ADDED : செப் 10, 2026 07:32 AM

தெய்வம் நீயே
காலை 6:00 மணி. அலைபேசி அலறியது. கோவையிலிருந்து டாக்டர் நாதன்.
“என்னண்ணா சோதனைமேல சோதனை?”
“என்ன விஷயம்?”
“செல்விக்கு 32 வயசு. புருஷன் ஓடிப் போயிட்டான். எட்டு வயசுப் பையன். செல்விக்கு முதல் வகை சர்க்கரை நோய். ஏழு வருஷமா சிகிச்சை நடக்குது. திடீர்னு அவளோட கிட்னி பெயிலாருச்சின்னா. டயலிசிஸ் பண்றதுலயும் ஆயிரத்தெட்டு சிக்கல் இருக்கு. நல்ல வேளையா செல்வியோட அம்மாவே கிட்னி தர்றேன்னு சொல்லிட்டாங்க. கிட்னி பொருந்திருக்கு. எப்படி பார்த்தாலும் 9 லட்சம் செலவாகும். இப்போ எங்க அறக்கட்டளையில அந்தளவுக்கு பணம் இல்ல. இன்னும் பத்து நாள் தாமதமானாலும் செல்வியோட உயிருக்கு...'' நாதன் அழுதே விட்டார்.
ஏதோ சமாதானம் சொன்னேன். செல்வி இறந்துவிட்டால் அந்தப் பையன்... அவனை யார் வளர்ப்பார்கள்? வயிற்றில் அந்த பகீர் உணர்வை வைத்துக்கொண்டு என்னால் சாப்பிட முடியவில்லை. அன்று பார்த்து அலுவலகத்தில் மலையளவு வேலை இருந்தது. மதியத்திற்குள் நல்ல செய்தி வரும் என நம்பினேன்.
அலைபேசி அலறியது.
டாக்டர் நாதன். உற்சாகமாக அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
“செல்வியோட பிரச்னைக்குத் தீர்வு வரப் போகுதுன்னு நெனைச்சா இப்போ அதைவிட பயங்கரமான பிரச்னை வந்து நிக்குது? எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. காலையிலருந்து சாப்பிடல. வேலை செய்யவும் பிடிக்கல”
“இப்போ என்ன பிரச்னை?”
“விஜய்ன்னு ஒரு பையன். 24 வயசு. முதல் வகை சர்க்கரை நோய். அவனுக்கும் கிட்னி பெயிலாயிருச்சி. அவங்கப்பா கிட்னியே பொருத்தமா இருக்கு. இப்போ இன்னொரு 9 லட்சம் வேணுமே? இப்போதான் எங்க அறக்கட்டளைக்காக பிச்சை எடுக்காத குறையா எல்லார்கிட்டயும் பணம் வாங்கினேன். இன்னும் வேணும்னு கேட்டா அடிப்பாங்கண்ணா”
“அது சரி, செல்வி, விஜய் இவங்க வீட்டுல...''
“செல்வி ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வேலை பாக்கறாண்ணா. சம்பளம் எட்டாயிரம். அதில அவளும், அவ பையனும் சாப்பிடறதே கஷ்டம். விஜயோட அப்பா மூட்டை துாக்கறவருண்ணா. அவராலயும் பெரிசாப் பணம் புரட்ட முடியாது. செல்விக்கும் விஜய்க்கும் வாழ்வு கொடுக்க வேண்டும் தாயே என பச்சைப் புடவைக்காரியிடம் பிரார்த்திக்கவும் மனம் இல்லை. 'குறிப்பாக யாருக்காகவும் பிரார்த்தனை செய்யாதே. யாரை வாழ்விக்க வேண்டும், யாரைச் சாகடிக்க வேண்டும் என எனக்குத் தெரியும்'என பச்சைப் புடவைக்காரி படித்துப் படித்துச் சொல்லி இருக்கிறாளே!
அன்று மாலை அவள் கோயிலுக்கு நடந்தே செல்வது என தீர்மானித்தேன். பசி கிள்ளியது. லேசாக தலை சுற்றியது. அவள் காலில் போய் விழுவது என உறுதியுடன் நடந்தேன். தெரு முனையில் ஒரு பிச்சைக்காரி வழிமறித்தாள்.
நான் மேலே நடக்க முயன்றேன்.
“நில்” என உறுமினாள். நான் நடுங்கியபடி திரும்பினேன். அவள் கையில் அழுகிய கொய்யாப்பழம் இருந்தது.
“இதை சாப்பிடு”
ஒரு பிச்சைக்காரியே பிச்சை போடும் அளவிற்கு என் நிலைமை தாழ்ந்து விட்டதா? அவள் கண்களில் இருந்த ஏதோ ஒன்று என்னை உருக்கியது. கையை தயக்கத்துடன் நீட்டினேன். அழுகிய பழத்தைப் போட்டாள் அவள்.
