ADDED : ஆக 14, 2025 01:02 PM

கோவிலடி ரெங்கநாதர் - அப்பம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள கிராமம் கோவிலடி. இங்கு அப்பால ரெங்கநாத சுவாமி கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஸ்ரீரங்கப்பட்டினம் - ஆதிரங்கம், கோவிலடி - அப்பால ரங்கம், ஸ்ரீரங்கம் - மத்தியரங்கம், கும்பகோணம் - சதுர்த்த ரங்கம், திருஇந்தளுர் - பஞ்ச ரங்கம் ஆகிய ஐந்து ரங்க ஷேத்திரங்களில் கோவிலடியும் ஒன்று. இங்கு மூலவர் அப்பக்குடத்தானுக்கு தினமும் இரவில் நெய் அப்பம் நைவேத்யம் ஆகிறது.
துர்வாச முனிவரின் சாபத்தால் மன்னர் உபமன்யு நாட்டை இழந்தார். செய்வதறியாமல் திகைத்த அவர், சாபமிட்ட துர்வாசரிடமே சரணடைந்தார்.
“சாபம் தீர அன்னதானம் செய்” என வழிகாட்டினார் அவர். அதன்படி இத்தலத்தில் தங்கி அன்னதானம் செய்தார் மன்னர். அந்த சமயத்தில் ஒருநாள் முதியவர் வடிவில் பெருமாள் தோன்றி மன்னரிடம் உணவு கேட்டார். தன்னிடம் இருந்த உணவை மன்னர் அளிக்க, அனைத்தையும் சாப்பிட்ட முதியவர் மீண்டும் உணவு கேட்டார்.
போதுமான உணவு இல்லாததால் மன்னிப்பு கேட்டார் மன்னர். “தாங்கள் பசியாற என்ன உணவு வேண்டும்” எனக் கேட்டதற்கு “ஒரு குடம் அப்பம் வேண்டும்” என்றார் பெருமாள். வந்திருப்பவர் கடவுளே என உணர்ந்த மன்னர் விரைந்து சென்று குடம் நிறைய அப்பம் தயாரித்து கொடுத்தார்.
அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற மூலவர் தன் உண்மை வடிவத்தை காட்ட மன்னரின் சாபம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்த தலமே கோவிலடி. அப்பக்குடத்தான் என்பது மூலவர் திருநாமம். உற்ஸவர் அப்பால ரெங்கநாதர். மன்னர் உபமன்யுவிடம் இருந்து அப்பக் குடத்தைப் பெற்றதால் இங்கு பெருமாளுக்கு இப்பெயர் வந்தது. பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மேற்கு நோக்கி புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார். வலது கையில் குடம் உள்ளது. இங்குள்ள கருவறை விமானத்திற்கு இந்திர விமானம் என்று பெயர்.
கமலவல்லித் தாயார் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி இருக்கிறார். விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் சன்னதிகள் இங்குள்ளன.
இந்திரனுக்கு சாப விமோசனம் பெற வழிகாட்டியவர் என்பதால் இங்குள்ள விநாயகர், 'வழிகாட்டி விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்கு பாசுரங்களை இயற்றிய பின்னரே நம்மாழ்வார் வைகுந்தம் எழுந்தருளினார். அதனால் நம்மாழ்வாருக்கு முக்தி வழங்கிய ஷேத்திரமாக கோவிலடி திகழ்கிறது.
பங்குனியில் பெரிய தேரிலும், விஜயதசமியன்று குதிரை வாகனத்திலும், புரட்டாசி சனிக்கிழமை அன்று
சிறப்பு அலங்காரத்திலும் பெருமாளை தரிசிக்கலாம். நவராத்திரியில் கமலவல்லித் தாயார் மகாமண்டபத்தில் அருள்புரிகிறார். வைகுண்ட ஏகாதசியில் பகல் பத்து ராபத்து உற்ஸவம் விமரிசையாக நடக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் பரமபதவாசல் வழியாக பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இரண்டு துளசி மாலையை பெருமாளுக்கு சமர்ப்பித்து, அதில் ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டால் திருமணம் நடக்கும்.
குழந்தை இல்லாதவர்கள் சந்தான கோபால கிருஷ்ணருக்கு வளர்பிறை நாளில் கற்கண்டு நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்கினால் குழந்தைப்பேறு உண்டாகும். தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றினால் நோய் விலகி உடல்நலம் சிறக்கும்.
தினமும் காலை 8:00 - 12:00 மணி: மாலை 4:00 - 7:00 மணி வரை நடை திறந்திருக்கும்.
கல்லணை - திருக்காட்டுப்பள்ளி வழியில் கோவிலடி கிராமம் உள்ளது.
* திருச்சியில் இருந்து 25 கி.மீ.,
* தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ.,
அப்பம் செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்
கோதுமை மாவு - 1 கிலோ
அரிசி மாவு - சிறிதளவு
வெல்லம் - ½ கிலோ
வாழைப்பழம் - 2
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை: வெல்லத்தை நன்றாக பொடித்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப் பழத்தை நன்றாக கலக்க வேண்டும். இதில் ஏலக்காயைப் பொடி செய்து கலக்க வேண்டும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் கரண்டியில் மாவை எடுத்து அதில் ஊற்ற வேண்டும். நெருப்பைக் குறைத்து வைத்து ஒருபக்கம் வெந்ததும் திருப்பி வேக விட வேண்டும். இரண்டு பக்கமும் வெந்து சிவந்ததும் எடுக்க வேண்டும். பெருமாளுக்கு நைவேத்யம் செய்ய அப்பம் தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி

