ADDED : நவ 26, 2026 08:03 AM

தவிப்பைத் தவிர்த்தவள்
ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு பெண் அதிகாரி என்னை வழிமறித்தாள்.
“டிக்கெட் காமிங்க” காட்டினேன்.
“இது போலி டிக்கெட். என்கூட வாங்க”
நானே கணினியின் மூலமாக வாங்கியது எப்படி போலியாக இருக்க முடியும்?
“வழக்கமாக நீதான் என்னிடம் பிரச்னையுடன் வருவாய். இன்று நான் உன்னிடம் வந்திருக்கிறேன்”
பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
“ஒருத்திக்கு உன் உதவி தேவைப்படுகிறது. பராக்குப் பார்த்துக் கொண்டு அன்பு காட்ட வேண்டிய சந்தர்ப்பத்தை கோட்டை விட்டுவிடாதே.”
பச்சைப்புடவைக்காரி மறைந்தாள்.
ஒரு ஓரமாக அமர்ந்திருந்தேன். திடீரென யாரோ கத்தும் சத்தம் கேட்டது.
70 வயது பெண்ணை 30 வயது பெண் திட்டியபடி இருந்தாள்.
முதியவள் நின்றபடி அங்கேயே சிறுநீர் கழித்து விட்டாள். அவளுடைய மருமகள் அவளை வாய்க்கு வந்தபடி திட்டினாள். பின் அவளை விட்டு விட்டுச் சென்றுவிட்டாள்.
முதியவளின் முகத்தைப் பார்த்தேன்.
பொது இடத்தில் அசிங்கம் செய்து விட்டோமே என்ற அவமானம் பிடுங்கித் தின்றது. போதாக்குறைக்கு மருமகளின் திட்டு வேறு.
ஓடிச் சென்று முதியவளின் கையைப்பிடித்தேன்.
“எங்கூட வாங்க. டாய்லெட் பக்கத்துலதான் இருக்கு. மாத்துப் புடவை இருக்கா?”
கையிலிருந்த பையைக் காட்டினாள். அவள் ஆடை மாற்றிக் கொண்டு வெளியே வர பத்து நிமிடமானது.
அங்கே இருந்த இருக்கையில் சோர்ந்து அமர்ந்தாள். அருகில் அமர்ந்தேன்.
“தவிச்சிக்கிட்டிருக்கேன். என்னால கட்டுப்படுத்தவே முடியல. இந்தப் பிரச்னைக்கு எத்தனையோ மருந்து சாப்ட்டாச்சு. சரியாகல.”
“டயப்பர் போட்டுக்கலாமே”
“டயப்பர் போட்டா உடம்பெல்லாம் எரியுது. அதுக்கு என் மருமகள் திட்டறதே தேவலைன்னு தோணுது”
நான் மவுனமாக இருந்தேன்.
“நெனைவு தெரிஞ்ச நாள்லருந்து பச்சைப் புடவைக்காரிய மட்டும்தான் கும்பிட்டுறேன். அவ ஏன் சார் இப்படி இரக்கமே இல்லாம நடந்துக்கறா? அவ மனசுல மருந்துக்குக் கூட அன்பு இல்லையோ?”
'அவள் அன்பு மட்டும்தான் நம் நோய் தீர்க்கும் மருந்து' எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
“வேண்டாம்மா. ஏற்கனவே உங்க கர்மக் கணக்கு இடியாப்ப சிக்கலா இருக்கு. அந்த அன்புத் தெய்வத்தை அநியாயமா பழிச்சி இன்னும் சொதப்பலாக்கிராதீங்க”
“ஒரு ஈ, எறும்புக்கும் நான் கெட்டது நெனச்சதில்ல...”
“இந்த டயலாக்கை கேட்டு காது புளிச்சு போச்சு. மனசறிய பொய் சொல்றவங்க எல்லாம் இதையே தான் சொல்றாங்க”
“நான் பொய் சொல்றேனா?”
“உண்மைய மறைக்கறீங்க. ரெண்டும் ஒண்ணுதான். நீங்க செஞ்ச கொடுமைய சொல்லட்டுமா?”
மருமகள் சாடியபோது இல்லாத பயம் இப்போது அவள் முகத்தில் தெரிந்தது.
“35 வருஷத்துக்கு முன்பு நடந்தது. அந்தப் பணக்கார வீட்டின் ஒரே மருமக நீங்க. உங்க மாமியார் இறந்துட்டாங்க. மொத்த அதிகாரமும் உங்க கையிலதான் இருந்தது. உங்க வீட்டுல நீங்க வச்சதுதான் சட்டம்.
“அப்போ உங்க வீட்டுல ராமுத்தாயின்னு ஒரு வேலைக்காரி இருந்தா. நேர்மையானவ. நல்லா வேலை செய்வா. அப்போ அவ கர்ப்பமா இருந்தா. ஒரு நாள் ஏதோ ஆத்திரம் அவசரத்துல உங்க பெட்ரூம் டாய்லட்ட பயன்படுத்திட்டா. அது தெரிஞ்சவுடன எப்படி கத்தினீங்க? அந்த அதிர்ச்சியத் தாங்க முடியாம அவளுக்கு அபார்ஷன் ஆயிருச்சி. அவ வேலைய விட்டு நின்னுட்டா. இப்பக்கூடத் தன் வயித்துலயே இறந்த குழந்தைய நெனச்சி அழுதுக்கிட்டிருக்கா.
