தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 29

பச்சைப்புடவைக்காரி - 29

பச்சைப்புடவைக்காரி - 29


ADDED : அக் 29, 2026 01:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 01:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துரோகத்தை வென்ற அன்பு

“கூலிப்படைய வச்சி ஒரு கொலை செய்யப் போறேன்.”

என் முன் அமர்ந்திருந்த ராஜேஸ்வரிக்கு 55 வயது. புடவையில், நகைகளில், தோரணையில் பணக்காரக் களை தெரிந்தது.

“எனக்கு ஒரே பையன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் கல்யாணமாச்சு”

அலைபேசியில் மகனின் திருமணத்தைக் காட்டினாள். ஜோடிப் பொருத்தம் பிரமாதம்.

“என் மருமகளுக்கு கள்ளத் தொடர்பு இருக்கோன்னு சந்தேகம் இருந்தது. ஆளுங்கள வச்சி விசாரிச்சேன். அது உண்மைதான்னு தெரிஞ்சது. காலேஜ்ல கூடப் படிச்சவனோட ஊர் சுத்திக்கிட்டிருக்கா. என் பையனுக்குத் துரோகம் செஞ்சவள கொல்லப் போறேன். அதுக்கும் பேசி முடிச்சிட்டேன். பத்து லட்சத்தில் வேலை கச்சிதமா முடிஞ்சிரும்”

“அத எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?

“பச்சைப்புடவைக்காரிக்கு அன்பு ஜாஸ்தின்னு சொல்றீங்களே... அவ இரக்கமே இல்லாத ராட்சசின்னு தெரிய வேண்டாமா? நான் அவளத் தவிர வேற யாரையும் கும்பிட்டதில்ல. தன்னை வணங்கினவள அம்போன்னு கைவிடறவ ஒரு ராட்சசியாத்தானே இருக்க முடியும்?”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

“எவ்வளவு திறமையாக் கொலை செஞ்சாலும் மாட்டிக்குவீங்க. உங்களக் ஜெயில்ல போடுவாங்க. உங்களுக்கு ஆயுள் தண்டனை கெடைக்கும். உங்க மருமக ஒழுக்கம் கெட்டவள்னு ஊருக்கே தெரிஞ்சிரும். அவமானம் தாங்காம உங்க மகன் தற்கொலை பண்ணிப்பான். பரவாயில்லையா?”

ஓவென்று அழுதாள் ராஜேஸ்வரி.

“வெள்ளிக்கிழமை வாங்க. பச்சைப்புடவைக்காரி நல்ல வழி காட்டுவாள் என நம்புவோம். இல்லேன்னா உங்களுக்குப் பிடிச்ச அழிவுப் பாதையிலேயே போங்க”

அன்று மாலை கோயிலுக்கு நடந்தே சென்றேன். என்னை ஒட்டி ஒரு ஆட்டோ வந்து நின்றது.

“கோயிலுக்குத்தானே போறீங்க? வாங்க” - ஆட்டோவுக்குள் இருந்து ஒரு அழகான பெண் அழைத்தாள்.

நான் முறைத்தேன்.

“ராஜேஸ்வரி கொலைகாரியாவதை தடுக்கலாம் என நினைத்தால்...''

அவளுடைய காலில் விழுந்தேன்.

“வெள்ளிக்கிழமை உன் மூலமாகவே அவளுக்கு வழி காட்டுகிறேன். அந்த வழியில் சென்றால் தப்பிப்பாள்”

“இல்லாவிட்டால்...''

“விதி விட்ட வழி”

பதிலுக்குக் காத்திருக்காமல் ஆட்டோ பறந்தது.

வெள்ளிக்கிழமை. ராஜேஸ்வரி பதட்டத்தில் இருந்தாள். “பச்சைப்புடவைக்காரி ஏன் இப்படி இதயமே இல்லாம...''

“நிறுத்து. உன் மருமக செஞ்ச துரோகத்த வாய் கிழியப் பேசற? நீ செஞ்ச துரோகத்த மறந்துட்டியா”

ராஜேஸ்வரியின் முகம் வெளிறியது.

“நானா? என்ன உளறுறீங்க?”

“உன் புருஷன் துபாய்ல இருந்தப்ப அவனோட நண்பன் உங்க வீட்டுக்கு வந்தான். அவனுக்கு இந்த ஊர்ல ஏதோ வேலை இருந்தது. உங்கள நம்பி அவன உங்க வீட்டுல தங்கச் சொன்னார் உங்க கணவர். அப்போ நீங்க ரெண்டு பேரும் எல்லை மீறல?”

ராஜேஸ்வரி அதிர்ந்தாள்.

“சந்தர்ப்பம்... சூழ்நிலை... புருஷனவிட்டு ரொம்ப நாள் பிரிஞ்சி இருந்ததால...''

“அந்த துரோகத்த உன் புருஷன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டியா? இல்லேல்ல... இப்பவாவது கேப்பியா?''

