ADDED : ஜன 09, 2025 02:56 PM

நல்லவன் வாழ்வான்
பெரிய கரை வேட்டி. வெள்ளைச் சட்டை. வயது 40. காதில், கழுத்தில், கையில் தங்கம் மின்னியது. கண்களில் கோபம் மின்னியது.
“என் பேரு ராஜா. பூங்குளம் ஜமீன் பரம்பரை. எங்கப்பா பேரு சுப்பிரமணியன் எங்கப்பா மாதிரி நல்லவரப் பாக்க முடியாது.”
“அப்பா நல்லா இருக்காரா?”
“உங்க பச்சைப்புடவைக்காரி நல்லவங்கள வாழ விடமாட்டாளே!” கோபத்தை அடக்கிக்கொண்டேன்.
“நாலு வருஷத்துக்கு முன்னால பக்கவாதம் வந்தது. பேச முடியாது. படுத்த படுக்கையா இருக்காரு. இப்போ 78 வயசு ஆகுது. இறந்து போயிட்டாக்கூட விதி முடிஞ்சிருச்சின்னு மனசத் தேத்திக்கலாம். இப்படி வாழவும் முடியாம சாகவும் முடியாமக் கிடக்காரே? ”
ஜமீந்தார் சிறு வயதில் செய்த திருவிளையாடல்களின் விளைவாக இருக்கலாம். யார் கண்டது?
“எங்கப்பா மாதிரி ஒழுக்கமான ஆள பாக்கமுடியாது. எங்கப்பா எங்கம்மாவுக்குக் கடைசி வரை உண்மையா இருந்தாரு. அப்பாவுக்கு நாப்பது வயசாகும்போது அம்மா இறந்துட்டாங்க. பெரிய மிராசுதார் ரெண்டாம் தாரமா அப்பாவுக்கு பொண்ணக் கொடுக்கத் தயாரா இருந்தாங்க. ஆனா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அப்பாவும் அம்மாவுமா இருந்து என்ன வளர்த்து ஆளாக்கினாரு.
காலேஜ் படிக்கும் போது எனக்கு காதல் வந்திருச்சி. நான் காதலிச்சது கீழ் ஜாதிப் பொண்ண. எங்கப்பா இடத்துல வேற ஒருவர் இருந்தா வெட்டிப் போட்டிருப்பாரு. எங்கப்பா ஊரே ஆச்சரியப்படற மாதிரி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. என் பொண்டாட்டி ஒரு குந்துமணித் தங்கம்கூடச் சீர் கொண்டுவரல. தன் மருமகள மகளா நெனச்சி அன்பு காட்டறாரு.
“எங்க பண்ணையில பல வருஷமா வேல பாத்துக்கிட்டிருந்த பெருமாள் திடீர்னு செத்துட்டான். உடனே அந்தக் குடும்பத்துக்கு ரெண்டு ஏக்கர் நிலத்தக் கொடுத்து வாழ வச்சாரு. பெருமாளோடக் குழந்தைங்களத் தன் செலவுலயே படிக்க வச்சாரு.
“எங்க ஊரு பூங்குளத்துல இருக்கற பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி அப்பா கட்டிக் கொடுத்ததுதான். ஊர்க்காரங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடலாம். தினமும் அம்பது பேராவது சாப்பிடுவாங்க. ஊருக்கெல்லாம் சாப்பாடு போட்ட உத்தமருக்கு இன்னிக்கு ஊட்டி விட்டாத்தான் சாப்பாடு. கை கால் விளங்காம முடங்கிக் கெடக்காரு. கேடு கெட்டவனுக்கு எல்லாம் நல்ல சாவு வருது. எங்கப்பா மட்டும் சாகவும் முடியாம வாழவும் முடியாம அல்லாடறாரு. இப்போ சொல்லுங்க பச்சைப் புடவைக்காரி ராட்சசிதானே”
அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு உறுதியாகப் பேசினேன்.
“இப்பவும் சொல்றேன் பச்சைப் புடவைக்காரி அன்பின் வடிவம். அன்பு காட்டறதத் தவிர வேற எதையும் செய்யத் தெரியாதவ”
“அப்புறம் ஏன்...''
ராஜாவைக் கையமர்த்திவிட்டு இன்னும் உறுதியாகச் சொன்னேன்.
“எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. மனசுல இருக்கற கேள்விகளுக்கெல்லாம் பதில் கெடைச்சா தான் மகமாயிய நம்புவேன்னு சொன்னா மடத்தனம். உன் கேள்விக்குப் பதில் பச்சைப்புடவைக்காரி தெரியப்படுத்தினா உன்னைக் கூப்பிடறேன். போன் நம்பர எழுதிக் கொடுத்துட்டுக் கிளம்பு”
மறுநாள் ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். கல்லாவில் இருந்த பெண்ணிடம் சாப்பாட்டு டோக்கன் வாங்கக் காசை நீட்டினேன்.