“வெனைய விதைச்சிட்டு வெள்ளெரிக்காயை அறுவடை பண்ண முடியுமா”
“தப்பிக்க வழி இல்லையா? சாகற வரைக்கும் தவிக்கத்தான் வேணுமா? அப்படின்னா பேசாம ஓடற ரயிலில பாய்ஞ்சி உசுர விட்டுடறேன்”
“அடுத்த ஜென்மத்துலயும் இதே தவிப்பு தொடரும். வசதி எப்படி?”
“என்னதான் வழி?”
“கஷ்டமான வழிதான் இருக்கு. உங்களால அத யோசிச்சிக் கூடப் பாக்க முடியாது”
“என் உயிரக் கொடுத்தாவது முயற்சி பண்றேன்”
“ராமுத்தாயி பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. அஞ்சு பவுன் நகைக்காக கல்யாண தேதி தள்ளிக்கிட்டே போகுது. நீங்க ராமுத்தாயி வீட்டுக்குப் போய் அவகிட்ட அன்னிக்குத் திட்டினதுக்கு மன்னிப்பு கேட்டு அஞ்சு பவுன் நகையை கொடுத்தீங்கன்னா உங்க தவிப்பு அடங்க வாய்ப்பு இருக்கு. ஆனா உத்தரவாதம் கிடையாது”
“அஞ்சு பவுனுக்குப் பதிலா பத்து பவுன் கொடுத்துடறேன். ஆனா நான்... எப்படி அவகிட்ட மன்னிப்பு கேக்கறது?”
“தப்பு செஞ்சது நீங்கதானே! உங்களாலதான ராமுத்தாயியோட குழந்தை செத்துப் போச்சு? ஒரு மன்னிப்பு கூட கேட்க மாட்டேன்னா எப்படி? வாங்க, கெளம்பின எடத்துக்கே போயிருவோம். உங்க விதிப்படி நடக்கட்டும். ஆனா இன்னொரு தரம் பச்சைப்புடவைக்காரியை பத்தி தப்பாப் பேசினா உங்க மருமகளவிட மோசமா நான் திட்டுவேன் ஜாக்கிரதை”
“நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன்”
“நல்லது. போகலாம். உங்க மருமக உங்களத் தேடிக்கிட்டிருப்பா”
நான் செல்ல வேண்டிய ரயில் வந்துவிட்டது. என் இடத்தைத் தேடிப் பிடித்து அமர்ந்தேன். எதிரே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
“என்னப்பா அவளை ஒரு வழி பண்ணி விட்டாயே?”
“நீங்கள் செய்வித்ததைச் செய்தேன். என்னாகும் தாயே?”
“வேலைக்காரியின் வீடு தேடி போகத் தயங்குவாள். நாளாக ஆக மருமகளின் கத்தல் அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு நாள் துணிந்து கிளம்பி விடுவாள். வேலைக்காரியிடம் மன்னிப்பு கேட்பாள். தன்னிடம் உள்ள பத்து பவுன் நகையை கொடுப்பாள். வேலைக்காரியின் மகளின் திருமணம் நன்றாக நடக்கும்”
“இவளுடைய தவிப்பு?”
“அடங்கி விடும். நோய் முற்றிலும் குணமாகாது. என்றாலும் இன்று நடந்ததுபோல் இனி நடக்காது. எல்லாவற்றையும் விட முக்கியமானது இவளின் அடுத்த பிறவி அமோகமாக இருக்கும். உனக்கு வேண்டியதைக் கேள். நான் கொடுக்கும் மனநிலையில் இருக்கிறேன்”
“என்று இல்லை சொல்லுங்கள்''
“சரி... கேள்”
“எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள் தாயே! உங்கள் அன்பை உணரும் மனதை எனக்கு கொடுத்து விட்டீர்கள். இதை விட பெரிய வரம் வேறு எதுவும் இருக்காது. இன்னொருவருக்காக வேண்டிக் கொள்கிறேன்”
“யாருக்காக?”
“அந்த முதியவளின் மருமகளுக்காக, அவளைக் குறை சொல்வது மிகவும் சுலபம், தாயே! வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் அவள் தன் மாமியாரைத் திட்டியது மட்டும்தான் தெரியும். அவளுடைய தவிப்பு எப்படிப்பட்டது யாராலும் அனுமானிக்கக்கூட முடியாது.”
“அவள் தவிப்பும் அடங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளப் போகிறாயா என்ன?”
“சத்தியமாக இல்லை, தாயே!”
“பின்?”
“அவளுடைய மனதை அன்பால் நிரப்பி விடுங்கள். அவள் தவிப்பு தன்னைப் போல் அடங்கி விடும்”
பெரிதாகச் சிரித்தபடி காற்றுடன் கலந்தாள் காளீஸ்வரி.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
