sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 15

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 15

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 15

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 15


ADDED : செப் 27, 2024 09:08 AM

Google News

ADDED : செப் 27, 2024 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலஞ்சி முருகன்

பேரன் யுகன் தென்காசிக்கு போயிருந்ததால் வீடே வெறுச் என இருந்தது. அவன் இருந்தால் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பான். கொள்ளுப் பேரன் அமுதனோ பள்ளிக்குச் சென்று விட்டான்.

தேவந்தியும், பாட்டியும் எவ்வளவு நேரம் தான் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பர். தோரணமலை முருகன் கோயிலுக்கு யுகனை போகச் சொன்னோமே... போனானா தெரியவில்லையே என பாட்டி கேட்க தேவந்தி குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனோ, 'தோரண மலைக்கு நண்பர்களுடன் சென்றேன். மாலையில் பேசுகிறேன்' என தகவல் அனுப்பினான். 'எப்படியோ தோரணமலை முருகனை தரிசிக்க கடவுளின் அருள் கூடி வந்திருக்கு' என பாட்டி மகிழ்ந்தாள்.

சொன்னபடியே அலைபேசியில் தொடர்பு கொண்ட யுகன் மனைவி, குழந்தையிடம் பேசி விட்டு பாட்டியிடம் வந்தான்.

“என்னப்பா… எப்படி இருக்க, பிரயாணம் எப்படி இருந்தது. சாப்பிட்டாயா?” என பாட்டி விசாரித்தாள்.

“சாப்பிட்டேன் பாட்டி. நீ சொன்னபடியே நாங்க தோரணமலைக்கு போயிட்டு வந்தோம். மலை ஏற ஏற உற்சாகமாக இருந்தது. மூலிகை காற்று புத்துணர்ச்சி தந்தது. நீ சொன்ன உண்மை புரிஞ்சது. வேலையால ஏற்பட்ட நெருக்கடி, மன அழுத்தம் காணாமல் போச்சு. சுனை நீரில் குளிச்சது மனசுக்கு நிறைவா இருந்தது. என் நண்பர்களும் உனக்கு நன்றி சொல்லச் சொன்னாங்க. அப்புறம் நாளைக்கு ஒரு கோயில் போகச் சொன்னியே, அது என்ன கோயில்னு சொல்லு. போக முடியுதான்னு பார்ப்போம். என் நண்பர்களும் ஆர்வமா இருக்காங்க.”

“குற்றாலத்தில குளிச்சிட்டு வேலைக்கு போங்க. பக்கத்தில இருக்கிற இலஞ்சி முருகன் கோயிலுக்கு சாயந்திரமா போகலாம். தென்காசிக்கு அருகிலுள்ள இலஞ்சியில் அமைந்த அழகான கோயில் அது. திரிகூட மலையடிவாரத்தில் முனிவர்களான கபிலர், துர்வாசர், காசிபர் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மும்மூர்த்திகளில் யார் முதல்வர் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.

காசிபரோ படைக்கும் கடவுளான பிரம்மா என்றும் துர்வாசரோ திருமாலே என்றும் கபிலரோ சிவனே என்றும் சொன்னார்கள். அப்போது முருகப்பெருமானை வணங்கி தங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டுகிறார் துர்வாசர். அதை ஏற்ற முருகன் ஒரு முகமும் நான்கு கைகளும் கொண்ட கோலத்தில் பிரம்மா, திருமால், சிவன் இணைந்த மும்மூர்த்தியாக காட்சியளித்தார். அப்போது 'நானே மும்மூர்த்திகளின் வடிவம். உலகத்தின் அகப்பொருளும், புறப்பொருளும், கருப்பொருளும், உரிப்பொருளும் நானே' என அசரீரி ஒலித்தது. அதே கோலத்தில் இங்கு எழுந்தருளிய இவர் 'வரதராஜ குமாரன்' என அழைக்கப்படுகிறார்.”

“முருகர் மும்மூர்த்திகள் சேர்ந்த வடிவமா? புதுமையா இருக்கே”

'மு' என்றால் முகுந்தன், அதாவது பெருமாள். 'ரு' என்றால் ருத்ரன், அதாவது சிவன், 'க' என்றால் கமலன் அதாவது பிரம்மா. ஆக முருகா என்றால் மும்மூர்த்திகளை வழிபட்ட பலன் கிடைக்கும். இப்பொழுதும் இலஞ்சி கந்தசஷ்டி விழாவில் முதல் நாள் பெருமாளாகவும் இரண்டாம் நாள் சிவனாகவும் மூன்றாம் நாள் பிரம்மனாகவும் சுவாமி காட்சியளிக்கிறார்”

“ஓஓஓ”

“இந்த இலஞ்சி முருகனை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். இந்த கோயில் சித்ரா நதிக்கரையில இருக்கு. இங்கு அகத்தியர் மணலில் உண்டாக்கிய சிவனுக்கு இருவாலுக நாதர் என்பது திருநாமம்.

