ADDED : ஜூன் 18, 2026 08:52 AM

வேண்டியதைத் தருபவள்
பச்சைப்புடவைக்காரியின் கோயிலை விட்டு வெளியே வந்தேன். அங்கே நின்ற காரில் இருந்து ஒரு ஆணும் பெண்ணும் இறங்கினர்.
“நான் தனசேகரன். இவ என் மனைவி பார்வதி. மகனுக்குக் கல்யாணம் வச்சிருக்கோம். அவசியம் வந்திருங்க”
பத்திரிகையை வாங்கிக் கொண்டு வாழ்த்தினேன்.
“கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என வேண்டிக்கங்க. மகன் கொஞ்சம் முரண்டு பிடிச்சான். சரி பண்ணிட்டேன். என் கோடிக்கணக்கான சொத்தை மகனுக்கு பிறக்க போகற குழந்தைக்கு எழுதி வச்சிருக்கேன்”
அவர்கள் சென்றவுடன் தாயை வணங்கிவிட்டு நடையைக் கட்டினேன்.
பத்து நாளுக்குப் பிறகு ஒரு நாள் இரவு 11:00 மணிக்கு என் அலைபேசி அலறியது.
“நான்... ஆஸ்பத்திரியில இருந்து நர்ஸ் சந்தியா பேசறேன். தனசேகரனும் அவரோட மகனும் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்காங்க''
“இதுல நான் ... எப்படி ...''
“தனசேகரனோட மனைவி பார்வதி உங்கள உடனே வரச் சொன்னாங்க சார் ப்ளீஸ்... மருத்துவமனைக்கு விரைந்தேன்.
காரை நிறுத்தும் இடத்தில் ஒருத்தி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அருகில் சென்றதும் சட்டென என்னை நிமிர்ந்து பார்த்தாள். என் கண்கள் பொங்கிவிட்டன. அவள் காலில் விழுந்தேன்.
“அப்பனும் பையனும் சாகக் கிடக்கிறார்கள். அப்பனை மட்டும் பார். உன் மனதில் தோற்றுவிப்பதை அப்படியே சொல்லிவிடு”
போனில் பேசிய நர்ஸ் சந்தியா விவரம் சொன்னாள்.
“தனசேகரனோட பையன் அளவுக்கு அதிகமா துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கான். எப்படியோ காப்பாத்திட்டாங்க. என் தற்கொலைக்கு எங்கப்பா தான் காரணம்னு எழுதி வச்சிருந்த காகிதத்த பாத்ததும் தனசேகரனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. ரெண்டு பேரையும் காப்பாத்திட்டாங்க. பெரியவருக்கு இன்னொரு அட்டாக் வந்தா பிழைக்கறது கஷ்டம்னு''
தனசேகரன் கிழிந்த நாராகக் கிடந்தார். என் கையைப் பற்றியபடி, “அம்மனுக்கு திருக்கல்யாணம் பண்றதா இருந்தேன். நாளைக்குத்தான் நாள் குறிச்சிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே! உங்க பச்சைப்புடவைக்காரி எதையும் தப்பாத்தான் செய்வாளோ? இரக்கம் இல்லாத ராட்சசியா?”
“அவ செஞ்ச தப்ப அப்புறம் பார்ப்போம். முதல்ல நீங்க செஞ்ச தப்ப பாக்கலாம்”
“தப்பு செஞ்சேனா. ஒரு ஈ, எறும்புக்கு கூட''
“இந்த டயலாக் எல்லாம் வேண்டாம். உங்க மகன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னானா?”
“ஆமா. சொன்னான். நான்தான் வற்புறுத்தி அவனக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன்”
“சம்மதிக்க வைக்க நீங்க என்ன செஞ்சீங்க?”
“என் கோடிக்கணக்கான சொத்தும் என் மகனுக்குப் பிறக்கப் போற குழந்தைக்குத்தான்னு உயில் எழுதி வச்சிட்டேன். என் மகன் கல்யாணம் செஞ்சிக்க மறுத்தா என் சொத்து முழுசும் பச்சைப்புடவைக்காரி கோயிலுக்குப் போகணும்னு எழுதி வச்சேன். எனக்கு வேற வழி தெரியல. நாட்டுல ஒவ்வொரு அப்பனும் செய்யறதத்தான் நானும் செஞ்சேன்.”
“உங்க மகன் ஏன் வேண்டாம்னு சொன்னான்னு தெரியுமா?”
“வேற என்ன சார் இருக்கப் போகுது? எவளாவது பிச்சைக்காரியக் காதலிச்சிருப்பான். நான் ஒத்துக்க மாட்டேன்னு கல்யாணமே வேண்டாம்னு மிரட்டியிருப்பான்”
“இல்லை.”
“அப்புறம்?”
