ADDED : ஆக 30, 2024 09:00 AM

புற்று நோயிலிருந்து விடுதலை
என்முன் அமர்ந்திருந்த பெண்ணின் வயது 20. அறிவுக்களை ததும்பிய முகம். கண்கள் கலங்கியிருந்தன.
“நான் ராகவி. இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். மோகன் இண்டஸ்ட்ரீஸ் தெரியுமா?” மோட்டார் உதிரிப் பாகங்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவராயிற்றே மோகன்!
“மோகனின் மகள் நான். அப்பாக்கு 54 வயசு. வயித்துல கேன்சர். நல்ல வேளை. முதல் நிலையிலேயே கண்டுபிடிச்சிட்டோம். ஆப்பரேஷன் பண்ணிக்கிட்டு கீமோ தெரப்பி ரேடியேஷன் செஞ்சிக்கிட்டா குணமாகறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க.
“ஆப்பரேஷன், கீமோ தெரப்பி எல்லாம் முடிஞ்சிருச்சி. நாளைக்கு டெஸ்ட் பண்றாங்க. கேன்சர் போச்சின்னா நல்லது. இருந்திச்சின்னா இன்னும் ரெண்டு வருஷம்தான் இருப்பார்னு சொல்லிட்டாங்க சார். நானும் படிக்கிறேன். என் தம்பியும் ப்ளஸ் டூ படிக்கிறான். இந்தச் சமயத்துல அப்பாவ இழந்துட்டோம்னா...''
நான் மவுனம் சாதித்தேன்.
“பணத்துக்குப் பிரச்னை இல்ல, ஆனா அப்பா இல்லாத வாழ்க்கைய யோசிச்சிக்கூடப் பார்க்கமுடியல. பச்சைப்புடவைக்காரியின் பக்தரான எங்கப்பா ஒரு வருஷமா வலியில துடிக்கிறாரு. ஏன் சார் இப்படி நடக்கணும்?”
“உனக்காக பிரார்த்தனை செய்றேன்மா.”
உதவியாளர் உள்ளே நுழைந்தார்.“டாக்டர் பவானியாம். உடனே பார்க்கணுமாம்”
ராகவியை இருக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். கம்பீரமாக நின்ற பெண்ணைப் பார்த்ததும் புரிந்தது. விழுந்து வணங்கினேன்.
“ராகவியின் தந்தையின் கர்மக் கணக்கைப் புரிய வைக்கிறேன். ஆனால் அவளிடம் சொல்லாதே. அவளை நான் சொல்வது போல் செய்யச் சொல்” என தாய் காதில் சொன்ன விஷயம் வித்தியாசமாக இருந்தது.
உள்ளே போய் அமர்ந்தேன். முன்னால் இருந்த தாயின் படத்தை பார்த்தேன். ராகவியின் தந்தையின் கர்மக்கணக்கு புரிந்தது.
ராகவியின் தந்தை மோகன் தன் தந்தையின் தொழில் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தபோது அவருக்கு முப்பது வயது. வெளிநாட்டில் படித்துவிட்டு நிறுவனம் ஒன்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்தார் மோகன். அந்தக் காலத்தில் கணினி கிடையாது. பழைய முறைப்படிதான் வர்த்தகம் நடந்துகொண்டிருந்தது.
அப்போது நிறுவனத்தின் தலைமைக் கணக்காளர் பெயர் நாராயணன். நாற்பது வயதான அவருக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லும் நாராயணனை பார்த்ததும் மோகனுக்குப் பிடிக்காமல் போனது. அவரை வெளியேற்றினால் தான் கம்பெனி உருப்படும் என்றார் மோகன். அவருடைய தந்தை சம்மதிக்கவில்லை. “இருபது வருஷமா இருக்கான். நேர்மையானவன். அவன் இல்லாம கம்பெனி நடக்காதுடா” என்று சொன்னார் மோகனின் தந்தை.
நாராயணனுக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டார் மோகன். நாராயணனைப் பல வழிகளில் சித்திரவதை செய்யத் தொடங்கினார்.
நாராயணனை ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு உப்பு சப்பில்லாத வேலையை சொல்லி அனுப்புவார். செய்யாத தப்பிற்காக சத்தம் போடுவார். லீவு கேட்டால் தரமாட்டார்.
அந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் இருந்த கேஷியர் ஒருவர் பத்து லட்சத்தைத் திருடிவிட்டான். அது சம்பந்தமாக போலீஸ் விசாரணை நடந்தது. நாராயணன் கணக்கைச் சரியாகப் பார்த்திருந்தால் திருட்டைத் தவிர்த்திருக்கலாம் என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார் மோகன். நாராயணனுக்கும் திருட்டில் தொடர்பு இருக்குமோ என போலீசார் சந்தேகப்படும்படி செய்து விட்டார். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தார். திடீரென மோகனின் தந்தை மாரடைப்பில் இறக்க மறுநாளே வேலையை உதறித் தள்ளினார் நாராயணன். அவரை ஒரு வருடம் படாத பாடு படுத்தினார் மோகன்.
