sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 50

/

பச்சைப்புடவைக்காரி - 50

பச்சைப்புடவைக்காரி - 50

பச்சைப்புடவைக்காரி - 50


ADDED : பிப் 05, 2025 01:23 PM

Google News

ADDED : பிப் 05, 2025 01:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாடகனின் புரிதல்

என் முன் கண்ணீருடன் அமர்ந்திருந்த அந்த ஐம்பது வயதுப் பெண்ணைப் பார்த்தேன்.

“எனக்கு ஒரே பையன் சார். பேரு ராகுல். பாட்டுன்னா அவனுக்கு உசிரு. கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டான். அவன் பாட்டைக் கேட்டால் மனசு உருகும். லட்சக் கணக்குல சம்பாதிச்சான்.”

“இப்போ என்னாச்சு”

“எல்லாம் போச்சு, நாலு நாளா காய்ச்சல்னு படுத்தான். அதுக்கப்பறம் பழைய குரல் வரவேயில்ல. பெரிய டாக்டரை எல்லாம் பாத்தும் பிரயோஜனம் இல்ல. பயமா இருக்கு சார். விரக்தியில் ஏதாவது விபரீதமா முடிவு எடுத்திருவானோ...''

பச்சைப்புடவைக்காரியை பிரார்த்தனை செய்வதாகச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

சாப்பாட்டுக்குக் கிளம்பிய போது என் காருக்கு முன் ஒரு பெண் குழி தோண்டிக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா தோண்டறீங்க?” நான் பதறினேன்.

“ஆழத்துக்குப் போயிருச்சி அழுக்கு. தோண்டித்தானே எடுக்க முடியும்?”

“அதுக்காக கார் முன்னாலயா?”

“அழுக்கு இருக்கற இடத்துலதான சாமி தோண்ட முடியும்”

யாரென தெரிந்ததும் விழுந்து வணங்கினேன்.

“இன்று மாலையே ராகுலின் வீட்டிற்குப் போ. தனியாகப் பேசு. வழி தெரியும்”

ராகுலின் வீடு பெரிதாக இருந்தது. ராகுலுக்கு இருபது வயதிருக்கும். அவன் முகத்தில் இருந்த குழந்தைத்தனம் என்னை இம்சித்தது. கட்டைக் குரலில் அவன் பேசிய போது எனக்கு இன்னும் அதிகமாக வலித்தது. நானும் ராகுலும் தனித்து விடப்பட்டதும் அவனைக் கேட்டேன்.

“ராகுல் நீ நல்லா பாடிய வீடியோ இருக்கா?” தலையாட்டினான்.

அடுத்த சில நொடிகளில் பெரிய தொலைக்காட்சியில் ராகுல் தோன்றினான். அது ஒரு யு டியூப் வீடியோ. புல்வெளியில் ராகுல் தனியாக அமர்ந்தபடி, 'ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்'

என்ற அபிராமி அந்தாதி பாடலைப் பாடினான். அழுகையை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. கோடியில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கும் குரல் வளம். 'ஆனந்தமான வடிவுடையாள்' என்ற வரிக்கு அவன் பாடிய சங்கதிகள் பெரிதும் அழ வைத்தன.

காட்சி முடிந்ததும் அந்த காட்சியை உருவாக்கியவர்களின் பட்டியலைக் காட்டினார்கள். நீளமான பட்டியலாக இருந்தது.

கண்களைத் துடைத்தபடி பேச வேண்டியதைத் தெளிவாகப் பேசினேன்.

“இந்தப் பாட்டை நீ தான் எழுதினாயோ?”

“என்ன சார் விளையாடறீங்களா? அபிராமி அந்தாதியின் 11வது பாட்டுன்னு தெரியாதா?”

தெரியும். இருந்தாலும் கேட்க வேண்டிய கட்டாயம்.

“அது சரி, இந்தப் பாட்டுக்கு நீ போட்ட டியூன் அபாரம்”

“ஐயோ, நான் டியூன் போடல சார். எனக்குத் தெரிஞ்ச மியூசிக் டைரக்டர் போட்டாரு”

“பாடும் போது வயலின், மிருதங்கம் இன்னும் ஏதோ இசைக் கருவிகளோட சத்தம் கேட்குதே?”

“பக்க வாத்தியம் வாசிச்சவங்க. எல்லாரும் பெரிய ஆளுங்க சார்''

“இந்த வீடியோவ எங்க எடுத்தாங்க?”

“பெங்களூரு லால் பார்க்கில''

“எத்தனை பேரு வந்தாங்க?”

“10 பேரு. கேமரா, லைட்டிங், மைக், அது, இதுன்னு நிறைய விஷயங்களப் பார்க்கவேண்டியது இருந்தது. ஏன் சார் இதெல்லாம் கேட்கிறீங்க?”