“ம்” என்ற உறுமல் கேட்டதும் அதை உரித்து வாயில் போட்டேன். அமிர்தமாக இனித்தது. பசியும் கவலையும் காணாமல் போனது. செல்வியையும், விஜயையும் காப்பாற்றுவது பச்சைப்புடவைக்காரியின் பாடு. நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
பிச்சைக்காரி வடிவில் நிற்பவள்தான் பிரபஞ்சத்தை படைத்து, காத்து, அழிக்கும் ஆதி பராசக்தி என உணர்ந்தேன். தரையில் விழுந்து வணங்கினேன்.
யார் போடும் பிச்சையால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வாழ்கின்றனவோ அவளே பிச்சைக்காரியாகி வந்து நிற்கும் பேரன்பு என்னை அழ வைத்தது.
“தாயே...'' அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.
“என்னப்பா செய்வது? செல்விக்கும், விஜய்க்கும் கர்மக்கணக்கு சரியாக இல்லை. அவர்கள் இருவரும் இறக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் அந்த மருத்துவனும் நீயும் உங்களுக்கு தொடர்பில்லாதவர்களுக்காக பட்டினி கிடந்தீர்கள். கண்ணீர் சிந்தினீர்கள். உங்கள் அன்பில் அவர்களின் கர்மக் கணக்கைப் பொசுக்கிவிட்டேன்”
“அதனால்...''
நான் விழுந்து வணங்கும் போது என் சட்டைப்பையில் இருந்த அலைபேசி கீழே விழுந்தது. இப்போது அது அலறியது.
“எடுத்துப் பேசு. நீங்கள் இருவரும் கேட்டதைக் கொடுத்து விட்டேன்”
டாக்டர் நாதன் பேசினார்.
''தாயின் கருணையை எப்படியண்ணா வர்ணிக்க முடியும்?”
நான்தான் கண் எதிரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறேனே!
குரலை கஷ்டப்பட்டு இயல்பு நிலைக்கு மாற்றிக்கொண்டு பேசினேன்.
“என்ன நடந்தது?”
“கே.எஸ். கம்பெனிங்கற நிறுவனம் நம்ம அறக்கட்டளைக்கு வருஷா வருஷம் இருபது லட்சம் நன்கொடை கொடுப்பாங்க. இந்த வருஷ நன்கொடையை போன வாரம்தான் கொடுத்தாங்க. அவங்க தொழிலாளி ஒருத்தருக்கு கிட்னி பெயிலாயிருச்சி. வேற கிட்னியும் கெடைச்சிருச்சி. அவங்க வேற ஏதோ ஆஸ்பத்திரில கேட்டிருக்காங்க. அவங்க 30 லட்சம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. கம்பெனி எம்.டி., என்கிட்ட போன் பண்ணி உண்மையிலயே அவ்வளவு செலவாகுமான்னு கேட்டாரு. நாம வழக்கமா போற ஆஸ்பத்திரியில 9 லட்சத்துக்குப் பண்ணலாம் சார்னு சொன்னேன். நானே ஏற்பாடு செஞ்சி கொடுத்தேன். அடுத்து எம்.டி., சொன்ன வார்த்தையைக் கேட்டு அழுதுக்கிட்டிருக்கேண்ணா.
'டாக்டர், உங்களால எனக்கு 21 லட்சம் மிச்சமாச்சு. இந்தத் தொகைய உங்ககிட்டயே கொடுத்துடறேன். யாருக்காவது கிட்னி மாற்று சிகிச்சை செய்யணும்னா இதப் பயன்படுத்திக்கங்கன்னு சொன்னதும் பெரிசா அழ ஆரம்பிச்சிட்டேன். எம்.டி., பதறிட்டாரு. அவர்கிட்ட செல்வியப் பத்தியும் விஜய்யப் பத்தியும் சொன்னேன். உடனே ஆப்பரேஷன் பண்ணச் சொல்லுங்க. இன்னிக்கு ராத்திரியே பணம் வரும். அது மட்டுமில்ல, இனிமா வருஷா வருஷம் எங்க கம்பெனிலருந்து முப்பது லட்சம் நன்கொடை கொடுப்போம். அத வச்சிக்கிட்டு நீங்க மூணு ஏழைங்களுக்கு கிட்னி ட்ரான்ப்ளேண்ட் செய்யலாம்னு சொன்னாரு. என்னண்ணா நடக்குது?”
வேறு என்ன, பச்சைப்புடவைக்காரியின் அன்பின் ஆட்சி நடக்கிறது.
நாதனிடம் அப்புறம் பேசுகிறேன் எனச் சொல்லிவிட்டு வேரறுந்த மரம் போல் பிச்சைக்காரியின் காலில் விழுந்தேன்.
“உனக்கு என்னப்பா வேணும்?”
“நீங்கள்தான் வேண்டும் தாயே! உங்களின்அபரிமித அன்பை ருசி பார்த்து விட்டேன். இனி வேறு எதுவும் எனக்கு ருசிக்காது. உங்கள் அன்பைத் தவிர வேறு எதுவும் வேண்டாத மனம் வேண்டும் தாயே”
“விநோதமான மகன் நீ”
“வித்தியாசமான தாய் நீங்கள்”
என்னை நடுத்தெருவில் அழவிட்டு விட்டு மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