“உங்க மகனுக்கு ஆண்மைக் குறைபாடு இருக்குங்கறதக் கண்டுபிடிச்சிட்டான். டாக்டர்கிட்ட பரிசோதனை செஞ்சிக்கிட்டான். ஒண்ணும் செய்ய முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. தன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாழாக வேண்டாமேனு கல்யாணம் வேண்டாம்னு சொன்னான். அதப் புரிஞ்சிக்காம அவனக் கட்டாயப்படுத்தி, உயில் எழுதி வச்சி'' தனசேகரர் அதிர்ந்தார். நான் தொடர்ந்தேன்.
“இந்த கல்யாணம் நடந்தா என்ன ஆகும் தெரியுமா? உங்க மருமக முதல்ல நொறுங்கி போயிருப்பா. உயிலப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டு யார் கூடயாவது சேர்ந்து ஒரு குழந்தைய பெத்துக்கிட்டு உங்க காலத்துக்கு அப்புறம் உங்க மகனத் துரத்தி விட்டிருப்பா. அதை தடுத்திட்டா பச்சைப்புடவைக்காரி”
தனசேகரன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் கோபத்தில் கத்தினேன்.
“உனக்குத்தான்யா உன் பிள்ளையப் பத்தித் தெரியல. என் பச்சைப்புடவைக்காரிக்கு தன் புள்ளைங்களப் பத்தி நல்லாவே தெரியும். அதனாலதான் நீ கேட்டத கொடுக்காம உன்னை காப்பாத்தியிருக்கா. அவளப் போய் ராட்சசின்னு சொல்லிட்டியே. நல்லா இரு”
தனசேகரன் அழுதார்.
“இனிமே நான் என்ன சார் செய்யணும்” அவருடைய குரலில் உயிரே இல்லை.
“நீங்கள் நடந்தும் கல்வி ஸ்தாபனங்களில் இருந்து உங்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருது. உங்கள் தொழில் மூலம் கோடிகள் குவிகின்றன. தொழிலில் லாபம் சம்பாதியுங்கள். ஆனால் கல்வியைத் தொழிலாக்காதீர்கள். மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தைக் குறையுங்கள். ஆசிரியர்கள் சம்பளத்தை அதிகமாக்குங்கள். எல்லோருக்கும் நிறைய வசதி செய்து கொடுங்கள். பச்சைப்புடவைக்காரி உங்களுக்கு நல்ல வழி காட்டுவாள்”
கார் நின்ற இடத்தில் பணிப்பெண் வடிவில் நின்ற பச்சைப்புடவைக்காரியைப் பார்த்ததும் நிலைகுலைந்து போய் காலில் விழுந்தேன்.
“உன் முகம் சரியாக இல்லையே”
“அந்த குடும்பத்தையே ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டீர்கள். தனசேகரன் செல்ல வேண்டிய வழியையும் காட்டி விட்டீர்கள். அவர் மகனுக்கு அந்தக் குறைபாடு. அதனால் அவனுடைய வாழ்க்கை...''
“நன்றாக இருக்கும். கல்விப்பணியை அவன் அறப்பணியாக செய்வான். பல நல்லவர்களைச் சந்திப்பான். நான்கு வருடம் கழித்து ஈஸ்வரி என்ற பெண் அந்த கல்லுாரியில் பேராசிரியையாக சேர்வாள். தங்கமான குணம் கொண்டவள். கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரே மகள். அவளின் அர்ப்பணிப்பு உணர்வு தனசேகரனின் மகனை ஈர்க்கும். இருவருக்கும் காதல் மலரும். அவளிடம் அவன் எதையும் மறைக்க மாட்டான். அவர்கள் கல்யாணம் செய்வதோடு சிறப்பாக கல்விப் பணியைச் செய்வார்கள். அவர்களால் ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் நல்ல வாழ்வு பெறுவர். அவர்களை விடு. உனக்கு வேண்டியதைக் கேள்”
“தனசேகரன் வருந்தி வருந்திக் கேட்டதை நீங்கள் கொடுத்திருந்தால் அவருடைய மகனின் வாழ்க்கையே நாசமாகியிருக்கும். கேட்டதைக் கொடுக்காமல் வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றும் உங்கள் தாயன்பைப் புரிந்து கொண்டேன். இனி மேல் உங்களிடம் எதையும் கேட்காத மனம் வேண்டும், தாயே! துன்பம், வலி, நோய், வேதனை, மரணம் என நீங்கள் எதைக் கொடுத்தாலும் அதை உங்கள் பிரசாதமாக ஏற்கும் பக்குவம் வேண்டும் தாயே”
கையில் இருந்த துடைப்பத்தை துாக்கி எறிந்து விட்டு சிரித்தபடி மறைந்தாள் சிங்காரவல்லி.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