“உண்மை என்னன்னு புரிஞ்சிக்கத் தான். இந்தப் பாட்டு பெரிய அளவுல பேர வாங்கிக் கொடுத்தது. இந்தப் பாட்டு வந்தவுடன் தான் உன்ன கச்சேரிகளுக்கு நிறைய கூப்பிடாங்க. தேங்காய் முடி கச்சேரி பண்ணிய நீ இதுக்குப் பிறகு ஒரு கச்சேரிக்கு அஞ்சு லட்சம் வாங்க ஆரம்பிச்ச”

ராகுலின் முகத்தில் புலப்பட்டது வெட்கமா, கர்வமா எனத் தெரியவில்லை.

“யோசிச்சிப் பாரு, ராகுல். இந்த பாட்டோட வெற்றிக்கு நீ மட்டும் காரணம் இல்ல. அபிராமி பட்டரின் அன்பில் தோய்ந்த வார்த்தைகள், மனதை உருக்கும் இசை, அத உருவாக்கின மியூசிக் டைரக்டர், ராகம் தாளம் சுருதின்னு தெள்ளத் தெளிவா விதிகள உருவாக்கிக் கொடுத்த கர்நாடக சங்கீதம், உனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்த குரு, பக்க வாத்தியம் இசைத்த கலைஞர்கள், இந்தப் பாட்ட வீடியோ எடுத்தவங்க. இதோடு சேர்ந்து உன் குரல், நீ பாடின விதம். ஆனா இவங்கள்ல யாராவது ஒரு ஆள் சரியிலேன்னா கூட பாட்டு எடுபடாது”

ராகுலின் கண்களில் லேசான புரிதல் தெரிந்தது.

“அபிராமி பட்டர்ல ஆரம்பிச்சி பெரிய பட்டாளமே சாதகமா இருந்ததாலதான் நீ ஜெயிச்ச. அத மறந்துட்டு சொந்தத் திறமையால இந்த உலகையே ஜெயிச்சிரலாம்னு நெனச்ச பாரு, அப்போதான் பிரச்னை ஆரம்பிச்சது.

“ஜெயலட்சுமி. ஞாபகம் இருக்கா?”

ராகுல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவங்களுக்கு அறுபது வயசாகுது. நாற்பது வருஷமா பாடுறாங்க. வயசானதுனால இப்போ குரல் கொஞ்சம் பாதிச்சிருக்கு. ஆனா அவங்க மனசுல இருக்கற பக்தி அப்படியேதான் இருக்கு. அவங்க இதே அபிராமி அந்தாதியை பாடி வீடியோ போட்டாங்க. ஒரு பேட்டியில அந்த வீடியோவ பாத்தீங்களான்னு உன்கிட்ட கேட்டாங்க. அதுக்கு நீ சொன்ன பதில் ஞாபகம் இருக்கா?”

ராகுல் விழித்தான்.

“குரல் போச்சுன்னா ரிட்டயர் ஆயிரணும். அத விட்டுட்டு இப்படி பாடினா என்ன அர்த்தம்? கேக்கச் சகிக்கல'ன்னு சொன்ன. அவங்க எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்க''

உனக்கு சாதகமா இருந்த காரணிகளில் ஏதோ ஒன்று அவங்களுக்குச் சாதகமா இல்ல. வயசானதுனால குரல் தளர்ந்திருச்சி. அதனால அவங்க பாட்டு சரியா அமையல . அதக் குத்திக் காமிச்ச. இப்போ பச்சைப்புடவைக்காரி தான் யாருன்னு உனக்கு காட்டிட்டா”

ராகுலின் கண்களில் கண்ணீர்.

“இப்போ என்ன செய்யறது?”

“ஜெயலட்சுமியிடம் மன்னிப்பு கேள். அவங்ககிட்ட பாட்டு கத்துக்கணும்னு சொல்லு. குரு தட்சணையா நிறையப் பணம் கொடு. பாவம் அவங்க பணத்துக்காகக் கஷ்டப்படுறாங்க”

“என் குரல் எப்போ வரும்?”

“அது பச்சைப்புடவைக்காரி கையில தான் இருக்கு. உன் குரல் திரும்பிக் கிடைக்கறத விட உன் மனசுல இருக்கற அகம்பாவம் அழியறது தான் முக்கியம்”

நான் திரும்பிய போது காருக்கு அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள்.

“சொல்ல வேண்டியதை அழுத்தமாகச் சொல்லிவிட்டாய்”

தாயை விழுந்து வணங்கினேன்.

“நீங்கள் சொன்னீர்கள். நான் வாயசைத்தேன். ராகுலுக்கு என்ன ஆகும்?”

“அவன் பெரிய இசை மேதையாகப் போகிறான். அவனிடம் உள்ள அகங்காரத்தை முளையிலேயே கிள்ளி எறியவே இந்த நாடகம். அது சரி, உனக்கு அகங்காரம் வந்தால் என்ன செய்வாய்?”

“எனக்கு அகங்காரமே வராது”

“இப்படி நினைப்பது கூட அகங்காரம்தான்”

“தெரியும், தாயே. ஆனால் அன்பே வடிவான ஒருத்தி என் இதயத்தை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டாள். அவளைப் பார்த்தால் அகந்தைப் பேய் ஓடி விடும்.”

பச்சைப்புடவைக்காரி மறைந்த பிறகும் அவளின் சிரிப்பு என் காதில் ஒலித்தது”



--தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us