“நான் தரும் உணவுக்கு பணம் தருகிறாயா”
தாயை விழுந்து வணங்கினேன்.
“அவன் அவ்வளவு சொன்னானே உனக்கு என் மீது கோபம் வரவில்லையா?”
“அவன் மீது தான் கோபம் வந்தது. ஆனால் அதுவும் உங்களுக்குப் பிடிக்காது எனத் தெரியும். அதனால் அடக்கிக் கொண்டேன்”
“நல்லது. நாளை அவன் தந்தையைப் போய்ப் பார். எல்லாம் தெரியும். அதை அவனிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும்.”
“வார்த்தையாக மலரப் போவது நீங்கள் தானே!”
அப்பாவைப் பார்க்க வேண்டும் என ராஜாவிடம் போனில் சொன்னேன். மறுநாள் தானே அழைத்துப் போவதாகச் சொன்னான்.
ஜமீந்தார் சுப்பிரமணியன் கிழிந்த நாராகப் படுக்கையில் கிடந்தார். அவரது மருமகள் அவருக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
சுப்பிரமணியனின் கையைப் பிடித்துக் கொண்டு அவருக்கு அருகில் அமர்ந்தேன். எனக்கு எல்லாமே புரிந்தது. சுப்பிரமணியனை நோக்கிக் கைகூப்பிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினேன்.
பக்கத்து அறையில் அமர்ந்து கொண்டோம்.
“உங்கப்பா ஒரு தெய்வப் பிறவி. அவருக்குப் பிள்ளையாப் பிறந்தது நீ செஞ்ச புண்ணியம். தன்னோட மனைவிக்கு, பிள்ளைக்கு, மருமகளுக்கு, பேரன் பேத்திக்கு, இந்த ஊர் ஜனங்களுக்கு உங்கப்பா அன்ப வாரி வாரிக் கொடுத்திருக்காரு.
“மத்தவங்களுக்கு அன்பக் கொடுக்கக் கத்துக்கிட்ட உங்கப்பா அந்த அன்ப எப்படி வாங்கிக்கணும்னு கத்துக்க வேண்டாமா? அதனாலதான் பக்கவாதம் வந்திருக்கு”
“புரியலையே!”
“கோயிலுக்குப் போய்ப் பாரு. அங்க அர்ச்சனை முக்காவாசி உங்கப்பா பேருக்குத் தான் நடக்குது. அவர் குணமாகணும்னு எத்தனை பேர் விரதம் இருக்காங்க தெரியுமா? அவங்க வந்து பிரசாதம் தரும் போது உங்கப்பா எப்படி சிலிர்த்துப் போறாரு தெரியுமா?
அவ்வளவு துாரம் ஏன் போகணும்? உன் மனைவி தன்னோட மாமனாருக்கு எப்படி சோறு ஊட்டி விடறான்னு பாரு. பத்தாயிரம் கோடி சம்பாதிச்சவனுக்குக்கூட இந்த பாக்கியம் கெடைக்காதுய்யா. உன் மனைவி கண்ணீரோட தன் மாமனாருக்கு எப்படி சேவை செய்யறா பாரு.எல்லாரும் உங்கப்பா மேல அன்பப் பொழியறாங்க. அந்த அன்ப அனுபவிக்கறதவிட பெரிய சொர்க்கம் எங்கும்கிடையாது. போதுங்கற அளவுக்கு அன்ப அனுபவிச்ச உடனே உங்கப்பா மனசுல இருக்கற அன்பு இன்னும்
ஜாஸ்தியாகி பச்சைப்புடவைக்காரியோட ஒன்றிடுவாரு. அதுவரை இந்த அன்பின் நாடகம் நடக்கும். விஷயம் தெரியாம பச்சைப்புடவைக்காரிய ராட்சசின்னு சொல்லிட்டியேப்பா. போ, நல்லா இரு.”
ராஜா கண்ணீர் மல்க என் காலில் விழப் போனான். அவனைத் தடுத்து நிறுத்தி தழுவிக் கொண்டேன். ஜமீந்தாரைப் பார்க்க டாக்டர் வந்து விட்டார். என்னை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு ராஜா சென்றான்.
நர்சைப் போல் இருந்த ஒரு பெண் வந்தாள்.
“என்னப்பா புரிந்ததா? ஜமீந்தாரைப் போல் படுத்தபடி அன்பை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதோ?”
“இல்லை, தாயே! அதைவிட அதிகமான அன்பை கையில் கிளிதாங்கிய ஒரு கோலக்கிளி ஒருத்தி என் மீது பொழிகிறாளே! நான் பெற வேண்டிய அன்பின் கணக்கில் மிச்சம் இருந்தால் அன்பிற்காக ஏங்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுங்கள் தாயே”
அவள் காலடியில் விழுந்தேன். நிமிர்ந்தபோது அவள் அங்கு இல்லை.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com