
நம்பிக்கை இல்லாத மீன்கள்
அழகான கிராமம் ஒன்றில் வாழ்ந்த குடும்பத்தினர் தங்களுக்குள் உதவி செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சிலர் தங்களின் குழந்தைகளை நகரத்திற்குக் கல்வி கற்க அனுப்பி வைத்தனர். அப்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த முதியவர், தன் பேத்தி கண்மணியை அருகிலுள்ள நகரத்திற்கு படிக்க அனுப்பினார். அவள் நன்றாகப் படித்ததுடன், தாத்தாவின் அறிவுரையை ஏற்கும் குணவதியாக இருந்தாள். முதியவரும் நேரம் கிடைத்த போதெல்லாம் நல்ல பண்புகளைப் போதித்தார். மீனவர்களின் தலைவனாக இருந்த அவருக்கு கிராமத்தில் நல்ல பெயரும், புகழும் இருந்தது. ஆன்மிகம் வேறு, வியாபாரம் வேறு என்ற புரிதலும் அவருக்கு நன்றாக இருந்தது.
ஒருநாள் ஆற்றங்கரைக்குச் செல்ல விரும்பிய அவர், கண்மணியின் விடுமுறை நாளுக்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது. “கண்மணி... கூடை, வலையை எடுத்து வைத்துக் கொள். நாம் அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் போய் அழகழகான மீன்களைப் பிடிக்கப் போகிறோம். உனக்கு மகிழ்ச்சி தானே?'' எனக் கேட்டார்.
கண்மணியும் குழந்தைக்கே உரிய மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து “ ஹை! தாத்தா! மீன் பிடிக்கப் போறோமா? இதோ ஒரே நிமிடத்தில் தோழிகளிடம் சொல்லி விட்டு வருகிறேன்'' என குதித்தபடி வாசலுக்கு ஓடினாள். ஏதோ சாதிக்கப் போகிறோம் என நினைத்துத் ஆவலை வெளிப்படுத்தினாள். சிறியவள் தானே! புது அனுபவத்தில் திளைக்க ஆவல் இருக்கத்தானே செய்யும்! கூடையை தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி நடந்தே ஆற்றங்கரையை அடைந்தனர்.
அகலமான ஆற்றைப் பார்த்ததும் கண்களை விரித்து தண்ணீரையும், பசுமையான சூழலையும் கண்டு பிரமித்தாள். ஆற்றில் துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கண்டு மெய் சிலிர்த்தாள். “ஏன் தாத்தா! ஆற்றிலேயே இவ்வளவு மீன்கள் இருந்தால் கடலில் எவ்வளவு மீன்கள் இருக்கும்?” என ஆச்சரியமுடன் தாத்தாவைக் கேட்டாள்.“ஆமாம்! ஆற்றில் சிலவகை மீன்கள்தான் கிடைக்கும். ஆனால் கடலில் கேட்கவே வேண்டாம்! பெரிய பெரிய மீன்களை அங்கு பார்க்கலாம். கொண்டாட்டம் தான்” என்றார். உடனே கடலைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள் அவள்.
“ சரி! சிந்தனையில் ஆழ்ந்து விடாதே ! வேலையைக் கவனி. கூடையில் இருந்து வலையை எடு பார்க்கலாம்! சிறிய வலையாக இருந்தாலும் உன்னால் தனியாகத் துாக்க முடியாது. பொறுமையாக இரு! அவசரப்படாதே நானும் உதவிக்கு வருகிறேன்” என்றார்.“ இல்லை தாத்தா. வேலைகளை நானே செய்கிறேன். எனக்கு ஆசையாக இருக்கிறது'' என வலையை துாக்க முடியாமல் கீழே விட்டாள். மூச்சு இரைத்தது. சிறியவளாக இருந்தாலும் தாத்தாவிற்கு உதவி செய்வதில் ஆர்வமாக இருந்தாள்.
“பார்த்தாயா? மூச்சு இரைக்கிறது” என ஆதங்கப்பட்டார் தாத்தா.வலையை கீழே பிரித்தபடியே, ஆற்றில் எந்த இடத்தில் வலையை வீசினால்
நிறைய மீன்கள் கிடைக்கும் என நோட்டம் விட்டார் தாத்தா. சற்று தொலைவில் உள்ள சுழிக்கு சென்றார்.
வலையை பலம் கொண்ட மட்டும் ஆற்றில் வீசவே, அது வெகு துாரம் சென்று வட்டம் அடித்தது. அதன் முனையைக் கையில் பிடித்திருந்ததால் வலை நழுவாமல் அவர் கட்டுக்குள் அடங்கியது.
வலையை மெதுவாகச் சுண்டி இழுத்த போது, அதில் நான்கு மீன்களே சிக்கியது தெரிந்தது.
