தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 30

பெண்பிள்ளை ரகசியம் - 30

பெண்பிள்ளை ரகசியம் - 30


ADDED : செப் 03, 2026 11:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 11:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனகரைப் போலே

கிருஷ்ணவேணியும் அமிர்தமும் ஒரே நேரத்தில் அப்பார்ட்மெண்டின் இடதுபுறத்தில் உள்ள விசாலமான பூங்காவை அடைந்தனர்.

“என்ன இன்னைக்கு ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்கோம். ஆச்சரியமா இருக்கே”

“சமமான நேரத்துல நாம இருவரும் வந்திருக்கிறது முக்கியமில்ல, நம்ம மனசை சமநிலையா வச்சிருக்கறது தான் முக்கியம். ராமாயணத்தில அப்படியொரு ஆச்சரியமான கதாபாத்திரம் ஜனகர் தான்”

“அப்படியா! பெண் பிள்ளை ரகசியத்துக்குள்ள 29வது வாக்கியம் தானே?”

“ஆமா, கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே தான் அந்த ரகசியம். இதுவும் ராமாயணத்தில் வரும் நிகழ்வு தான். ராமாயணத்தில் சொல்லப்படும் ஜனகர் ஒரே ஜனகர் அல்ல. பல பேர் இருக்காங்க. மிதிலையை தலைநகராக ஆட்சி புரிந்த விதேக நாட்டு மன்னர்களின் குடிப்பெயர் தான் ஜனகர் என்பது. சீதையின் தந்தை ஜனகரின் இயற்பெயர் சீரத்வஜர். குடி பெயரையும் சேர்த்தால் சீரத்வஜ ஜனகர் என்பர். இந்த ஜனகர் மன்னராக வாழ்ந்த பெரிய ஞானி.

உலகத்தில் இருப்பவை எல்லாம் கடவுளின் சொத்து என்ற கொள்கை உடையவர். நாம் எதையும் கொண்டு வந்ததும் இல்லை; கொண்டு போவதுமில்லை. எல்லாம் அவனுடைய பொருள் என்ற கொள்கை உடையவர். சாஸ்திரங்கள் சொல்லும் விதிகளை கடைபிடித்து ஐம்புலன்களை அடக்கி அகங்காரம், மமதை இல்லாமல் எதையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர். கர்மயோகத்தால் பிரம்ம ஞானம் பெற்றவர் இவர்.

உபநிடதங்களில் பத்து மிக முக்கியமானவை. அவை ஈச, கேன, கடோப, பிரச்சன, முண்டக, மாண்டூக்கிய, ஐதரேய, தைத்ரீய பிரகதாரண்யக, சாந்தோக்ய உபநிடதங்கள். இதில் பிரகதாரண்யக உபநிடதத்தை சொல்லியவர் முனிவர் யாக்ஞவல்கியர். இவருக்கும், ஜனகருக்கும் இடையே அற்புதமான உறவு மலர்ந்தது. அது எப்படி எனில் மிதிலை மன்னரான ஜனகன் நீண்ட நாளாக தான் பிரம்ம ஞானம் அடைய ஒரு சிறந்த குருவைத் தேடிக் கொண்டிருந்தார். சீதைக்கு மணமகனை தேர்ந்தெடுக்க மட்டும் ஜனகர் போட்டி வைக்க வில்லை, தனக்கான ஞான குருவை தேர்ந்தெடுக்கவும் ஒரு போட்டி வைத்தார்.

குறிப்பிட்ட நாளில் சபை ஒன்றை மிதிலையில் கூட்டி விவாதம் நடத்தி எவர் அதில் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள், ஆயிரம் பசுக்கள் தரப்படும் என்றார். பல இடங்களில் இருந்து ஞானிகள் வந்தனர். அந்த போட்டிக்கு யாக்ஞவல்கியரும் வந்தார்.