இமயமலையில் நடந்த சிவன், பார்வதியின் திருமணத்தைக் காண உலகமே குவிந்தது. வடக்கு திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவனின் கட்டளையால் அகத்தியர் தெற்கு நோக்கி பொதிகை மலையிலுள்ள குற்றாலத்துக்கு வந்தார். அப்போது குற்றாலநாதர் கோயில் பெருமாள் கோயிலாக இருந்ததால் அகத்தியரை உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே அவர் சித்ராநதியில் நீராடி வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். அதுவே 'இருவாலுக நாதர்' எனப்படுகிறது. ஆனாலும் வந்த வேலை முடியவில்லை என கவலையில் அகத்தியர் பிரார்த்தித்தார்.

அப்போது முருகன் காட்சியளித்து, 'வைணவ வேடத்தில் குற்றாலம் செல்லுங்கள். அங்குள்ள பெருமாளை குறுகச் செய்து சிவலிங்கமாக(குற்றாலநாதர்) ஆக்குங்கள்' என வாக்களித்தார். இதைக் கேட்ட அகத்தியரும் அவ்வாறே செய்தார். அதனாலேயே இலஞ்சி முருகன் பிரச்னைகளை தீர்ப்பவராக விளங்குகிறார். 'முருகா நீயே துணை' என வருபவருக்கு வழிகாட்டுகிறான்”

“ஆமா யுகா... இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு. அது மட்டுமில்ல, இந்த இலஞ்சி என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்களுடைய கவி பாக்களில் பயன்படுத்திருக்காங்க. 'இலஞ்சியில் வந்த இளைஞன் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த தலத்தைப்பற்றி குறிப்பிடுகிறார். இந்த ஊரில மா, பலா, வாழை, கமுகு, தென்னை வயல்கள் சூழ்ந்து இயற்கை வளத்தோட காட்சியளிக்கிறது”

“ஆமாம் பாட்டி, இந்த ஊரே ரொம்ப பசுமையா தான் இருக்கு. நம்ம ஊர்ல எங்க பார்த்தாலும் கட்டடங்களா இருக்கும். இங்க திரும்பின பக்கமெல்லாம் பச்சை பசேல்னு இருக்கு. பார்க்க பார்க்க கண்ணுக்கு குளுமையா இருக்கு''

“இந்த முருகப்பெருமானும் கண்ணுக்கு அழகிய இளமை கோலத்தில் நமக்கெல்லாம் காட்சி தருகிறார். போய்ப் பாரு உனக்கும் அந்த அற்புதம் தெரியும். அது மட்டுமில்ல இந்த கோயில் மகுட ஆகம முறைப்படி கருவறை, அர்த்தமண்டபம், மணிமண்டபம், மகா மண்டபம் போன்ற அங்கங்களை கொண்டு அமையப் பெற்றிருக்கு. திருவனந்தல் விழா பூஜை, கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என ஆறுகால பூஜைகள் நடக்குது. இப்பகுதியை முன்பு தொண்டைமான் மன்னர் ஆட்சி செய்தார். இதற்கு சாட்சியாக கோட்டைக்கிணறு, யானை கட்டிய கட்டுத்தறி, தொண்டைமான் குளம் இன்றும் உள்ளன.”

''சரி பாட்டி, பள்ளிக்கூடத்தில திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் படிச்சதா ஞாபகம்”

“பரவாயில்லையே, ஞாபகம் வச்சிருக்கியே. கவிராஜ பண்டாரத்தையா எழுதிய நுால் இலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ். 'வேலில் மட்டும் சினத்தை ஏந்தி இலஞ்சியில் நிற்கும் எம் தேவா... சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே' என அழகான பாடல் ஒன்று உண்டு. அது நினைவில் இருக்கு. மணல் வீடுகளை கலைத்து விட்டு நிலையான மோட்ச வீட்டை நோக்கி செலுத்துவது தான் கடவுளின் திருவிளையாடல் என்பதுதான் இதன் கருத்து”

“இலஞ்சி முருகன் கோயிலுக்கு நாளைக்கு போயிட்டு வர்றேன்”

“சரி யுகா. நல்லதே நடக்கும். சரிப்பா ரொம்ப நேரம் ஆயிடுச்சு, நீ சாப்பிடு”

“சரி பாட்டி. நீங்களும் சாப்பிட்டு துாங்குங்க.” என்றபடி அலைபேசியை அணைத்தான் யுகன்.



--இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us