“ இங்கே வா அம்மா! வலையில் சிக்கிய இந்த மீன்களை நாம் கொண்டு வந்திருக்கும் கூடையில் பாதுகாப்பாக வை'' என்றார் தாத்தா. சிறுமியும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி ஒவ்வொரு மீனாகக் கூடையில் இட்டாள். மகிழ்ச்சியாக இருந்த முகம் ஏனோ மாறியது. ஆனால் தாத்தா அவளை கவனித்ததாக தெரியவில்லை. மறுபடியும் முடிந்தவரை வலையை வேகமாக வீசினார். எடுத்துப் பார்த்தால் என்ன அதிசயம், எதிர்பாராத விதமாக நிறைய மீன்கள் சிக்கியிருந்தன. அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறே பல முறை வலையை வீசி நிறைய மீன்களைப் பிடித்தார். ஒரு மீனைக் கூட விடாமல் கூடையில் இடச் சொன்னார். அவளும் மறுக்காமல் செய்தாள். நிறைய மீன்கள் சேர்ந்த போதிலும் அவள் முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லை. முகம் வாடியது. சிறிது நேரம் ஆயிற்று.
வீட்டுக்கு புறப்படும் வேளை வந்தது. இந்நேரம் மீன்களால் கூடை நிரம்பியிருக்கும் என நினைத்த தாத்தாவின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.“அம்மா கண்மணி! அந்தக் கூடையை எடுத்து வா. நிறைய மீன்கள் இருப்பதால் கூடை பளுவாக இருக்கும்! அதை அப்படியே இழுத்துக் கொண்டு வா. இல்லாவிட்டால் அங்கு வந்து தலையில் துாக்கிக் கொள்கிறேன்” என்றார். சிறுமி ஒன்றும் பேசாது 'திரு திரு' என விழித்தபடி தரையைப் பார்த்தபடி நின்றாள்.
“அட! என்னாச்சு இவளுக்கு? இந்நேரம் வரை மீன்களைக் கூடையில் சேர்த்தாளே” என எண்ணியவர் “ ஏனம்மா... கூடையை துாக்க முடியவில்லையா? ஏன் அங்கேயே நிற்கிறாய்” என ஆற்றின் சுழியில் இருந்து கண்மணி நிற்கும் இடத்தை நோக்கி நடந்தார். கூடையைப் பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் பிடித்து வைத்த மீன்களில் ஒன்று கூட இல்லை.
“ மீன்களெல்லாம் எங்கே போச்சு?'' என பதட்டமுடன் கேட்டார். உடனே கண்மணி, ''அப்படியே கூடையுடன் ஆற்றில் கொட்டிவிட்டேன்'' என்றாள்.“ஏன் தவறி விழுந்து விட்டதா?'' எனக் கேட்டதற்கு, '' நீங்கள்தான் என் சிறு வயதில் இருந்தே போதனை செய்வீர்கள்... கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே துன்பத்தில் சிக்கித் தவிப்பார்கள் என்று?''
“ ஆமாம். அதற்கு இப்போது என்ன? அதற்கும் கூடையில் மீன் இல்லாததற்கும் என்ன சம்பந்தம்'' என விழித்தார்
“இது கூடத் தெரியலையே! அந்த மீன்கள் எல்லாம் வலையில் சிக்கி துடிப்பதைப் பார்த்தேன். இந்த மீன்கள் யாவும் வலையில் அகப்பட்டுக் கொண்டு துன்பப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம் ? அவற்றுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம்? கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே துன்பத்தில் சிக்கித் தவிப்பார்கள் என அடிக்கடி சொல்வீர்களே... அது மட்டுமல்ல கடவுள் நம்பிக்கையில்லாத மீன்களை சாப்பிட்டால் நமக்கும் அந்த குணம் ஏற்படுமே... இது தேவையா என யோசித்தேன்.
அதனால் மீன்கள் எல்லாம் அப்படியே ஆற்றிலேயே விட்டுவிட்டேன். உங்கள் வார்த்தையை மீறவில்லை தாத்தா” என புன்னகைத்தாள். பேத்தியின் கண்ணில் குறும்பு தெரிவதை தாத்தா கவனிக்கவில்லை போலும்! மீன்களுக்கு விடுதலை அளித்ததை நினைத்து சிறுமி மகிழ்ந்தாள். சிறுவயதில் இந்தச் சிறுமிக்கு இருக்கும் விவேகமான புத்தியை பாராட்டியே ஆக வேண்டும்.
சிறுமியைப் பாராட்டுவது சரியா மீன்கள் மீது இரக்கப்படுவது சரியா என்ற நோக்கில் விக்கித்து அப்படியே நின்றார் தாத்தா.
அடித்த பந்து தன் மீதே பாய்கிறதே என திகைத்தார். இருந்தாலும் மனதிற்குள் பேத்தியின் நற்குணத்தை எண்ணி பெருமிதம் கொண்டார். அன்பின் காரணமாக பேத்தியின் மீது தாத்தாவுக்கு துளியும் கோபம் இல்லை.
-பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com