அந்த சபையில் யார் தன்னை பிரம்மஞானி என சொல்கிறாரோ அவர் ஆயிரம் பொற்காசுகள், பசுக்களை ஓட்டிச் செல்லலாம் என ஜனகர் யாரும் எதிர்பாராதபடி அறிவித்தார்.

ஞானிகள் அனைவரும் நிறைகுடம் என்பதால் யாரும் அப்படி சொல்ல முன்வர வில்லை. யாக்ஞ வல்கியர் மட்டும் துணிச்சலுடன் தான் ஒரு பிரம்மஞானி என முழங்கி விட்டு பசுக்களுடன் செல்லத் தொடங்கினார். அப்போது சபையில் எந்த விதத்தில் பிரம்மஞானி என்பதை தெளிவுபடுத்த வேண்டினர்.

அதற்கு யாக்ஞவல்கியர், 'எந்த பிரம்மஞானியும் தானாக முன் வந்து தன்னை ஞானி சொல்ல மாட்டான். ஆனால் எனக்கு இன்றைய தேவை பசுக்கள். அதனால் ஓட்டிச் செல்கிறேன்' என்றார் துணிச்சலாக. அதற்குப் பிறகு ஏகப்பட்ட விவாதங்கள் அந்த சபையில் நிகழ்ந்து இறுதியில் யாக்ஞவல்கியர் பிரம்மஞானி என முடிவானது. அவரிடம் ஜனகர் சீடனாக சேர்ந்து கர்ம ஞானம் கற்று பெரிய ஞானியாக விளங்கினார்.

தன் சீடர் ஜனகரின் ஞானத்தை உலகிற்கு காட்ட நினைத்த யாக்ஞவல்கியர் ஒரு திட்டத்தை வகுத்தார். வேத பாடம் நடக்கும் போது மந்திர சக்தியால் மிதிலை நகரமே தீ பற்றி எரிவதைப் போல மாயையை ஏற்படுத்தினார். உடனிருந்த சீடர்கள் எல்லாம் ஐயோ என அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அவர்களுடைய காவி வேட்டி, கமண்டலத்தை தீக்கிரையாகாமல் காப்பாற்ற ஓடினர்.

எங்கே ஓடுகிறீர்கள் என யாக்ஞவல்கியர் கேட்ட போது எங்களுடைய பொருள்களை பாதுகாக்க ஓடுகிறோம் என்றனர். ஆனால் பக்கத்தில் இருந்த ஜனகர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் யாக்ஞவல்கியரிடம் வேதத்தின் பொருளை சொல்லச் சொல்லி கேட்டார்.

ரோம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பார்கள். ஆனால் இங்கே மிதிலை மன்னன் ஜனகன் ஆன்மிக தேடலில் ஈடுபட்டார். அப்போது ஜனகரிடம் ஏன் பதற்றம் கொள்ளவில்லை எனக் கேட்டார் யாக்ஞவல்கியர்.

இந்த உலகத்தில் என்னுடைய பொருள் என்று எதுவுமே இல்லை. அதனால் நான் பதறவில்லை என்றார். ஆத்மா மட்டுமே அழிவற்றது. இடையில் நம்மிடம் வந்து சேர்ப்பவை எல்லாம் அழிவுடையவை தான். அதனால் ஆத்ம ஞானம் பெற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இதிலிருந்து நான் வெளியில் வருவதாக இல்லை என்றார் ஜனகர். மன்னனாக இருந்தாலும் கடைசி வரையில் கர்ம ஞானத்தை கடைப்பிடித்தார்.ஜனகரை போல கர்ம ஞானத்தில் நிலையாக என்னால் இருக்க முடியுமா? அதனால் திருக்கோளூரில் இருக்க எனக்கு தகுதி இல்லை என்றாள் அந்த பெண் பிள்ளை” எனச் சொல்லி முடித்தார் கிருஷ்ணவேணி.

