தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 37

சித்தர்களின் விளையாட்டு - 37

சித்தர்களின் விளையாட்டு - 37


ADDED : ஜூலை 23, 2026 09:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 09:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிண்ணாக்கீசர்

“மகேஸ்வரா! பக்தர்கள் அலகு குத்துதல், காவடி துாக்குதல், நெருப்பு மிதித்தல் என நேர்த்திக்கடன் செய்வதுண்டு. இதன் மூலம் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் தன் கையில் உள்ள எழுத்தாணியால் நாக்கை குத்திக் கொண்டாரா? வியப்பாக உள்ளதே. சித்தர்கள் எதற்காக தங்களை வருத்திக் கொள்கிறார்கள்”என நாரதர் வணங்கி நின்றார்.

பார்வதி புன்னகைத்தபடி, “என்ன நாரதரே! எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் கேள்வி எழுப்புகிறீரா?” என்றார். அதற்கு நாரதர், “தாயே! மன்னியுங்கள். சித்தர்களை மக்கள் வணங்குகிறார்கள். ஆனால் அவர்கள் கூறிய வாழ்க்கை முறைகளை பின்பற்ற மறந்து விடுகிறார்கள்.

மக்கள் நெறி தவறும் போது அதை சுட்டிக் காட்ட யாராவது வேண்டுமல்லவா? அப்படித்தான் பக்தர்கள் வாழ்க்கை முறைகளை மீறி தவறு செய்யாதே; தர்மத்தை மறக்காதே என சுட்டிக்காட்ட சித்தர்கள் அவதரித்தனர். அவர்களை பற்றி தங்கள் வழியாக சாமானிய மக்களுக்கும் தெரிய வேண்டுமல்லவா! என் வார்த்தைகளில் தவறிருந்தால் மன்னித்தருள்க” என பணிந்து நிற்க மகேஸ்வரன் சொல்ல ஆரம்பித்தார்.

விஷ்ணுபக்தையான ஒரு பெண் இருந்தார். திருமணம் செய்யாத அவர், விஷ்ணு தலங்களுக்குச் சென்று பாடுவார். ஒருநாள் கோயிலின் அருகிலுள்ள மரப்பொந்தில் இருந்து அழுகுரல் கேட்டது.

அருகில் உள்ளவர்களிடம் இந்த பொந்தில் குழந்தை இருக்கிறது, வாருங்கள் காப்பாற்றுவோம் என்றாள். அவர்களோ, இந்த பொந்துக்குள் பாம்பு குடியிருக்கும். குரல் கேட்பது உனக்கு பிரமையாக உள்ளது என்றனர். நாட்கள் செல்லச் செல்ல குழந்தையின் அழுகுரல் தீவிரமானது. ஒருநாள் அந்த பெண் துணிந்து முடிவெடுத்து, பொந்தை துளாவினார். பொந்தின் உள்ளே இருந்து ஆண் குழந்தை வெளியே வந்தது.

மகிழ்ச்சி அடைந்த பெண், கடவுள் தனக்கு வரமாக தந்ததாக எண்ணி 'கோபாலா' என அழைத்து அந்த குழந்தையை வளர்க்கத் தொடங்கினார். கோயிலில் கிடைக்கும் அன்னதானம், பிரசாதத்தை சாப்பிட்டு இருவரும் வாழ்ந்தனர்.

விஷ்ணுவின் பெருமையை போற்றும் பாடல்களை குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். நாட்கள் செல்ல செல்ல அந்த குழந்தையால் பேச முடியவில்லை. பிறவியிலேயே குழந்தையின் நாக்கு பின்பக்கம் ஒட்டிக் கொண்டிருப்பதை கண்டார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.

கடவுள் அருளால் மட்டுமே குழந்தை வளர வளர பேச்சு வரலாம் என அனைத்து மருத்துவர்கள் சொல்ல கண்ணீர் விட்டு அழுதாள். ஆனாலும் மனம் தளராமல் அந்த குழந்தைக்கு பாடல்களை கற்றுக் கொடுத்தார். அந்த குழந்தையும் பேச்சு வராவிட்டாலும் தனது கையில் எழுத்தாணியை பிடித்துக் கொண்டு பாடல்கள் எழுத ஆரம்பித்தது. பெண்ணுக்கோ மகிழ்ச்சி. தான் பாடப்பாட தன் குழந்தை அதை எழுதுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

தாயும் மகனும் விஷ்ணுவின் கோயிலில் அமர்ந்து பாடல்களைப் பாடி யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர். குழந்தையும் சற்று வளர்ந்து சிறுவன் ஆனான். ஆனாலும் தாயைப் போல் சிறுவனால் பாட முடியவில்லை. ஒருநாள் தாய் வணங்கியவாறே முக்தியடைந்தாள். அந்த சிறுவனோ தாய் சொல்லிக் கொடுத்த பாடல்களை எல்லாம் பாட முயன்றான்.

