தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 20

பச்சைப்புடவைக்காரி - 20

பச்சைப்புடவைக்காரி - 20


ADDED : ஆக 27, 2026 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயதுக்கு மீறிய ஆசை

'உங்க மனசெல்லாம் மத்தாப்புங்கற நாவலப் பத்தி எங்க டைரக்டர் ராஜன்கிட்ட சொன்னேன். அசந்துட்டாரு. அத வச்சி ஒரு படம் எடுக்கலாம்னு சொல்லிட்டாரு. உங்களப்பத்திச் சொன்னேன். உங்களுக்கு நெறையக் காசு கொடுத்துட்டு காண்ட்ராக்ட் போடணும்னு சொல்லிட்டாரு. சென்னைக்கு ஒரு நடை வந்தீங்கன்னா டைரக்டர் சாரப் பாத்துப் பேசலாம். உங்க பேரும் புகழும் பட்டி தொட்டியெல்லாம் பரவும். இனிமே உங்க புத்தகங்கள் அமோகமா விக்கும். நீங்க எங்கேயோ போகப் போறீங்க”

திரைப்பட உதவி இயக்குனர் ரவியின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன். அவர் என்னுடைய தீவிர வாசகர். “உங்க கதையச் சினிமாவா எடுக்கணும் சார்” என சொல்லிக் கொண்டேயிருப்பவர். அதன்பின் விஷயங்கள் வேகமாக நடந்தன. இயக்குனர் ராஜன் என்னிடம் பேசினார்.

என் நாவலில் வரும் பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுக்கும் விவாதம் சுவாரஸ்யமாக இருந்தது. என் கற்பனையில் உலா வந்த பாத்திரங்களை பெரிய திரையில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே இனித்தது. சென்னைக்குச் செல்ல டிக்கெட் கூட வந்து விட்டது.

அன்றிரவு பத்து மணிக்கு உதவி இயக்குனரிடமிருந்து போன்.

“காரியத்தையே கெடுத்துட்டாங்க சார்”

“என்னாச்சு?”

“எழுத்தாளர் கீர்த்தியை தெரியுமா?”

“தெரியுமே”

“அவங்கதான் உங்களுக்கு வில்லியா வந்துட்டாங்க”

“என்ன நடந்தது ரவி?”

“உங்க நாவலுக்குத் திரைக்கதை கூட எழுதி முடிச்சிட்டோம். தயாரிப்பாளரையும் பிடிச்சாச்சு. முக்காவாசி நடிக நடிகைகள் கால்ஷீட்டும் கிடைச்சிருச்சி. நடுவுல கீர்த்தியும் ராஜனும் சந்திச்சாங்க. என்ன நடந்துச்சின்னு தெரியல, சார். உங்க கதைய டிராப் பண்ணிட்டாரு டைரக்டர். கீர்த்தி எழுதின மலர்ந்தது மனம்ங்கற நாவல சினிமாவா எடுக்கப் போறாங்களாம். உங்களுக்காக நான் டைரக்டர்கிட்ட சண்டை போட்டேன். உங்க கதையில இல்லாத ஏதோ ஒண்ணு கீர்த்தியோட கதையில இருக்குன்னு சொல்றாரு சார்''

“இருக்கலாம்”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. கீர்த்தி நல்ல அழகு. தன்னோட கதை வரணும்னா என்ன வேணும்னாலும் செய்வாங்க. எங்க டைரக்டர் பொம்பளை விஷயத்துல கொஞ்சம் வீக். புரிஞ்சிதா, சார்?”

நான் மனம் ஒடிந்து போனேன். என் நாவல் நெருக்கமான உறவுகளிடையே மலரும் தன்னலமற்ற அன்பைப் பற்றிச் சொல்கிறது. அதுதானே இப்போதைய தேவை? கீர்த்தி என்னை விடச் சிறந்த எழுத்தாளர் என்பதால் அவளுடைய கதையைத் தேர்ந்தெடுத்தால் அது வேறு விஷயம். ஆனால் கீர்த்தி சில திரைமறைவு வேலைகளால் என் வாய்ப்பைத் தட்டிப் பறித்திருக்கிறாள். அது எந்த வகையில் நியாயம்? இரண்டு நாட்கள் பித்து பிடித்ததுபோல் இருந்தேன். மூன்றாவது நாள் சென்னைக்குச் சென்ற போது நண்பருடன் ஒரு பெரிய மாலுக்குச் சென்றேன். கூடவே நண்பனின் பத்து வயதுப் பேரனும் வந்திருந்தான். சிறுவர்கள் ஓட்டுவதற்காக பொம்மைக் கார்களை வைத்திருந்தார்கள்.

நண்பரின் பேரன் சந்தோஷமாக ஒரு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நண்பர் எங்கோ சென்றுவிட்டார். அப்போது சீருடை அணிந்த பெண் ஊழியர் என்னை நோக்கி வந்தாள். “வெறுமனே பாத்துக்கிட்டே இருக்கீங்களே? நீங்களும் கார் ஓட்டலாம் சார். ஒரு மணி நேரத்துக்கு 200 ரூபாய்தான். பசங்கல்லாம் எப்படியா ஜாலியா ஓட்டறாங்க பாருங்க”

விளையாடுகிறாளா என்ன?

