sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோயிலும் பிரசாதமும் - 29

/

கோயிலும் பிரசாதமும் - 29

கோயிலும் பிரசாதமும் - 29

கோயிலும் பிரசாதமும் - 29


ADDED : டிச 11, 2025 12:30 PM

Google News

ADDED : டிச 11, 2025 12:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாரக்கரா மகாகணபதி - உன்னியப்பம்

கேரளா கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா மகாகணபதி கோயில் அந்த மாநிலத்தின் பிரபல கோயில்களில் ஒன்று. இங்கு பிரசாதம் உன்னியப்பம். கொழுக்கட்டைப் பிரியரான விநாயகர் இத்தலத்தில் உன்னியப்பப் பிரியராக இருக்கிறார்.

மகாகணபதி சன்னதியின் முன் அவரது நேரடி பார்வையில் உன்னியப்பம் தயாரிக்கப்படுகிறது. சன்னதிக்கு முன்னால் பிரசாதம் தயாரிப்பதை பார்க்கும் போது மெய்சிலிர்க்கும். மட்டா பச்சரிசி, வெல்லம், வாழைப்பழம், தேங்காய், நெய் இதில் இடம் பெறுகிறது. அதிகாலை முதல் மதியம் வரையிலும் மாலை முதல் இரவு நடை சாத்தும் வரையிலும் தயார் செய்தபடி இருக்கிறார்கள். இவை மகாகணபதிக்கு நைவேத்யம் செய்த பிறகே பக்தர்களுக்கு தரப்படுகிறது.

பக்தர்கள் தேவையான எண்ணிக்கையைச் சொல்லி அலுவலகத்தில் பணம் கட்டினால் நைவேத்யம் செய்த உன்னியப்பம் தரப்படுகிறது. ஏழு உன்னியப்பங்களை ஒன்றாக இணைத்து 'கூட்டப்பம்' என்ற பெயரில் நைவேத்யம் செய்யப்படுகிறது. கேரளாவின் பல பகுதிகளில் சிவன் கோயில்களை பரசுராமர் உருவாக்கினார். அதில் கொட்டாரக்கராவில் உள்ள 'கிழக்கேகர சிவ க்ஷேத்திரம்' ஒன்றாகும். இங்கு மூலவராக சிவன் இருந்தாலும் மகாகணபதி சன்னதியே புகழ் மிக்கதாக உள்ளது.

கொட்டாரக்காராவில் ஒரு சிவன் கோயில் பிரதிஷ்டைக்கான சடங்குகள் மந்திரம் ஒலிக்க நடந்து கொண்டிருந்தது. உலியன்னோர் பெருந்தச்சன் கேரளாவின் பல கோயில்களின் மர வேலைப்பாடுகளை வடிவமைத்தவர். மூலவர் சிலைகளையும் வடித்த பெருமை கொண்டவர்.

தெய்வீகச் சிற்பியான இவர் அந்த சமயத்தில் கோயிலுக்கு வெளியே சாய்ந்து கிடந்த பலாமரம் ஒன்றைக் கண்டார். அதன் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி சிலை வடித்தார். அந்தச் சிலையை அந்த சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய எண்ணி பூஜாரியை அணுகினார். ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. எனவே பெருந்தச்சன் கிழக்கு திசை நோக்கி நடந்த போது அங்கே இருந்த கிழக்கேகர சிவ க்ஷேத்திரத்தின் பூஜாரியிடம் விஷயத்தைச் சொன்னார். உடனே சரி என அனுமதி அளித்தார். கிழக்கேகர சிவ க்ஷேத்திரத்தில் சிவன் கிழக்கு திசையிலும், படிஞ்ஞாயிறு பகவதி அம்மன் மேற்கு திசையிலும், சாஸ்தா தென்மேற்கிலும், சுப்பிரமணியர் வடமேற்கிலும் அமைந்திருந்ததைக் கண்டு தென் கிழக்கில் கணபதி சிலையை பிரதிஷ்டை செய்தார். கொட்டாரக்கராவில் பலா மரத்தாலான மகாகணபதி அப்பம் ஒன்றைக் கையில் வைத்தபடி காட்சி தருகிறார்.

பிரதான கருவறையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது. தர்மசாஸ்தா, படிஞ்ஞாயிறு பகவதி அம்மன், சுப்பிரமணியர், நாகதேவதைக்கு தனி சன்னதிகள் உள்ளன. உன்னியப்பத்தை நைவேத்யம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் கோரிக்கைகள் மகாகணபதி அருளால் உடனடியாக நிறைவேறும். விநாயக சதுர்த்தி, சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம், விஷூ விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. கேரள நடனமான கதகளியாட்டம், கொட்டாரக்காரா மகாகணபதி கோயிலில் உருவானதாகச் சொல்வர். ஆண்டு தோறும் கதகளி கலைஞர்கள் இங்கு வருகை புரிகின்றனர். அதிகாலை 4:00 - காலை 11:30 மணி, மாலை 4:00 - இரவு 8:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

* கொல்லம் நகரில் இருந்து 25 கி.மீ.,

* திருவனந்தபுரத்தில் இருந்து 80 கி.மீ.,

உன்னியப்பம் செய்யத் தேவையான பொருள்

மட்டா பச்சரிசி - 1 கப்

வெல்லம் - 150 கிராம்

வாழைப்பழம் நன்கு பழுத்தது - 1

ஏலக்காய் - 5 எண்ணிக்கை

சீரகம் 1 - டீஸ்பூன்

சுக்கு - சிறு துண்டு

தேங்காய் பல் - 3 டேபிள் ஸ்பூன்

கருப்பு எள் - 1 டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

பச்சரிசியை கழுவி அதை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாத்திரத்தில் இட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்த பின் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தின் தோலை உரித்து அதை நான்கைந்தாக வெட்டி மிக்சியில் போட்டு அதனுடன் ஊறவைத்த அரிசி, வெல்லத் தண்ணீரைச் சேர்த்து கெட்டியாகவோ, தண்ணீராகவோ இல்லாமல் பதமாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். மிக்சியில் ஏலக்காய், சீரகம், சுக்கை நைசாக பொடி செய்து மாவில் கலக்கவும். சிறிய கரண்டியில் ஒன்றரை டீஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் பல்லுகளை இட்டு சிவந்த பின்னர், கறுப்பு எள்ளைச் சேர்க்கவும். பின்னர் இதை மாவில் இட்டு ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கலக்கவும்.தயாரான மாவை ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். அப்போதுதான் மென்மையான உன்னியப்பம் கிடைக்கும்.

குழிபணியாரம் செய்யும் கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் தயாராக உள்ள மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து சிவந்ததும் எடுக்கவும். இப்போது கொட்டாரக்கரா மகா கணபதிக்குப் பிடித்த உன்னியப்பம் தயார்.

-பிரசாதம் தொடரும்

ஆர்.வி.பதி






      Dinamalar
      Follow us