பலவீனமான குரலில் சொன்னாள் ராஜேஸ்வரி.

“என் கணவருக்கு ஸ்ட்ரோக் வந்து விளங்காம போயிருச்சி. இப்ப அதச் சொன்னா...''

“உன் புருஷனோட நண்பன் சாகும் போது உன் புருஷன்கிட்ட நடந்ததச் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டான். அந்த அதிர்ச்சிலதான் உன் புருஷனுக்கு ஸ்ட்ரோக்கே வந்துச்சி. இப்போ நீ மன்னிப்பு கேட்டேயாகணும். அப்போதான் உன் புருஷனோட மனசு அமைதிப்படும்”

“அப்படியே செய்யறேன். அதனால என் மருமக திருந்திருவாளா?”

“மாட்டா. அவமேல ஆத்திரப்படாதே. அவளும் மனுஷி தானே! அவகிட்ட தன்மையாப் பேசு. அவளோட விவகாரம் உனக்குத் தெரியும்னு சொல்லு. சத்தியமா அத உன் பிள்ளைகிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லு. அவளோட காதலன் அவளக் கடைசி வரைக்கும் வச்சிக் காப்பாத்துவானான்னு கேக்கச் சொல்லு. அவன் நல்லவன்னு தெரிஞ்சா நானே உனக்கு என் மகன்கிட்டருந்து விவாகரத்து வாங்கித் தரேன்னு சொல்லு. நீ உன் வாழ்க்கைய வாழுன்னு அன்போட சொல்லு”

“என்ன ஆகும்?”

“யாருக்கு தெரியும்?”

“வேற ஏதாவது செய்யணுமா?”

“ஆமா. இனி பச்சைப்புடவைக்காரியப் பத்தி தப்பா பேசாதே. அவ்வளவு பெரிய துரோகம் செஞ்ச நீ ராட்சசியா, இல்லை, ஒரு துரோகி கூட நிம்மதியா வாழணும்னு நினைக்கற பச்சைப்புடவைக்காரி ராட்சசியா?”

அழுதபடி கிளம்பினாள் ராஜேஸ்வரி.

அன்று கோயிலுக்கு அருகே நின்ற ஒரு பெண் போலீஸ் என்னைத் தடுத்து நிறுத்தினாள். அவள் சிரிப்பே அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது.

“என் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது தாயே!”

“நல்லதே நடக்கும். ராஜேஸ்வரி தன் கணவரிடம் மன்னிப்பு கேட்பாள். அவன் மனம் சமாதானம் அடையும். அதன் பின் அவனுடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகும்.

“நீ சொன்னதைப் போல அவள் தன் மருமகளிடம் சொல்வாள். அவளும் காதலனிடம் அதைச் சொல்வாள். அவன் ஏற்கனவே திருமணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு. என் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வர முடியாது என திமிருடன் சொல்வான். அவனை விட்டு விலகி மனம் திருந்துவாள். ராஜேஸ்வரியின் காலில் விழுந்து கதறுவாள்.

ராஜேஸ்வரி அவளைத் தேற்றுவாள். 'நடந்ததை உன் புருஷனிடம் சொல்லி மன்னிப்பு கேள். இல்லாவிட்டால் பின்னால் பிரச்னையாகி விடும். உன் காதலன் ஏதாவது போட்டோவை அனுப்பினால் உன் வாழ்வே கேள்விக் குறியாகும் என அறிவுரை சொல்வாள். ராஜேஸ்வரியின் மகன் தன் மனைவியை மன்னித்து ஏற்பான்.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும். குடும்பமே மகிழ்ச்சியாக வாழும். உனக்கு என்னப்பா வேண்டும்?

“துரோகிகளைக் கூட அரவணைத்துக் காப்பாற்றும் உங்கள் அன்பின் சன்னதியில் எந்த வரத்தையும் கேட்க மனம் வரவில்லை. என் வாழ்வில் பல துரோகங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ராஜேஸ்வரியைப் போல் துரோகிகளை கொலை செய்ய வேண்டும் என நினைத்ததில்லை. ஆனால் அவர்கள் அழிய வேண்டும் என மனதின் ஒரு ஓரத்தில் நினைப்பு இருக்கிறது. அந்த நினைப்பு முற்றிலும் அழிய வேண்டும், தாயே! என்னைக் கொல்ல வருபவர்களையும் நேசிக்கும் அளவிற்கு அன்பு வர வேண்டும், தாயே”

“அந்தளவிற்கு அன்பு வந்தால் நீ என்னுடன் ஒன்றி விடுவாய். அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதுவரை நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன”

“மனதால் கூட யாருக்கும் துரோகம் செய்யாத அளவிற்கு என் மனதில் அன்பு வேண்டும், தாயே!”

ஒரு பெரிய சிரிப்புடன் மறைந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us