ADDED : பிப் 27, 2025 02:55 PM

காஞ்சி மஹாபெரியவர் ஒருமுறை சென்னையில் முகாமிட்டிருந்தார்.
கர்நாடக இசை பாடகர் மணி ஐயரின் வீடு அருகில் இருப்பதைக் கேள்விப்பட்டார். ஒருநாள் அதிகாலையில் அவரை பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் என மணி ஐயர் வீட்டிற்கு சென்றார் மஹாபெரியவர். அப்போது மணி ஐயர் கண்களை மூடிய நிலையில் சாதகம் (இசைப்பயிற்சி) செய்து கொண்டிருந்தார்.
மஹாபெரியவர் வந்திருப்பதை குடும்பத்தினர் சொல்ல கண்களைத் திறந்தார். எதிரில்
மஹாபெரியவர் நிற்பதைக் கண்டு திகைத்தபடி, 'சர்வேஸ்வரா...' என கைகளை உயர்த்திக் கும்பிட்டார்.
ஆசியளித்த மஹாபெரியவர், 'ஒரு பாட்டு பாடேன்' என்றார்.
'பெரியவா... இன்னும் நான் குளிக்கலையே' என தயங்கினார்.
'பக்தனான நீ குளிச்சிட்டுத்தான் பாடணும்னு அவசியம் இல்லே' என்றார்.
மீண்டும் வணங்கிய போது, 'இப்போது பாடலாமே' என ஜாடை காட்டினார்.
பாட வேண்டும் என்றால் ஒரு மிருதங்க வித்வானாவது வேண்டுமே! அப்போதுதானே கச்சேரி களை கட்டும் என எண்ணியபடி, 'பெரியவா... தாளம் இல்லாமல் பாட முடியாதே...?' என இழுத்தார்.
'கவலைப் படாதே... நான் இருக்கேன்' என கைகளால் தானே தாளமிடத் தொடங்கினார் மஹாபெரியவர்.
'நடமாடும் தெய்வமே... தாளமிடுகிறதே' என்ற பரவசத்தில் கண்ணீர் மல்க அம்பிகையின் மீது கீர்த்தனை பாடினார். தாளமிட்டபடி ரசித்தார் மஹாபெரியவர்.
அதிகாலையில் எப்படிப்பட்ட இனிய அனுபவம் கிடைத்தது பார்த்தீர்களா? கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்பார்களே... அப்படித்தான் இது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* வாழ்வில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரத்தை தரிசிப்பது அவசியம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com