தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 22

சித்தர்களின் விளையாட்டு - 22

சித்தர்களின் விளையாட்டு - 22


ADDED : மார் 19, 2026 02:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 02:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமதேவர்

நாரதர் புதிய கலகத்தை ஆரம்பித்தார். “மகேஸ்வரா... இந்த பாரத தேசத்தில் ஏராளமான சித்தர்கள் இருக்கிறார்கள். வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் ககன குளிகையை (மூலிகையால் செய்த மாத்திரை) உட்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கின்றனர். அப்படியானால் அவர்கள் எந்த கடவுளை வணங்குகிறார்கள்?” எனக் கேட்டார்.

புன்னகைத்த மகேஸ்வரர், “சிவனை வணங்குபவர்களே சித்தர்கள்...” எனச் சொல்லி நாரதரை கோபத்துடன் பார்த்தார் பார்வதி.

“மன்னியுங்கள் பார்வதி. மதத்தால் சித்தர்கள் பிரிந்து கிடந்தார்களா என்பதை அறியவே கேட்டேன்” எனக் கூற மகேஸ்வரன் புன்னகைத்தார்.

“எந்நாட்டவருக்கும் இறைவா என்றே சிவபெருமானை வணங்குகின்றனர். ஒவ்வொருவரும் தாங்கள் வணங்கும் கடவுளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பூவுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்பவர் எவராயினும் அவரும் கடவுளே. எல்லா மதத்தினரும் சித்தர்களை வணங்குகின்றனர். இதுதான் சிவ தத்துவம். அறிந்து கொள்ளுங்கள்” என பார்வதி விளக்கினார்.

“மகேஸ்வரரே! இதை தாங்கள் கூற நான் கேட்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்றார் நாரதர்.

ராமதேவர் நாகை மாவட்டத்தின் கடலோர பகுதியில் வாழ்ந்தார். தினமும் சிவபூஜை செய்த ராமதேவர் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு, தன்னுடைய ஊரிலும் காசி விஸ்வநாதரை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என நினைத்தார்.

நாகை துறைமுகத்தில் அரபு நாடுகள், சீனாவில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கிருந்த மூலிகைகளை வாங்குவதையும், அங்கிருந்து தாங்கள் கொண்டு வரும் மருந்து பொருட்களை விற்பதையும் பார்த்துக் கொண்டே இருந்தார். இதனால் மருத்துவத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

புலத்தியர் சித்தரை மானசீக குருவாக ஏற்று முறையான யோகப்பயிற்சிகளை கற்றுத் தேர்ந்தார். விடாமுயற்சியாலும், தவ ஆற்றலாலும் எளிதில் சமாதி நிலை அடையும் ஆற்றல் பெற்றார். ராமதேவர் அடிக்கடி சமாதி நிலைக்குச் செல்வதை கேள்விப்பட்ட போகர், ராமதேவரை அழைத்து “எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி கண்ட பின்னரே சமாதி நிலை அடைய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடிக்கடி சமாதி நிலை சென்று வருவதால் இந்த மக்களுக்கு என்ன பயன்? ஆகவே மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்து, பின்னர் சமாதி என்னும் முக்தி பெற வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.

போகரின் ஆணைப்படி ராமதேவர் சதுரகிரி மலையில் தங்கி அட்டாங்க யோகம், அட்டமா சித்தி கற்றுத் தேர்ந்தார். இருந்தாலும் அவருடைய மனதில் சிறு வயது முதலே நினைத்திருந்த காசி விஸ்வநாதரை தான் வசிக்கும் ஊரில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

ஒருநாள் காசி விஸ்வநாதரை மனதில் நினைத்தபடி தவம் மேற்கொண்ட ராமதேவர் கண்விழித்த போது காசியில் இருந்தார். லகிமா என்னும் சித்தி மூலம் உடலை லேசாக மாற்றி, தாம் நினைக்கும் ஊர்களுக்கெல்லாம் பயணம் செய்யும் ஆற்றல் சித்தர்களுக்கு உண்டு. அந்த ஆற்றல் ராமதேவருக்கு கிடைத்ததால் காசியை வந்தடைந்தார்.

அங்கே கங்கையில் நீராடி விஸ்வநாதரை வணங்கிய போது சிவன் அவர் முன்பு காட்சியளித்தார். வணங்கிய ராமதேவர் “நாகப்பட்டினத்திலும் எழுந்தருள வேண்டும்” என வேண்ட, அந்த நொடியிலேயே ராமதேவரின் முன் சிவலிங்கம் தானாகத் தோன்றியது.

மகிழ்ச்சியடைந்த ராமதேவர் விஸ்வநாதரை வழிபட்ட பின் தான் வசித்த நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். அங்கு காயரோகனம் என்ற இடத்தில் காயாரோகணேசுவரர் என்னும் பெயரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கி, தியானம் செய்தார்.

