ADDED : பிப் 20, 2025 08:34 AM

பிரியும் நேரம்
வெள்ளி அன்று மாலை கோயிலுக்கு நடந்தே சென்றேன். கோயிலின் வாசலை அடைந்தபோது மனமெல்லாம் நிறைந்து போயிருந்தாள் அந்த மகமாயி. அதனால் ஒரு பூக்காரி தன் கடையை விட்டுவிட்டு ஓடி வந்த போது அன்பின் மிகுதியால் கேட்டேன்.
“கூட்டமா இருக்கிற நேரத்துல கடைய விட்டுட்டு வரீங்களேம்மா?”
“மொத்தப் பிரபஞ்சமும் என் கடைதான். என் கடைப்பொருளைத் எவனாலும் திருட முடியாது”
தாயே என்று கதறியபடி காலில் விழுந்தேன்.
“உன் மனதில் அபூர்வமான நிறைவு உண்டாகியிருக்கிறது. நடக்கப்போவதைச் சொல்ல இதுதான் சரியான சமயம்.”
“சொல்லுங்கள் தாயே”
“நாம் பிரியும் நேரம் வந்துவிட்டது”
“தாயே”
“பதறாதே. அதே சமயம் நாம் ஒன்றும் நேரமும் வந்துவிட்டது. கோயிலில் ஒரு சித்தர் உன்னைச் சந்தித்து விவரம் சொல்வார்”
அன்னை மறைந்துவிட்டாள். தயங்கியபடி கோயிலுக்குள் நுழைந்தேன். அம்மன் சன்னதிக்கு முன் காவி உடை தரித்த சித்தர் ஒருவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன். என் ஆசிரமத்துக்கு வருகிறீர்களா? அருகில்தான் இருக்கிறது”
“அன்னையைத் தரிசித்துவிட்டு வருகிறேன்.”
“இங்கேயே காத்திருக்கிறேன்.”
கோயிலை ஒட்டிய சந்தில் சித்தரின் ஆசிரமம் இருந்தது. உள்ளே நுழைந்ததும் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கினேன். அமர்ந்ததும் அவர் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார்.
“இதுதான் உங்கள் கடைசிப் பிறவி என்றாள் பச்சைப் புடவைக்காரி. இந்தப் பிறவியிலும் உங்களை முதுமை, நோய், தனிமை எதுவும் வாட்டக் கூடாது என சொல்லியிருக்கிறாள். அதற்காக நான் செய்யவேண்டியதை எல்லாம் செய்யச் சொல்லியிருக்கிறாள்”
“நீங்கள்?”
“குங்குமச் சித்தர் என்று என்னைச் சொல்வார்கள். உங்களைப் போல் நானும் பக்தன்தான். பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”
“உங்களைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டதே”
“அது நான் இறைவியிடம் கேட்டுப் பெற்ற வரம். பண்பட்ட பக்தர்களை அவள் என்னிடம் அனுப்பி வைப்பாள். அவர்களின் ஆன்மிகப் பயணத்தை நான் நிறைவு செய்து வைப்பேன்”
“நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?”
“நாளைக் காலை ஆறு மணிக்கு இங்கே வந்து விடுங்கள். உங்கள் நலனுக்காக யாகம் செய்வேன். அதன் முடிவில் உங்களுக்கு வரம் கிடைத்துவிடும். இதுதான் உங்கள் கடைசிப் பிறவி என்ற நிலை கிடைத்துவிடும்.”
தாயே காட்டிய வழியில் செல்ல மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மறுநாள் காலை அந்த ஆசிரமத்திற்குச் சென்ற போது சித்தரும் அவரது நான்கைந்து சீடர்களும் இருந்தார்கள். நடுவே யாகக் குண்டம் இருந்தது. என்னை அருகே அமரவைத்து யாகம் செய்ய ஆரம்பித்தார் சித்தர். தாயின் அன்பை நினைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தேன். திடீரென பெரிய சத்தம் கேட்டது. சித்தர்தான். திடுக்கிட்டேன். யாகத்தை நிறுத்தச் சொன்னார்.
என்னிடம் மென்மையான குரலில்...“ஏதோ தடை தென்படுகிறது. நீங்கள் துன்பப்பட வேண்டும் என பச்சைப் புடவைக்காரி விரும்புகிறாள். முதுமை, தனிமை, நோயை நன்றாக அனுபவித்த பிறகு தான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும் என அவள் நினைக்கிறாள் போலும். கவலைப் படாதீர்கள்.
நான் தாயின் நாமத்தை மூல மந்திரமாக்கி உங்கள் காதில் உபதேசிக்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு மனமொன்றி லட்சம் முறை ஜபித்தால் தடை நீங்கிவிடும். அதன்பின் யாகம் தொடர்ந்து நடக்கும்”
எனக்கு முதலில் திகைப்பாக இருந்தது. அடுத்த கணம் எல்லாம் புரிந்துவிட்டது. சட்டென எழுந்து நின்றேன். சித்தரை நோக்கிக் கைகளைக் கூப்பியபடி மென்மையான ஆனால் உறுதியான குரலில் பேசினேன்.
