ADDED : ஆக 20, 2026 11:57 AM

அகத்தியரைப் போலே
“என்ன ரொம்ப நேரமா யோசிச்சிட்டே இருக்கீங்க. இந்த உலகத்துக்குள்ள வாங்க” என கேட்டார் அமிர்தம்.
“நான் எதுக்கு யோசிக்கிறேன்னா அடுத்த வாரம் என் மாமா பேத்திக்கு கல்யாணம். ரொம்ப சிரமப்பட்டு தான் இந்த கல்யாணத்தையே நடத்துறாங்க. உபயோகமா இருக்க மாதிரி கல்யாணத்துக்கு பரிசு என்ன தரலாம்னு யோசிக்கிறேன்” என்றார் கிருஷ்ணவேணி.
“நல்ல விஷயம்தான். பரிசுகள் உபயோகமா இருந்தா அதைவிட ஆனந்தம் என்ன இருக்கு. அதை பயன்படுத்தும் போதெல்லாம் நம்மையும் மனசுக்குள்ள நினைச்சுப்பாங்க. ஒரே கல்லுல இரண்டு மாங்கா” என்றார் அமிர்தம்.
“ஆமா! நம்ம அகத்தியர் பரிசளித்த மாதிரி”
“அகத்தியர்? ஓ! பெண் பிள்ளை ரகசியத்துக்குள்ள நுழைஞ்சாச்சா?! இன்று 27வது ரகசியம் தானே?”
“ஆமா! ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே தான் அந்த வாக்கியம். ராமாயணத்துல வரக்கூடிய ஒரு நிகழ்வு. தசரதன் சொல்லுக்கு கட்டுப்பட்டு ராமன், சீதை லட்சுமணனுடன் 14 வருடம் காட்டுக்கு புறப்பட்டான். அவர்களுடன் நாட்டு மக்களும் சேர்ந்து புறப்பட்டனர்.
ராமனை பார்க்க அவர்கள் மீண்டும் மீண்டும் சித்திரக்கூடம் வந்து போனால் அது காடாக இல்லாமல் நாடாகி விடும் என பயந்து தண்டகாரணியம் புறப்பட்டான் ராமன். அது பெரும்காடு. அயோத்தியை விட்டு வெகு தொலைவில் இருந்தது. அங்கு போகும் வழியில் விராதன் என்பவன் இடையூறு செய்தான். விராதனை ராம லட்சுமணர் வீழ்த்தினர். அவன் தன் சாபம் நீங்கி ஞானம் பெற்று ராமனை பரம்பொருள் என போற்றினான்.
பின்னர் சரபங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். சரபங்க முனிவர் தன் நல்ல வினைகள் அனைத்தையும் ராமனின் திருவடியில் அர்ப்பணித்தார். பின் ராமன் முன்னிலையில் நெருப்பு வளர்த்து தன் வாழ்வை முடிக்க அதில் இறங்கினார். ராமனை சாட்சியாக வைத்து முனிவர் மோட்சமடைந்தார்.
இப்படி ஒரு புறம் இருக்க, முனிவர்கள் பலரும் வந்து ராமனிடம் பேசினர். அவர்களின் வேள்வி, தவம் அரக்கர்களின் இடையூறு இன்றி நடக்க ராமன் உதவுவதாக உறுதி கூற அவர்கள் மகிழ்ந்தனர். ராமன் பத்து ஆண்டுகள் தண்டகாரண்யத்தில் தங்கியிருந்து இப்படி வேள்வி காத்தான்.
ராமனால் மகிழ்ந்த அனைவரும் அகத்தியரை சந்திக்குமாறு ராமனிடம் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். அதனால் ராமனும் மனைவி, தம்பியுடன் அவருடைய ஆசிரமத்திற்கு புறப்பட்டான். வழியில் சுதீக்கண முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். மூவரும் சுதீக்கணனை வணங்கினர். அவர்களை வரவேற்று ராமனுக்கு தவத்தின் பயனையெல்லாம் காணிக்கையாக சமர்ப்பித்தார் முனிவர். அடுத்ததாக அகத்திய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.
முனிவர்களில் எல்லாம் சிறந்தவர் அகத்தியர். பழுத்த ஞானி. மருத்துவம், ஜோதிடம், இலக்கியம், இலக்கணம் என பல துறைகளில் வல்லுநர். ஒரு சமயம் கைலாயத்தில் பரமசிவன் பார்வதி திருமணத்தை பார்க்க எல்லோரும் கூடினர் அதனால் வட பகுதி தாழ்ந்து தென்பகுதி உயரத் தொடங்கியது.
இதனால் உலக இயக்கம் தடைபடும் என்பதால் இரு பகுதிகளையும் சமப்படுத்த நினைத்த சிவபெருமான், திருமணம் காண வந்திருந்த அகத்தியரை கூப்பிட்டு தெற்கே சென்று பூமியை சமன் செய்யும்படி உத்தரவிட்டார். அதை ஏற்று அகத்தியர் புறப்பட்டார். தெற்கே வரும் போது விந்திய மலையை பார்த்தார். அது உயரமாக வளர்ந்து கொண்டே இருந்ததால் சூரியன், நட்சத்திரங்கள், கிரகங்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.அகத்தியரைக் கண்டதும் விந்திய மலை வணங்கியது. 'யாருக்கும் இடையூறு அளிக்காதபடி நீ குறுகிக் கிடப்பாய்' என ஆசிர்வதித்து அதை அடக்கினார்.