ஆகா...அதனால்தான் மோகன் புற்று நோயில் மரண வேதனை அனுபவித்தாரோ?
“சார்.. சார்.. சார்.. . சார்...''
ராகவியின் குரல் கேட்டு நினைவலையில் இருந்து மீண்டு வந்தேன். என்ன சொல்ல வேண்டும்
எனத் தெளிவாகப் புரிந்தது.
“நாளைக்கு நீ எப்பம்மா ஆஸ்பத்திரிக்குப் போகப் போற?”
“சாயங்காலம் அஞ்சு மணிக்கு”
“போறப்போ மலர்க்கொத்துடன் போம்மா”
“ஐயையோ”
“மலர்க்கொத்துன்னுதானே சொன்னேன்! மலர் வளையம்னு சொல்லலையே! எல்லாம் நல்லதுக்குத்தான். உன் மனம் அன்பால் நிறைஞ்சி இருக்கட்டும். ஆதரவில்லாமல் தவிக்கறவங்க மேல கூடுதலாவே அன்பு இருக்கட்டும்”
ராகவி போனதும் கிளம்பினேன். காருக்கு அருகில் பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள்.
“தாயே! ராகவியை ஏன் மலர்க்கொத்தைக் கொண்டு போகச் சொன்னீர்கள்?”
“நாளை நடப்பதைப் பார்”
மாலை ஐந்து மணிக்கு ராகவி மருத்துவ மனையில் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் கையில் மலர்க்கொத்து இருந்தது. தன் தந்தை இருந்த அறையை நோக்கிச் செல்ல முற்பட்டவள் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஒரு அறையில் இருந்த நோயாளி பெருங்குரலில் அரற்றிக் கொண்டிருந்தார்.
ஆர்வக்கோளாறால் எட்டிப் பார்த்தாள்.
“சொன்னா கேளுங்கய்யா. உங்க மகனும், மகளும் அமெரிக்காவில் இருந்து இப்போதைக்கு வரமுடியாது. நீங்க இந்த மருந்தச் சாப்பிட்டுட்டுத் துாங்குங்க. நாளைக்குக் காலையில வந்திருவாங்க.”
நோயாளி கத்தினார்.
“இன்னிக்கு எனக்குப் பொறந்த நாளு. இன்னிக்காவது என் புள்ளைங்களப் பாக்க வேண்டாமா? முடியாதுன்னா எதுக்காக வாழணும்? மருந்தும் வேண்டாம். மாத்திரையும் வேண்டாம்.”
நர்ஸ் கையிலிருந்த மருந்தை ஆவேசமாக தட்டினார் நோயாளி. நர்சுக்குக் கோபம் வந்தது.
ராகவியின் மனதில் ஒரு எண்ணம் மலர்ந்தது. உடனே உள்ளே ஓடினாள்.
“அங்க்கிள், பிறந்த நாள் வாழ்த்துக்கள்” திடுக்கிட்டு நிமிர்ந்தார் நோயாளி.
“நான் உங்க மகளோட காலேஜ்ல ஒன்னா படிச்சேன். என் பேரு ராகவி. நேத்துதான் போன் பண்ணி உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லச் சொன்னா. உங்க மக நாளைக்கு வந்துருவா அங்க்கிள்.”
நோயாளி ராகவியை அருகில் அழைத்தார். அவள் தலையில் கைவைத்தபடி சொன்னார்.
“நீயும் உன் குடும்பமும் ஆயிரம் வருஷத்துக்கு நல்லா இருக்கணும் தாயி”
ராகவி விடைபெற்றுக்கொண்டு தந்தையைப் பார்க்க ஓடினாள். மோகன் முழுவதுமாகக் குணமாகிவிட்டார். புற்று நோய் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர் சொன்னதைக் கேட்டு அழுதாள் ராகவி.
“நடுவே நடந்த மலர்க்கொத்து நாடகம் எதற்காக தாயே!”
“ராகவியிடம் மலரும், பிறந்த நாள் வாழ்த்தும் வாங்கிக் கொண்டது யார் தெரியுமா?”
“தெரியாது தாயே!”
“ராகவியின் தந்தையால் துன்புறுத்தப்பட்ட நாராயணன்தான் அவர். மோகனின் கர்மக்கணக்கில் இருந்த மிச்ச சொச்சத்தையும் ராகவியின் அன்பு எரித்துவிட்டது. அவர் புற்று நோயிலிருந்து தப்பித்துக் கொண்டார். உனக்கு என்ன வேண்டும் கேள்”
“அன்புக்காக ஏங்குபவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் ஏக்கம் தீர வேண்டும் தாயே! ராகவியைப் போல் மலர்க்கொத்தைக் கொண்டு செல்லும் பணியை எனக்கு நிறையக் கொடுங்கள்.”
அழகாகச் சிரித்தபடி மறைந்தாள் அகிலாண்டேஸ்வரி.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com