தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 31

பெண்பிள்ளை ரகசியம் - 31

பெண்பிள்ளை ரகசியம் - 31


ADDED : செப் 10, 2026 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 08:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கையார் போல...

கிருஷ்ணவேணி கையில் இருந்த மக்காச்சோளத்தை உதிர்த்து சாப்பிட்டார்.

“ அட! மக்காச்சோளத்தை நானும் இப்படித்தான் கையால் உதிர்த்து சாப்பிடுவேன். நீங்களும் அப்படித்தானா? வாயால கடிச்சா பல் எல்லாம் ஆட்டம் கண்டிடும் போல இருக்கு”

“நமக்கு வாய்ச்சது இந்த மக்காச்சோளம் தான். ஆனா திருமங்கையாருக்கு கடவுளோட காலையே கடிக்கிற பாக்கியம் இருந்திருக்கு. அது சரி! நாம என்ன திருமங்கையார் வம்சத்தில் பிறந்தவர்களா இப்படி ஆசைப்பட” என்றார் கிருஷ்ணவேணி.

“ஆமா... திருமங்கையார் ஏன் காலை கடிச்சார் சொல்லுங்க” என நடக்கத் தொடங்கினார் அமிர்தம். அவருடன் சேர்ந்து நடக்கத் தொடங்கிய கிருஷ்ணவேணி, “பெண்பிள்ளை முப்பதாவது வாக்கியமா கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலேனு சொல்றா இல்லையா... அது பெரிய சுவாரஸ்யம்.சோழநாட்டில் திருக்குறையலுாரில் கள்ளர் குலத்தில் பிறந்தவர் தான் திருமங்கையார். இவரது இயற்பெயர் நீலன். கல்வியும் வீர விளையாட்டுகளும் பயின்று சோழமண்டலத்தின் தளபதியானார்.

பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளை குவித்ததால் சோழ மன்னன் இவரை திருமங்கை நாட்டுக்கு மன்னனாக்கினார். இவருக்கு நான்கு உதவியாளர்கள் இருந்தனர்.

நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன். இதில் நீர்மேல் நடப்பான் என்பவன் நீரில் நடக்கும் திறமை பெற்றவன், நிழலில் ஒதுங்குபவன் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொள்ளும் சாமர்த்தியம் பெற்றவன், தாளூதுவான் எந்த வகை பூட்டாக இருந்தாலும் எளிதில் திறப்பான், தோலா வழக்கன் என்பவன் எந்த வழக்கில் மாட்டிக் கொண்டாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்து விடுவான்.

இந்த நால்வரின் மூலம் திருவெள்ளக் குளம் என்ற ஊரில் வாழ்ந்த ஒரு வைணவ மருத்துவரின் மகளான குமுதவல்லியை பற்றி கேள்விப்பட்டார் திருமங்கையார்.அவள் ஆடல் பாடலில் சிறந்த கலையரசி. அவளின் நடனத்தைக் காண திருவெள்ளக் குளத்திற்கு வந்தார் திருமங்கையான். அவள் பெற்றோரிடம் பெண் கேட்டார். அதற்கு அவள் வைணவரைத் தான் திருமணம் செய்வேன் எனக் கூறினாள்.

உடனே வைணவராவதற்கு என்ன செய்ய வேண்டும் என அவளிடமே கேட்டார். தோள்களில் சங்கு, சக்கரம் முத்திரை பெறுவதை பஞ்ச சமஸ்காரம் என்பர். அதை செய்யுமாறு கூறினாள். உடனே திருநறையூர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள பெருமாளிடம் பஞ்ச சமஸ்காரம் சடங்கை செய் வைக்க பணிக்கிறார்.

ஒரு வழியாக முத்திரை பெற்று வைணவராகி குமுதவல்லியின் முன் வந்து நின்றார். பஞ்ச சமஸ்காரம் ஆகி விட்டது திருமணம் செய்யலாமா என் கேட்டதற்கு குமுதவல்லியோ மற்றொரு நிபந்தனையை விதித்தாள்.

தினமும் 1008 அடியார்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. சரி செய்கிறேன் என உணவளிக்க ஆரம்பித்தான்.இதனால் செல்வம் கரைந்தது. அதன் பின் அரண்மனை கஜானா பணத்தை பயன்படுத்தினார். நிதிநிலை சரிந்தது.

அடுத்ததாக சோழ மன்னருக்கு கட்ட வேண்டிய கப்பத்தில் கை வைத்தார். அதனால் கோபம் கொண்ட சோழன் படையை அனுப்பினார். அவர்களை திருமங்கையான் துரத்தி அடித்தார்.

சோழ மன்னன் திருமங்கையானை பேச்சு வார்த்தைக்கு வரவழைத்து நயவஞ்சமாக சிறையில் தள்ளினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கனவில் தோன்றி, 'சோழ அரசனை அழைத்து வா; அவருக்கு வேண்டிய செல்வத்தை நான் தருகிறேன்' எனக் கூறினார். திருமங்கையானும் மன்னரிடம் விஷயத்தைச் சொல்லி அனுமதி பெற்று காஞ்சிபுரம் போனார். அங்கே பெருமாள் சொல்லிய இடத்தில் புதையல் கிடைத்தது. அதை வைத்து கப்பம் கட்டியது போக மீதியை அன்னதானம் செய்ய எடுத்துக் கொண்டார்.

இதை கேள்விப்பட்ட மன்னர் செல்வத்தை திருப்பி கொடுத்து இதையும் அன்னதானத்திற்கு பயன்படுத்துமாறு கூறினார். அந்த பணமும் விரைவில் தீர்ந்தது.