பிறவியிலேயே நாக்கு பின்பக்கம் ஒட்டியிருந்ததால் அந்த சிறுவனால் பாடமுடியவில்லை. அதனால் மனம் வருந்திய அவன் ஒவ்வொரு முறை பாடும் போதும் தன் கையில் இருந்த எழுத்தாணியால் தன் நாக்கை குத்திக் குத்தி அங்கே ஒட்டிக்கொண்டிருந்த பின் நாக்கை கொஞ்சம் கொஞ்சமாக போக்க ஆரம்பித்தான். எழுத்தாணியால் நாக்கை குத்திக் கொண்டே பாடியதால் ரத்தம் வடிந்து நாக்கு புண்ணாகியது. ஒட்டிய நாக்கு நீண்டு, பிரச்னை நீங்கி, குரல் வளம் பெற்றான்.

தாய் தன்னை கண்டெடுத்த அந்த மரப்பொந்திலேயே அமர்ந்து தினமும் தவம் செய்ய ஆரம்பித்தார். அச்சமயம் அங்கு வந்த பாம்பாட்டி சித்தர் சிறுவனை பார்த்து “உனது நாக்கு பின்பக்கம் ஒட்டியிருந்ததால் பிண்ணாக்கீசர் என்றும், எழுத்தாணியால் நாக்கை குத்திப் புண்ணாக்கியதால் புண்ணாக்கீசர் என்றும் அழைக்கப்படுவாய்” என ஆசியளித்தார். சீடனாக ஏற்று மருத்துவம், வாதம், யோகம், ஞானம் கற்றுக் கொடுத்தார்.

பாம்பாட்டி சித்தரின் உபதேசம் கேட்டு அவரிடம் தீட்சை பெற்று அட்டமாசித்திகளை கற்று தேர்ந்தார். தன் உடலை சுருக்கி, அதே பொந்திலேயே வாழ்வதும், பின்னர் வெளியே வந்து விஷ்ணுவை பாடுவதுமாக இருந்தார். பிண்ணாக்கீசரை வணங்கிய மக்களின் கவலை தீர்ந்தது. அவர் அளித்த பிரசாதம் நோய்களை குணமாக்கியது.

தகரத்தை தங்கமாக்கும் ரசவாத வித்தையிலும், இளமையை நீடிக்கும் காயகற்பக் கலையிலும் சிறந்து விளங்கினார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு கேரளா நாங்கனாச்சேரியில் தவமிருக்க ஆரம்பித்தார். நாடிசாத்திரம் என்ற மருத்துவநுால், மெய்ஞானம், ஞானப்பால், முப்புச்சுண்ணம், செயநீர் போன்ற நுால்களை எழுதினார்.

ரசவாத கலையில் சிறந்து விளங்கிய அவரிடம் பலர் தங்களை சீடராக ஏற்றுக் கொண்டு ரசவாதத்தை கற்றுத் தர வேண்டினர். அவர்களின் சுயநலத்தை புரிந்து கொண்ட பிண்ணாக்கீசர், “குறுக்கு வழியில் பணம் சேர்த்தாலும் உடலை விட்டு உயிர் நீங்கினால் உங்களுடன் கோவணம் கூட வராது. அப்படியிருக்கும்

போது ஏன் பொருளாசை பிடித்து அலைய வேண்டும். தங்களை சீடர்களாக ஏற்க முடியாது” என மறுத்தார்.

இதனால் கோபம் கொண்ட அந்த ஊர் மக்கள் அவரது ஓலைச்சுவடிகளைப் பறித்து அவரை கொல்லத் திட்டமிட்டனர். இதை அறிந்த பிண்ணாக்கீசர் அட்டமாசித்தியால் தன் உருவத்தை சிறியதாக்கி ஒரு மரப் பொந்துக்குள் தியானம் செய்ய ஆரம்பித்தார். பிண்ணாக்கீசரைத் தேடி மக்கள் அலைந்தனர்.

மக்களின் சுயநலத்தை எண்ணி வருந்திய பிண்ணாக்கீசர் யார் கண்ணிலும் படாமல், மரப்பொந்திலேயே தங்கி தவம் இருந்தார். இதையறிந்த மக்கள் தங்களின் தவறை எண்ணி வருந்தி பிண்ணாக்கீசர் தவமிருக்கும் மரத்தை வணங்க ஆரம்பித்தனர்.

அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்ட பிண்ணாக்கீசர் துால ரூபமாக காங்கேயம் சென்னிமலையை அடைந்தார். மலை உச்சியில் வேல்கள் சூழ தவமிருந்தார். பின்னர் அங்கிருந்த சித்தர் மச்சமுனியை வணங்கி ஆசி பெற்றார். சேரநாட்டு மக்கள் அவரை அன்புடன் “தன்னாசி அப்பர்” என அழைத்தனர். பின்னர் பெரியநாயக்கம் பாளையம் செல்வபுரத்தில் தவமிருக்கும் கோலத்தில் வணங்கியபடி முக்தி அடைந்தார்.

“மகேஸ்வரரே! தாங்கள் அறிந்து கொண்ட ரகசியம் அனைத்தும் நல்லவர்களுக்கே போய் சேர வேண்டும் என்பதில் சித்தர்கள் உறுதியாக இருந்தனர். அதற்கு நெருக்கடி ஏற்பட்டால் தங்களை அழிக்கவும் தயங்கவில்லை. சித்தர்களின் தியாகம் போற்றத்தக்கது என்பதை எங்களுக்கு புரிய வைத்த தங்களின் பாதம் பணிகிறேன்” என்றார் நாரதர்.



- விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us