
வங்கி ஒன்றில் பணிபுரிந்த ராமமூர்த்தி ஓய்வு பெற்றதும் காஞ்சி மடத்தில் கணக்காளராக சேர்ந்தார்.
ஒருமுறை அவரது மகளுக்கு பல்வலி ஏற்பட, ''பற்களை உடனே பிடுங்க வேண்டும்'' என டாக்டர் அறிவுரை கூறினார். 'வலி குறைந்தால் போதும்' என மகளும் சம்மதித்தாள்.
இரண்டு பற்கள் பிடுங்கியதோடு வலியைப் போக்க மாத்திரையையும் கொடுத்தார். ஆனால் மாத்திரை சாப்பிட்டும் வலி குறையவில்லை. ரத்தமும் கசிய ஆரம்பித்தது.
' ஓய்வு எடுத்தால் சரியாகி விடும்' என தந்தையும், மகளும் கருதினர். ஆனால் வலியும் கூடியது. ரத்தமும் நிற்கவில்லை. துாக்கமும் வரவில்லை. மறுநாள் டாக்டரை அணுகிய போது, '' உடனே சிகிச்சையைத் தொடங்கலாம்'' என்றார். அதற்கு தந்தை சம்மதிக்கவில்லை. மகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு நேராக காஞ்சி மடத்திற்கு சென்றார்.
காஞ்சி மஹாபெரியவரிடம் பிரச்னையை சொல்லி அவர் தரும் பிரசாதத்தை மருந்தாக சாப்பிடுவது என முடிவு செய்தார். மஹாபெரியவரிடம் விவரத்தை சொல்லி வருத்தப்பட்டார். ''பல்லைப் பிடுங்கினால் வலிக்காதா?'' என்றார் மஹாபெரியவர்.
''வலி தாங்காததால் பிடுங்கி விட்டோம்'' என்றார்.
சற்று நேரம் அமைதியாக இருந்த பெரியவர் 'வீட்டுக்கு செல்' என உத்தரவிட்டார்.
பிரசாதமும் தரவில்லை. ஆறுதலான வார்த்தையும் கிடைக்கவில்லை என வருத்தமுடன் புறப்பட்டார் ராமமூர்த்தி. ஆனால் அங்கு அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
'அப்பா... ரத்தம் நின்றுச்சுப்பா' என்றாள் மகள்.
பெரியவரின் அருள் கிடைக்கவில்லையே என நினைத்தது தவறு என்பதை உணர்ந்தார்.
'போ... போ...' என தன்னை மட்டும் சொல்லவில்லை. மகளுக்கு இருந்த பல்வலியையும்தான் என்பது அப்போது தான் அவர் மண்டைக்கு உரைத்தது. மனதிற்கு நிம்மதி... மஹாபெரியவர் சன்னதி என அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com