ஒருநாள் ராமதேவர் முன்பு போகர் தோன்றினார்.

“நீண்டநாள் நோயின்றி வாழச் செய்யும் அரிய கற்ப மூலிகைகள் சதுரகிரி மலையில் உள்ளன. அவற்றை கண்டறிந்து மக்களுக்கு பயனுள்ள சேவை ஆற்றுங்கள்” எனக் கட்டளையிட்டார்.

மீண்டும் சதுரகிரி வந்த ராமதேவர் பல்வேறு கற்ப மூலிகைகளை ஆராய்ச்சி செய்து வைத்திய காவியம், பரிபாஷை, தண்டகம், வைத்திய சூத்திரம், நிகண்டு, கலை ஞானம், அட்டாங்க யோகம், முப்பு சூத்திரம், சிவயோகம், பாரஞான கேசரி, வாத சூத்திரம், பக்கனி, சவுக்காரம் போன்ற மருத்துவ நுால்களை இயற்றினார்.

சதுரகிரியில் ராமதேவர் வனம் என்ற அரிய மூலிகைகள் நிறைந்த காட்டை உருவாக்கினார். இவர் எழுதிய பூஜாவிதி என்ற நுால் ஞானமார்க்கத்தை அடையும் வழிகளை விளக்குகிறது.

ககன குளிகை உட்கொண்டு அரபு நாடு சென்றடைந்தார். மூலிகைகளே இல்லாமல் பாலைவனமாக காட்சியளித்த அரபு நாட்டில் மூலிகைகள் இல்லாமல் எப்படி மருத்துவம் செய்கிறார்கள் என வியந்தார்.

அப்போது அவரைக் கண்ட அரபு நாட்டு மக்கள் தங்கள் நாட்டில் யாரோ ஒரு அந்நியர் வந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டனர். அவரை கொல்லவும் முடிவு செய்தனர்.

ஆனால் ராமதேவரோ சற்றும் கலங்காமல் “பல்வேறு மலைகளையும், குகைகளையும், நாடுகளையும் கடந்து நான் இங்கு வந்ததே எங்கள் பாரத தேசத்தின் மூலிகைகளை தங்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தான்” எனக் கூற அவர்கள் பணிந்து வணங்கினர்.

அரபு மக்களின் நோய்களை குணமாக்கி புகழ் பெற்றார். அரபு நாட்டினர் அவரை 'யாகோபு' என அழைத்து, உணவு வழங்கி மருத்துவக் குறிப்புகளை கற்றனர். அதே போல இவரும் அரபு மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். அரபு மொழியில் பல மருத்துவ நுால்களை எழுதினார்.

பாலைவனத்தில் விளையும் அரிய மூலிகைகளை கண்டறிந்து ஞானத்தால் கற்ப மருந்தாக மாற்றினார். பின் அங்கேயே சமாதி நிலையை அடைந்து பத்து ஆண்டுகள் கழித்து வெளியே வரும் போது அந்த பாலைவனம் சோலைவனமாக மாறும் எனக் கூறினார். அதே போல் 10 ஆண்டுகள் கழித்து வெளியே வந்து பல்வேறு காயகற்ப மூலிகைகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் அங்குள்ளவர்கள் பாலைவனம் சோலைவனமாக மாறி விடும் எனக் கூறியதை நம்பாமல் இவரை ஏளனமாக பேசியதால் இனி இங்கு நான் வரப்போவதில்லை.

இந்த சமாதியே நான் இங்கு இருக்கும் கடைசி சமாதி எனக் கூறி மீண்டும் சமாதி நிலைக்குச் சென்றார். அவரை ஏளனமாக பேசியவர்கள் நோய் வாய்ப்பட்டனர். மீண்டும் சமாதியில் இருந்து தன்னை குணப்படுத்துவார் என அவர்கள் காத்திருக்க 30 ஆண்டுகள் கழித்து இவர் வெளியே வந்தார். அவர்களின் நோயை குணப்படுத்தி 'சித்தி பெற்றவர்களை ஏளனமாக பேசுவது கூடாது' என அறிவுறுத்தி நாடு திரும்பினார்.

மதுரை அழகர்மலையில் அழகர் வனத்தை மூலிகை வனமாக மாற்றினார். பின் அங்கேயே மலை உச்சியில் முக்தியடைந்தார். நாரதர் வியப்புடன், “பாரத தேசத்தின் தொன்மையான சித்த மருத்துவம் அரபு நாடுகள் வரை பெருமை பெற்றுள்ளதா?” எனக் கூற பார்வதி புன்னகைத்தாள்.

மகேஸ்வரன் தொடர்ந்தார். “நாரதரே! இங்கே நம் முன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் நந்தியும் ஒரு சித்தர்தான். யாம் அவரை சிலையாக்கிய கதை தெரிந்தால் இன்னும் வியந்து போவீர்கள்” எனக் கூற நாரதர் ஆர்வமானார்.

- விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us