“ஏம்மா, என்னைப் பாத்தா சின்னப் பையன் மாதிரி தெரியுதா? நான் எப்படி கார் ஓட்டறது? உங்க காருக்குள்ள உட்காரணும்னா நான் என் உடம்ப எவ்வளவு குறுக்கிக்கணும் தெரியுமா? முதல்ல என்னால உங்க கார்ல உட்கார முடியுமா? ஏன் இப்படி விவரம் இல்லாமப் பேசறீங்க?”

“நீ அறிவு இல்லாமல் ஆசைப்படுவதைச் சுட்டிக் காட்டத்தான். இந்தப் பொம்மைக் காரை நீ ஓட்ட நினைப்பது உன் வயதுக்கு மீறிய ஆசை என உனக்கே தெரிகிறது. அதே போலத் தான் உன் எழுத்து திரைப்படமாக வர வேண்டும் என நினைப்பது. ஒரு வேளை அப்படியே வந்தாலும் அதன் பின் அடுத்தடுத்து அவர்கள் உன்னிடம் கதை கேட்டு வந்தாலும் நீ உன்னை அநியாயத்திற்குக் குறுக்கிக் கொள்ள வேண்டும்.

திரைப்படம் என்பது ஒரு பொம்மைக்கார் மாதிரி. அதனுள் அமர நீ உன் எழுத்தைக் குறுக்கிக் கொள்ள வேண்டும். நீ அன்பைப் பற்றி மட்டுமே எழுதுகிறாய். என்னைப் பற்றித்தான் எழுதுகிறாய். அதனால் உன் எழுத்து வானளாவ உயர்ந்து நிற்கும் வரத்தை தந்திருக்கிறேன். நீ ஓட்ட பல கோடி மதிப்புள்ள பெரிய சொகுசுக் காரை தந்திருக்கிறேன். அதை ஓட்டாமல் குழந்தைகள் ஓட்டும் பொம்மைக் காரை ஓட்ட ஆசைப்படுகிறாயே”

“தன் அழகைக் காட்டி என் வாய்ப்பை தட்டிப் பறித்துக் கொண்ட கீர்த்திக்கு...”

“அவள் பின்னால் கஷ்டப்படுவாள் என்று சொல்வேன் என நினைத்தாயா? எழுத்தைப் பொறுத்தவரை கீர்த்தி பால் மணம் மாறாத குழந்தை. காரை ஓட்ட வேண்டும் என்ற வெறி அவளுக்கு இருக்கிறது. நினைத்ததை நடத்திக் காட்டி விட்டாள். கர்மக் கணக்கின் பலனை அவள் அனுபவிப்பாள். ஆனால் அதற்குள் அவள் பெரிய அளவில் புகழ் பெறுவாள். அதைப் பற்றி உனக்கென்ன வந்தது? யார் எப்படி போனால் உனக்கென்ன? நான் உனக்குக் கொடுத்த காரை நீ ஓட்டு. அதன் மூலம் இந்த உலகத்திற்கு அன்பென்னும் வழியைக் காட்டு”

“வந்த வாய்ப்பு இப்படி...''

“வந்தது வாய்ப்பு இல்லை. ஆபத்து... நீ அதில் மாட்டிக் கொண்டிருப்பாய். ஒரு வேளை உன் எழுத்து திரைப்படமாகி இருந்தால் உன் வாழ்க்கை முறையே மாறியிருக்கும். அதன் பிறகு நீ என்னைப் பார்க்க முடியாமலே போயிருக்கும். அன்பை பற்றி உன்னால் எழுத முடியாமலேயே போயிருக்கும். அதல பாதாளத்தில் விழப் போகிறாய் என்பதைத் தெரிந்தே நான் தான் கீர்த்தியை அனுப்பி உன்னைக் காப்பாற்றினேன்”

நான் பச்சைப்புடவைக்காரியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“கீர்த்தி இப்போது நடந்து கொண்டிருக்கும் பாதையில் நீ பல பிறவிக்கு முன்பே நடந்து விட்டாய். எல்லா வகையிலும் எழுதி செல்வத்தையும் புகழையும் அளவுக்கதிகமாகச் சம்பாதித்து அந்தப் போதையிலேயே பல முறை உன்னை நீயே அழித்துக்கொண்டாய். இருப்பதெல்லாம் அன்பு ஒன்றுதான் என்ற தெளிந்த ஞானம் இப்போதுதான் உனக்கு வந்திருக்கிறது. இப்போது நீ எழுதும் எழுத்து பலரையும் அன்பின் வழியில் நடக்க வைக்கிறது. முதுகலை பட்டம் பெற்று, முனைவர் பட்டமும் பெற்ற பின் ஐந்தாம் வகுப்பில் படிப்பவளோடு போட்டி போடுகிறாயே, வெட்கமாக இல்லை உனக்கு? இந்த வயதில் குழந்தைகள் ஓட்டும் காரை ஓட்ட ஆசைப்படுவது வயதுக்கு மீறிய ஆசை எனத் தெரியவில்லை?”

வேரறுந்த மரமாக அவள் காலடியில் விழுந்தேன்.

“என்ன வேண்டும் கேள்”

“இது போன்ற ஆபத்தான வாய்ப்புகள் எனக்கு வரவே கூடாது, தாயே! அப்படியே வந்தாலும் நான் மனம் கலங்காமல் உங்கள் பக்கம் நிற்க வேண்டும். வேறு எந்த வரத்தையும் விரும்பாத மனம் வேண்டும்”



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us