“ஜனகரைப் போல நமக்கும் தாமரை இலையில் தண்ணீர் போல மனசிருந்தா நல்லாத்தான் இருக்கும். சீதையின் தந்தை ஜனகரின் மனநிலைக்கு பொருத்தமானவராக என் நினைவுக்கு வருபவர் பட்டினத்தார் தான்”

“அப்படியா! யார் அவர்?” என ஆர்வம் தாங்காமல் கேட்டார் கிருஷ்ணவேணி.

“பட்டினத்தார் ஒரு பத்து நுாற்றாண்டுக்கு முன் நம்முடன் வாழ்ந்த சிவனடியார். அவருடைய இயற்பெயர் திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தவர். திருவெண்காடு சிவனை வேண்டியதால் பிறந்தவரே இந்த திருவெண்காடர். தந்தைக்கு பிறகு குடும்ப வியாபாரத்தை ஏற்றார். கடல் கடந்து வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சேர்த்தார். சிவகலை என்ற பெண்ணை மணந்தார். குழந்தைப் பேறு இல்லை. சிவனே குழந்தையாக வந்து கடற்கரையில் கிடந்தார். அந்த குழந்தையை எடுத்து மருதவாணன் எனப் பெயரிட்டு வளர்த்தார்.

மருதவாணன் 16 வயதான போது வணிகம் செய்து கப்பலில் திரும்பினான். அப்போது வெறும் தவிடு, எரு மூடைகளை மட்டும் கொண்டு வந்தான். இதைப் பார்த்த திருவெண்காடர் கோபப்பட்டார்.

தன் தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து, 'அப்பா வந்து கேட்டால் கொடு' எனச் சொல்லி மருதவாணன் மாயமாக மறைந்தான். திருவெண்காடர் இதைக் கேள்விப்பட்டு அந்த பெட்டியை திறந்த போது, அதில் ஓலைச்சுவடியும் காதற்ற ஊசியும் இருந்தன. அந்த ஓலையில் 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என எழுதியிருந்தது.இந்த ஒற்றை வரி அவரை உலுக்கியது.

அதாவது செத்த பின் காதற்ற ஊசி கூட வராது என்றால் இந்த கோடி சொத்து எதற்கு என்ற ஞானம் பிறந்தது. உடனே தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் தானம் செய்து விட்டு கோவணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். அன்று முதல் இவர் பட்டினத்தார் ஆனார். அத்துடன் ஊர் ஊராகச் சென்று சிவனை வழிபட்டார்.

அவருடைய பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் என தொகுக்கப்பட்டன. இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார். சிலர் இங்குள்ள விநாயகர் கோயில் வாசலில் குழந்தையாக விளையாடி திடீரென மறைந்ததாகவும் சொல்வர். அவர் சொல்லும் தத்துவம் என்னவென்றால் செல்வம் நிலையற்றது, கடவுள் மட்டுமே நிலையானவர் என்பது தான்” என்றார் அமிர்தம்.

“நாம் எல்லாரும் சூழ்நிலை கைதிகள் தான். ஜனகரைப் போல, பட்டினத்தார் போல சீரான மனநிலையை பெற்று வாழ்ந்தால் நன்றாகத் தான் இருக்கும். குடும்பத்தில் பந்த பாசம்னு ஐக்கியமாகிட்டு கடைசியில கடவுளை நினைக்கக் கூட நேரம் இல்லாமல் சுத்துறோம். என்ன பண்றது தொடர்ந்து பக்தி செய்யக் கூட இந்த கலியுகத்தில் சவாலா தான் இருக்கு. இந்த கதைகளின் மூலமாக நாம் இப்படி ஒரு நிலையை அடையணுங்கிறத தெரிஞ்சுக்குறோம்”

“சரி அடுத்த வாக்கியம் என்ன?”

“கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே”

“எதைக் கடித்து?” ஆர்வம் தொற்றியது அமிர்தத்திற்கு.

“அடுத்த சந்திப்புல சொல்றேன். அதுவரை பொறுங்க” எனச் சொன்ன கிருஷ்ணவேணி மேலே செல்ல லிப்ட்டின் பட்டனை அழுத்தினார்.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us