இந்த அகத்திய முனிவரின் கமண்டலம் காகத்தால் சரித்து விடப்பட்டதால் அவரது கமண்டலத்தில் இருந்து ஒழுகிய நீர் காவிரியாக தோன்றியது. இப்படி பல சிறப்புகள் கொண்ட குள்ளமான உருவத்தை கொண்ட அகத்தியரை பார்க்கவே சீதை லட்சுமணனுடன் வந்தார் ராமர். அவர்களைக் கண்டதும் எதிர்கொண்டு அகத்தியர் வரவேற்றார். ராமன் பணிவுடன் வணங்க, அன்போடு தழுவிக் கொண்டார் அகத்தியர். தன்னுடனே தங்கி விடுமாறு ராமனை வேண்டினார். ஆனால் ராமனோ தென்திசைக்கு செல்ல விருப்பம் தெரிவித்து விடை பெற விரும்பினான்.
அப்போது ராமனிடம், 'நீ உலகங்களுக்கு எல்லாம் அரசன், உனக்கு சில பரிசுகளை நான் தர விரும்புகிறேன், இதோ விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட இந்த வில்லை எடுத்துக் கொள்' என்றார் அகத்தியர். அந்த ரத்தினம் பதித்த வில் பிரகாசமாக இருந்தது.ராமன் அதை பெற்றுக் கொண்டார். வில்லுடன் அம்புகள் நிறைந்த அம்பராத்துாணியையும் வாங்கிக் கொண்டார்.
'இந்திரனால் தரப்பட்ட இந்த கூர்மையான அம்புகள் அக்னி போல ஒளி வீசும். எடுக்க எடுக்க அம்புகள் குறையாது' என்றார். அத்துடன் ரத்தினங்கள் பதித்த தங்க கத்தி ஒன்றை கொடுத்தார். 'ராமா... இந்த வில், அம்புகள், கத்தியை கொண்டே மகாவிஷ்ணு அசுரர்களைக் கொன்று தேவர்களை முற்காலத்தில் காப்பாற்றினார்' என்றார்.
எதற்கு இத்தனை ஆயுதம் பரிசளிக்கிறார் அகத்தியர் என யோசித்தார் ராமர். அதை உணர்ந்த முனிவர், 'இது எதிரிகளை அழிக்க உதவியாக இருக்கும்' என வாழ்த்தினார். அகத்தியர் எதிர்காலத்தை அறியும் ஞான திருஷ்டி பெற்றவர்.
ராவணனை வதம் செய்ய இந்த ஆயுதங்களை கொடுத்தார். அதை பெற்ற பின் பஞ்சவடி நோக்கி பயணமானான் ராமன். அப்படி அகத்தியர் ஆயுதம் கொடுத்து உதவியது போல நான் உதவவில்லையே சுவாமி. அதனால் ஊரை விட்டு போகிறேன் என ராமானுஜரிடம் சொன்னாள் பெண் பிள்ளை.” என முடித்தார் கிருஷ்ணவேணி.
“ஆகா... மற்றவரின் தேவையறிந்து கொடுப்பவரே பெரியவர். அதிலும் ராமரின் தேவையை அறிந்து கொடுத்துள்ளார் அகத்தியர் என்பது சிறப்பு. அகத்தியர் ஆயுதத்தை கொடுத்தார். ஆனால் எறிபத்தர் சற்று வித்தியாசமானவர். சிவனடியவர்களை காக்க எப்போதும் ஆயுதத்தை வைத்துக்கொண்டு இருந்தார்”
“எதற்கு அப்படி வைத்துக் கொண்டிருந்தார் சொல்லுங்க கேட்போம்'' என்றார் கிருஷ்ணவேணி.
''எறிபத்தர் என்பவர் சிவனின் தீவிர பக்தர். சிவன் அடியார்களுக்கு துன்பம் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தவர். அடியார்களை யாரும் துன்புறுத்தினால் தண்டிப்பதற்காகவே கோடரி வைத்திருந்தார். ஒரு நாள் பக்தரான சிவகாமி ஆண்டார் என்பவர் மலர்கள் சேகரித்துக் கொண்டு வந்தார். அப்போது அரசனின் யானை ஒன்று அந்த மலர் கூடையை சிதறச் செய்தது. இதைக் கண்டதும் எறிபத்தருக்கு கோபம் வந்தது.
கோடரியால் யானையையும் அதன் பாகர்களையும் வெட்டிக் கொன்றார். இந்தச் செய்தி காட்டுத்தீயாக பரவியது. எறிபத்தரை தண்டிக்காமல் தானே தவறு செய்து விட்டதாகச் சொல்லி மன்னர் உயிர் துறக்க தயாரானார். இதை கேள்விப்பட்ட எறிபத்தர், தன்னுயிரை விடத் தயாரான மன்னரை எண்ணி மகிழ்ந்து, 'என் உயிரை முடித்துக் கொள்கிறேன்' எனச் சொல்லி வாளால் தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது பார்வதியுடன் சிவபெருமான் தோன்றி இறந்த யானை, பாகர்களையும் உயிர்ப்பித்து எறிபத்தரின் அன்பையும் அரசனின் பக்தியையும் உலகிற்கு உணர்த்தினார்.
இப்படி பக்தர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக எப்போதும் ஆயுதத்தை வைத்திருந்தவர் தான் எறிபத்தர். அதனால் அவர் எறிபத்த நாயனாரானார்.”
''இந்த எறிபத்தர் பெரிய கோபக்காரரா இருந்திருப்பார் போல! ராமனின் நன்மைக்காக அகத்தியர் ஆயுதத்தை கொடுத்தார். அடியார்களை காப்பதற்காக எறிபத்தர் ஆயுதத்தை எடுத்தார். எப்போதும் ஆயுதம் தாங்கினார். இருவருமே பக்தியும், துாய்மையான மனமும் கொண்டவர்கள்.
“உண்மை தான். ஆமா அடுத்த வாக்கியம் என்ன கிருஷ்ணவேணிம்மா?”
“அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே”
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
