
சந்நியாசிக்கு துறவு மட்டுமல்ல; சகல கலைகளும் தெரிந்திருக்கும். விமானம், கப்பலின் செயல்பாடு பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்லும் போது பைலட், கேப்டன் போன்றோர் பிரமித்து போவர். சமையல் பற்றி பேசினால், 'சமையல் கலையைப் பற்றி சுவாமிகள் இப்படி ருசிகரமா பேசுறாரே' என அனைவரும் வியப்பார்கள்.
ஒருமுறை மடத்திற்கு வந்த பண்டிதர் ஒருவர், ஆன்மிக விஷயங்களை சுவாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பேச்சு சமையல் பக்கம் திரும்பியது.
'உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்வாயா' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
' சொல்றேன் பெரியவா' என்றார் அடக்கமுடன்.
' நீ இட்லி சாப்பிடுவாய் இல்லையா?'
'ஆமா... சாப்பிடுவேன்'
'சரி... அதுக்கு ஏன் 'இட்லி'ன்னு பேரு வந்தது?'
திடீரென கேட்கவே பண்டிதர் குழம்பி விட்டார். இருந்தாலும் சமாளிக்க நினைத்தார். 'பெரியவா... பெரும்பாலும் இட்லியை சூடாக தான் சாப்பிடுவா... எனவே, இலையில் இட்லி போட்டதும் கபகபன்னு சாப்பிடுவா. இலையில் போட்ட கொஞ்ச நேரத்துல அது காலியாகி விடும். அதாவது இலையில் இட்டு + இல்லை (உடனே காலியாவதால்). எனவே இட்டிலை என சொல்ல ஆரம்பித்து, அதுவே இட்லி என மாறியிருக்கலாம்'' என்றார்.
பண்டிதர் சொல்வதைக் கேட்டு மஹாபெரியவர் சிரித்தார்.
பிறகு, 'இலையில் இட்லி விழுந்த மறுகணமே காலியாகும் என்பது பொருத்தமாக இல்லை. என்னை மாதிரி ஒருவர் இருந்தா இட்லி காலியாகுமா? இலையில் அப்படியே இருக்கும். நீ சொல்வதை ஏற்க முடியவில்லை' என்றார்.
'சரியான காரணத்தைப் பெரியவா மூலமா தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்' என்றார் பண்டிதர்.
'சமையல் என்பது சாதாரணம் இல்லே... அது கொஞ்சம் சிரமமான வேலை. சமையலுக்கு கவனம், பொறுமை அவசியம் இல்லையா?'
'ஆமா பெரியவா' என்றார் பண்டிதர்.
'பலகாரம் செய்ய அடுப்புக்கு அருகிலேயே நிற்கணும். காரணம் அது கருகிப் போக கூடாது. சரியான பக்குவத்தில் எடுக்கணும். ஆனா இட்லியை ஊத்தி வெச்சிட்டு அதை மறந்து விட்டுடலாம். பத்து நிமிஷத்திற்கு வேறு வேலையை கவனிக்கலாம். யாரும் பக்கத்துல இல்லாமலேயே தானாக வெந்து விடும். ஒன்றை வைத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவதை 'இடுதல்' என்பார்கள்.
உதாரணத்துக்கு இடுகாடு, இடுமருந்து. இது மாதிரி 'இடு' வர்ற மாதிரி இதுக்கு இட்லின்னு பேரு வந்திருக்கு. இட்டு அவிப்பதால் 'இட்டவி' எனப்பட்டது. பின்னர் 'இட்டலி' என மாறி 'இட்லி' எனச் சுருங்கியது' என சுவாமிகள் விளக்கம் தர பண்டிதர் ஆச்சரியப்பட்டார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* வாழ்வில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரத்தை தரிசிப்பது அவசியம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com