
1947ல் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள வசந்த கிருஷ்ணாபுரத்தில் காஞ்சி மஹாபெரியவர் தங்கி இருந்தார். அங்கிருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள திருவண்ணாமலையை கண்ணாலேயே பார்க்கலாம்.
சிவபெருமானே அண்ணாமலையாக இருப்பதால் திறந்த வெளியில் அமர்ந்து மலையை நோக்கி தினமும் மஹாபெரியவர் பூஜித்து வந்தார். ஒருநாள் பூஜை முடிந்ததும் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று, சுவாமிகளின் மரச் சொம்பில் (கமண்டலம்) உள்ள நீரை குடிக்க வாயை வைத்தது. இதைக் கண்ட பக்தர் ஒருவர் கோபத்தில் நாயின் மீது கல்லை எறிந்தார். அங்கிருந்து குரைத்தபடி ஓடியது.
அதன் குரலைக் கேட்டு மஹாபெரியவர் கண் விழித்தார். 'வேண்டாததை செய்து விட்டாயே' என்றார் அமைதியுடன். அத்துடன் கிராமத்திற்குள் போய் ஊர் மக்களிடம் உணவும், தண்ணீரும் வாங்கி வரும்படி தெரிவித்தார். நாயைக் கல்லால் அடித்த பக்தர் உட்பட தொண்டர்கள் அனைவரும் ஊருக்குள் உணவை பெற்று வந்தனர். அதை ஓரிடத்தில் வைக்கும்படி ஜாடையால் காட்டினார்.
நாயை பார்த்து சமிக்ஞை செய்தார் சுவாமிகள்... என்ன அதிசயம்! அடிபட்ட நாய் மட்டுமல்ல... அங்கு திரிந்த நாய்கள் எல்லாம் ஏதோ உத்தரவுக்குக் கட்டுப்பட்டது போல் அணிவகுத்து வந்தன. குற்ற உணர்வுடன் நின்றிருந்த பக்தரிடம், 'இந்த ஆகாரத்தை நீயே உன் கையால் கொடு; வருத்தப்படாதே' என்றார் வாஞ்சையுடன். அவரும் உணவை பரிமாற அவை வயிறார சாப்பிட்டன.
எல்லா உயிர்களும் கடவுளின் வடிவம் எனச் சொல்வதில் பயன் இல்லை. அதை செயல்படுத்த வேண்டும் என்பதற்கு இது உதாரணம்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்லுங்கள்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com