அதன்பின் வழிப்பறியில் இறங்கினார் திருமங்கையான். அதில் வரும் பணத்தில் அன்னதானம் செய்தார். ஒருநாள் உதவியாளர்கள் இன்று இரவு திருமண கோஷ்டி இந்த வழியாக வருகிறார்கள். அவர்களை வழிமறித்து வழிப்பறி செய்யலாம் என தகவல் கொடுத்தனர்.

அதன்படி புதுமண தம்பதிகள் பல்லக்கில் வர நகைகளை பறித்து துணியில் மூட்டையாக கட்டிக்கொண்டார். கிளம்பும் நேரத்தில் மணமகன் விரலில் தங்க மெட்டி மின்னியதை பார்த்த திருமங்கையான் அதை தரச் சொல்ல, முடிந்தால் கழற்றிக் கொள் என்றார் மணமகன். திருமங்கையான் குனிந்து மணமகனின் காலில் உள்ள மெட்டியை பற்களால் இழுத்தெடுத்தார்.மெட்டியை மூடையில் வைத்து நகைகளை துாக்கிய போது அது அசையவில்லை. நீ ஏதோ மந்திரம் போட்டிருக்கிறாய். அதனால் அதை துாக்க முடியவில்லை.

அது என்ன மந்திரம் என்று கத்தியை காட்டி மணமகனை மிரட்டினான். மணமகனாக வந்த பெருமாள் திருமங்கையானின் காதில் ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தை சொன்னார்.

மந்திர உபதேசம் பெற்ற பின் திருமங்கையானுக்கு தம்பதிகள் மகாலட்சுமியும் பெருமாளுமாக காட்சி கொடுத்தார்கள்.அது முதல் அவர் ஆழ்வார் ஆனார். பெருமாளை போற்றி பல்வேறு பாடல்களை பாசுரங்களை பாடி புகழ்பெற்றார்.

அப்படி பெருமாளை மிரட்டி அவரது விரலை கடித்து அவனிடம் திருமந்திர உபதேசம் என்ற பெரும் செல்வத்தை நான் பெறவில்லையே சுவாமி. அதனால் நான் இந்த ஊரை விட்டு போகிறேன் சுவாமி என்றாள் பெண் பிள்ளை” என சொல்லிவிட்டு நெகிழ்ந்தார் கிருஷ்ணவேணி.

“அந்த காலத்தில கல்யாணத்துக்கு குமுதவல்லி போட்ட கண்டிஷனை பாரு”

''ஆமா, அதோட திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுக்கூற்றிக்கை போன்ற ஆறு பிரபந்தங்களை பாடியிருக்கார்”

“ம்... இந்த திருமங்கையார் கடவுளோட காலைக் கடிச்சதைக் கேட்டதும் எனக்கு சிலந்தி யானையோட தும்பிக்கைக்குள்ள நுழைஞ்சு கடிச்சது தான் நினைவுக்கு வருது“

“அச்சச்சோ! தும்பிக்குள்ள நுழைஞ்சதா? அப்புறம் யானைக்கு என்ன ஆச்சு?”

“இதோ சொல்றேன். திருவானைக்காவில் சிவனை ஒரு யானை தினமும் காவிரி நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டது. அந்த இடத்தில் ஒரு சிலந்தியும் பக்தையாக இருந்தது. இலைகள், சருகுகள் விழாமல் இருக்க அது தன் சக்திக்கு ஏற்ப சிவலிங்கத்தின் மேல் வலை பின்னியது. ஆனால் யானை அந்த வலையை குப்பை என நினைத்து அகற்றியது. இதனால் சிலந்தி வருந்தியது.

ஒரு நாள் யானையை தடுக்க அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தது. துடித்த யானை தன் தும்பிக்கையை தரையில் அடித்தது. இதனால் எதிர்பாராத விதமாக யானையும், சிலந்தியும் உயிரிழந்தன. இருவரின் பக்தியையும் சிவன் ஏற்றுக்கொண்டார்.

யானைக்கு உயர்ந்த நிலையும் சிலந்திக்கு சோழ மன்னனாக பிறக்கும் வரமும் அளித்தார். அந்த சிலந்தியே மறுபிறவியில் கோச்செங்க சோழ நாயனார் ஆனார். யானைகள் நுழைய முடியாத உயர்ந்த மேடையில் அமைந்த மாட கோயில்கள் கட்டினார்.

கடவுள் பக்தியின் அளவை பார்ப்பாரே தவிர பக்தரின் வலிமையையோ செல்வத்தையோ பார்க்க மாட்டார் என்ற உண்மை புரியுது.

சின்ன சிலந்தியின் அன்பையும் பெரிய யானையின் அன்பையும் சிவன் சமமாகவே ஏற்றார் ” என நெகிழ்ச்சியுடன் முடித்தார் அமிர்தம்.

“திருமங்கையாரும் சரி யானையும் சிலந்தியும் சரி அடியார்க்கும் கடவுளுக்கும் சேவை செய்வதையே முதல் கடமையாக இருந்திருக்கின்றனர். அதனால் மிகப் பெரிய பேறுகளையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.இந்த ரெண்டு கதைகளும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது”

“எப்படியோ 30 ரகசியத்தின் ஆழ்பொருளை தெரிஞ்சுகிட்டேன். கடவுளுடைய அருள் இருந்தால் தான் இந்த கதைகளை கேட்க முடியும். எல்லாமே அவன் அருள் தான்.அடுத்த 31வது ரகசியம் என்ன கிருஷ்ணவேணிம்மா?”

“குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே”.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us