“எனக்காக இதுவரை நீங்கள் பட்ட பாட்டிற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் துன்பப்படவேண்டும் என பச்சைப்புடவைக்காரி விரும்புகிறாளா? அது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவள் விருப்பப்படி துன்பப்படுவதுதான் சிறந்த வழிபாடு. இந்த யாகம் வேண்டாம்”
“என்ன உளறுகிறீர்கள்? அவனவன் ஆயிரம் ஆயிரம் பிறவிகளுக்குப் பிறகு அடையும் பேற்றை உங்களுக்கு இப்போதே தர தயாராக இருக்கிறாள் தாய். நீங்கள் அவளோடு ஒன்றும் காலம் தொலைவில் இல்லை. இந்தச் சமயத்தில் முரண்டு பிடித்தால்...''
“பச்சைப்புடவைக்காரியோடு ஒன்றிவிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இதுதான் என் கடைசிப் பிறவி என்று தாய் சொன்னபோது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் நான் துன்பப்படவேண்டும் என விரும்புகிறாளே! நான் அவளுடைய பக்தன் இல்லை. உங்களைப் போல் சித்தரும் இல்லை. அவளுடைய கொத்தடிமைகளில் நானும் ஒருவன்.
அடிமை என்ற முறையில் எனக்கென விருப்பங்கள் இருந்தால் என் அடிமைத்தனம் முழுமையாக இருக்காதே! அவள் விருப்பப்படி துன்பங்களை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். ஆயிரம் பிறவிகள் எடுக்கிறேன். ஒவ்வொன்றிலும் முதுமை, நோய், தனிமை போன்ற துன்பங்களை நிறைய அனுபவிக்கிறேன்”
“அதன்பின்?”
“அவள் இஷ்டம். ஆயிரம் ஆண்டுகள் நரகத்தீயில் வேகவேண்டும் என அவள் விரும்பினால் அந்த நரகம் எனக்கு சொர்க்கம்”
“உங்கள் உறுதியைப் பாராட்டுகிறேன். உங்களுக்காகத் தாயிடம் என்னவென்று பிரார்த்தனை செய்து கொள்ளட்டும்?”
“அவளோடு ஒன்ற வேண்டும், இதுதான் என் கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் போன்ற எந்த ஆசைகளும் என் மனதில் தோன்றக் கூடாது. பச்சைப்புடவைக்காரி எதை விரும்புகிறாளோ அது மட்டுமே என் விருப்பமாக இருக்க வேண்டும். அவள் எனக்குக் கொடுக்கும் வலி, வேதனை, துன்பம் என அனைத்தையும் அவள் பிரசாதமாகப் பாவிக்கும் இதயம் வேண்டும் என்று அவளிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நான் வருகிறேன்.”
விடுவிடுவென்று வெளியே நடந்தேன். கோயில் வாசலில் இருந்த பூக்காரி என் வழியை மறித்தாள்.
“என்னப்பா கோபமா? என்னுடன் ஒன்றும் நிலையை தரவில்லை என வருத்தமா?”
“அதுதான் அதைவிட ஆயிரம் மடங்கு மதிப்புள்ள ஞானத்தைக் கொடுத்துவிட்டீர்களே! அப்புறம் எதற்கு வருத்தமும் வாழைக்காயும்?”
“அப்படி என்ன ஞானத்தைத் தந்தேன்?”
“உங்களுக்கு அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டீர்களே! அடிமைக்கு என்று என்ற தனி விருப்பமும் இருக்ககூடாது என்று எனக்கு உணர்த்திவிட்டீர்களே! அடிமையின் மனதில் இருக்கும் ஆசை எத்தனை புனிதமாக இருந்தாலும்கூட அது அடிமைத்தனத்திற்கு இழுக்கு என சொல்லித் தந்து விட்டீர்களே! உங்களோடு ஒன்றும் ஆசை இருந்தால்கூட என் அடிமைத்தனத்தில் முழுமை இருக்காது என பாடம் நடத்திவிட்டீர்களே!”
“இனிமேல் நாம் அடிக்கடி சந்திக்க முடியாது. உனக்கு என்ன வேண்டும் என்று சொல், தந்து விட்டுப் போகிறேன்.”
“ஆயிரம் பிறவிகளைக் கொடுங்கள். வலியைக் கொடுங்கள், வேதனையைக் கொடுங்கள். நரகத்தில் என்னை எரிய விடுங்கள். ஆனால் எந்த நிலையிலும் உங்கள் கொத்தடிமை என்ற நிலை மாறாமல் இருக்க அருள் புரியுங்கள் தாயே”
பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள். பிரியும் நேரம் வந்துவிட்டதோ? இல்லை. என்றும் என்னுள் நானாகவே இருக்கும் அன்பரசியைப் பிரியவும் முடியுமா என்ன?
-முற்றும்
இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com