
நல்ல மனம்
போர்க்கலைகளில் கைதேர்ந்தவரான இவர் பரத்வாஜ முனிவரின் மகன் துரோணாச்சாரியார். இவரது மனைவி சதானந்தரின் மகளான கிருபி. இவர்களின் ஒரே மகன் அஸ்வத்தாமன். படைப்புக்கடவுளான பிரம்மாவிடம், இந்திரன் பெற்ற தங்கக்கவசத்தை வாங்கி துரியோதனனுக்கு கொடுத்தவர் இவரே.
இந்த துரோணாச்சாரியாரே மகாபாரதக் கதையில் வரும் கவுரவர், பாண்டவர்களின் குருநாதராக இருந்தார். கல்வி, கலைகளை அவர்களுக்கு போதித்தார். விரைவிலேயே தர்மன் ஈட்டி எறிவதிலும், அர்ஜுனன் வில் வித்தையிலும், பீமன், துரியோதனன், துச்சாதனன் மூவரும் கதாயுதம் சுழற்றுவதிலும், நகுலன், சகாதேவன் இருவரும் வாள் வித்தையிலும் தேர்ச்சி பெற்றனர்.
இருப்பினும் இரு அணிகளில் சிலரது மனதில் தீய எண்ணம், கருத்து வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்தார் குருநாதர். நாளடைவில் இந்த எண்ணமே அவர்களை பளிச்சிடச் செய்ய விடாமல் தடுக்குமே என வருந்தினார்.
ஒருமுறை பாண்டவர், கவுரவர்களை அழைத்து, “நாளை மாலை உங்களின் இரு அணியினரையும் அவரவர் மாளிகையில் சந்திக்க வருவேன். அப்போது உங்களின் மாளிகை முழுதும் நிறைந்திருக்க வேண்டும்...புரிகிறதா?” என்றார்.
துரியோதனன் தன் சகோதரர்களுடன் ஆலோசித்தான். முடிவாக அவர்களின் சம்மதத்துடன் மாளிகை முழுவதும் பஞ்சு மூடைகளால் நிரப்பினான். மறுநாள் துரோணாச்சாரியர் முதலில் துரியோதனனின் மாளிகைக்கு வந்தார். ஆனால் வாசல் வரை பஞ்சு மூடைகள் இருந்ததால் அவரால் நுழைய முடியவில்லை. இதைக் கண்டதும், “துரியோதனா! மாளிகைக்குள் நுழைய முடியாதபடி பஞ்சால் நிரப்பி விட்டாயே” என சிரித்தார். ஆனால் மனதிற்குள் கவுரவர்களின் முட்டாள்தனமான செயலை எண்ணி வருந்தினார். அதன் பின் பாண்டவர்களின் மாளிகைக்குச் சென்றார்.
குருவை அன்பாக வரவேற்ற பாண்டவர்கள், அவரை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். குருநாதரிடம் ஆசி பெற்ற பின் அவருக்கு விருந்து அளித்தனர். துரோணாச்சாரியாரின் மனதிற்குள் எந்தப் பொருளாலும் இவர்களின் மாளிகை நிரப்பப்படவில்லையே என எண்ணினார். அங்கிருந்து புறப்படும் போது, “தர்மா... மாளிகையை நிறைத்து வைக்கச் சொன்னேன் அல்லவா? ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லையே?” எனக் கேட்டார்.
“குருநாதா! எங்கள் மாளிகை முழுவதும் தீபங்களின் ஒளியால் நிரம்பி இருக்கிறது. எங்கள் மனம் முழுவதும் அன்பால் நிறைந்துள்ளதை தாங்கள் அறியவில்லையா?” எனக் கேட்டான். அதைக் கேட்டு மகிழ்ந்த துரோணாச்சாரியார் அவர்களின் புத்திசாலித்தனத்தை எண்ணி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்த சிறிது நாளில் துரோணாச்சாரியாரின் சீடர்கள் சிலர், ''குருநாதா... தர்மர் பண்பின் இருப்பிடமாகவும், துரியோதனன் தீய நடத்தை கொண்டவனாகவும் இருக்கிறாரே... ஏன் இந்த முரண்பாடு எனக் கேட்டனர். உண்மையை உணர்த்துவதற்காக முதலில் துரியோதனனை அழைத்த அவர், '' நீ போய் ஒரு நல்ல மனிதனை எந்தத் திசையில் இருந்தாலும் கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வா” என ஆணையிட்டார். அவனும் வெகுதுாரம் சுற்றி அலைந்து விட்டு திரும்பி வந்தான்.
“குருநாதா! எல்லா இடத்திலும் தேடி விட்டேன். நல்ல மனிதன் ஒருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகம் எங்கும் தீய மனிதர்களே இருக்கிறார்கள்'' என்றான்.
உடனே தர்மரை அழைத்து, '' நீ ஒரு தீய மனிதனை என்னிடம் அழைத்து வா'' என ஆணையிட்டார். தர்மரும் நீண்ட துாரம் பயணம் செய்து விட்டு வெறுங்கையுடன் திரும்பினார்.
“குருவே! எல்லா இடங்களிலும் தேடி விட்டேன். ஆனால் எங்கு தேடியும் ஒரு தீயவரை காண முடியவில்லை” என்றார்.
துரியோதனன், தர்மன் இருவரின் எண்ணமும் முரண்பட்டு இருப்பதை அறிந்த சீடர்கள் ஆச்சரியப்பட்டனர். யார் சொல்வது சரி என்பது அவர்களுக்கு புரியவில்லை.
இந்நிலையில் துரோணாச்சாரியார், ''மனதில் உள்ள எண்ணமே நாம் சந்திக்கும் மனிதர்களிடமும் பிரதிபலிக்கும். உலகம் முழுவதும் நல்லவர்களே இருப்பதாக தர்மருக்கு தோன்றுகிறது. ஏனெனில் அவர் மனம் நல்லதாக இருக்கிறது. ஆனால் துரியோதனனுக்கோ, உலகெங்கும் தீயவராகத் தெரிகிறார்கள். ஏன் அப்படி? மஞ்சள்காமாலை வந்தவனுக்கு எல்லாப் பொருட்களுமே மஞ்சளாகத் தானே தெரியும்.
உள்மனம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் வெளியுலகில் காணும் காட்சி இருக்கும். நீங்கள் மனதால் நல்லவர்களாக வாழ்ந்தால் அப்போது உலகமும் நல்லதாகவே தெரியும்'' என்றார் துரோணாச்சாரியார்.
-தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com