புகள் எப்படி இருக்கும் என்பதை அவரது வாய் மொழியிலேயே காண்போம்.
சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொற்புதிது
சோதிமிக்க நவகவிதை
என்னாளும் அழியாத
மகா கவிதை என்கிறார்.
அத்தனை நயம் சொற்களில். சரியான நேரத்தில்,சரியான முறையில் சொல்லாற்றல் இல்லாததால் பல விவாதங்களில் மன வருத்தம், புரிதல் இன்மை, தேவையற்ற தோல்வி, இழப்பு ஏற்படுவதை பார்க்கலாம். சொல்வன்மை என்பது மேடைப்பேச்சு அல்லது எழுத்து என்பது மட்டும் அல்ல. அன்றாட வாழ்வில் சொல் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிராமங்களில் இதையே 'ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்' என்பர்.
சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி, ''திறமையுடன் நாடாளும் சக்கரவர்த்தியாக இருந்தாலும், சரியான சொல் ஆற்றல் இல்லை என்றால், அது பல பிரச்னைகளை உண்டாக்கும்' எனக் குறிப்பிடுகிறார். ஒரு முறை நடிகர் சிவாஜி ஒரு திருமணத்துக்கு சென்றார். மணமக்களை வாழ்த்தி விட்டு ரூபாய் 10,000 மொய்ப்பணம் அளித்தார். சற்று நேரத்தில் அங்கு வந்த நடிகர் பிரபு ரூபாய் 25,000 மொய் எழுதினார். அருகில் இருந்த பத்திரிகை நண்பர் ஒருவர், ''என்ன அண்ணே... 30 வருட திரை அனுபவம் கொண்ட நீங்க 10,000 எழுத, 3 வருடம் கூட அனுபவம் இல்லாத உங்கள் மகன் பிரபு 25,000 எழுதுகிறாரே... இது நியாயமா'' என சிவாஜியிடம் கேட்டார்.
சற்றும் கோபப்படாமல் சிவாஜி சொன்ன பதில் தான் சொல்வன்மை. ''நீ கேட்டது சரிதான், என்ன செய்ய - பிரபு அப்பன் பெரிய பணக்காரன்; சிவாஜி அப்பன் பாவம் ஏழை தானே'' என்றார். இது சாதாரண பதில் அல்ல; நமக்கான வாழ்க்கைப் பாடம். அதனால்தான் திருவள்ளுவர் சொல் ஆற்றலை, 'நா நலம்' எனக் குறிப்பிடுகிறார்.சொல்வன்மை கொண்டவர்கள், தங்களின் எண்ணத்தை மற்றவர் புரியும்படி வெளிப்படுத்தி, செயல்களை சிறப்பாகச் செய்வர். அரசுடன் மக்கள் தொடர்பு கொள்ளும் போது, அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை மிக அவசியம் என்கிறது திருக்குறள்.
புகழ் பெற்ற ஸ்பெயின் நாட்டு ஓவியரான பிகாசோ, ஒருநாள் தெருவில் சென்று கொண்டிருந்தார். எதிரில் வந்த ஒரு பெண் அவரிடம் தான் அவரது ரசிகை என்றும் தன் ஓவியத்தை உடனே வரைந்து தர முடியுமா எனக் கேட்டாள். அவரும் வரைந்தது கொடுத்து, இதன் விலை 1000 டாலர் எனச் சொல்ல அவள், 'என்ன இது... 30 வினாடிக்குள் வரைந்து முடித்த ஓவியத்திற்கு 1000 டாலர் பணமா' எனக் கேட்டார். அமைதியாக சிரித்தபடி, ''என் அன்புப் பெண்ணே... இந்த ஓவியத்தை 30 நொடிகளில் வரையக் கற்றுக் கொள்ள எனக்கு 30 ஆண்டுகள் ஆகி விட்டதே'' என்றார். இப்படி சரியான நேரத்தில் சரியான பதிலைக் கூறுவதுதான் சொல்வன்மை - அதாவது சொல்வது தெளிந்து சொல்.
ஆதிசங்கரர் காலடியில் இருந்து நாடு முழுதும் மூன்று முறை சுற்றி வந்தார். எதிர்க் கருத்துக்கள் கொண்டவர்களையும் தன் பக்கம் இணைத்து தேசத்தை ஒன்றுபடுத்தினார். இதற்கு காரணம் அவரின் சொல்வன்மையே. 72 விதமான வழிபாட்டு நம்பிக்கைகள் கொண்ட மக்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆறுவித வழிபாடு (ஷண்மத ஸ்தாபனம்) முறையை தோற்றுவித்தார். 'அஹம் பிரம்மாஸ்மி -அதாவது கடவுள் அனைவரிடமும் இருக்கிறார் என அவர் கூறியது இன்று வரை நம் தேசத்தின் சனாதன தர்மமாக இருப்பது எவ்வளவு பெருமை?
வேத ரிஷிகளின் கவிதையில் பாரதியார், ''சொல்லை சாதாரணமாக நினைக்கக் கூடாது. உண்மைச் சொல் என்பது க்ஷேம மந்திரம். பொய்ச் சொல் அழிந்து விடும். வெறும் சொல்லுக்கு மகிமை இல்லை. அந்தச் சொல், உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கே மகிமை உண்டு'' என்கிறார். அவரது சொல்வன்மை நம்மை வீறு கொள்ள வைக்கிறது.
கண்ணன் யார் என்பதற்கு பதிலாக,
மழைக்கு குடை - பசி நேரத்து உணவு
எந்தன் வாழ்விற்கு எங்கள் கண்ணன்
என்கிறார். இதுதான் சொல்நயம், கவிநயம்.
பாஞ்சாலி சபதத்தில், தருமன் கூறும்
வஞ்சகத்தில் வெற்றியை வேண்டார்
மாயச் சூதை பழியெனக் கொள்வார்
அஞ்சலின்றி சமர்களத்தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்
ஆதலினால் இந்தச் சூதினை வேண்டேன்
என்ற வரிகளில் நீதியின் அழுத்தம் சொல் வன்மையாக வெளிப்படுகிறது.
எனவே சொல்லாற்றல் என்பது, தெளிவு: கருத்தை தெளிவாகவும், குழப்பமின்றியும் எடுத்துரைத்தல்.
பொருத்தம்: பேசும் சூழலுக்கும், கேட்கும் அவையினருக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேர்வு செய்தல். ஆராய்ந்து பேசுதல்: விளைவை ஆராய்ந்து, அதன் பிறகு பேசுதல்.
மனதை வெல்லும் ஆற்றல்: கேட்பவரின் உள்ளத்தை வென்று, கருத்துக்களை ஏற்கச் செய்தல். இதைத்தான் மகாகவி பாரதியார் சொல்வதைத் தெளிந்து சொல் என்கிறார்.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

